சிறகிருந்தும் பறக்க ஆசையும், கனவுகளும் இருந்தும் பறக்க முடியா ரோஹனையும் அர்ஜுனையும் சுற்றி நகர்கின்ற கதை. றோஹன் பதினேழு வயதான , அந்த வயதுக்கே உரிய கிண்டல் கேலியென எல்லாமும் நிறைந்த ஒருவன். ரோஹனும் அவனின் நண்பர்களும், சுவறேறி படம் பார்க்கச் சென்றதனால் பள்ளியில் இருந்து நீக்கப் படுகிறார்கள்.ஜாம்ஷெட்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தவுடன் ரோஹனுடன் சேர்த்து நமக்கும் பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. ரயில் நிலையத்தில் வந்திருந்த தனது அப்பாவை வேற்று மனிதாய் பார்க்கும் ரோஹனின் கண்களில் தெரிகிறது, கண்டிப்பான அப்பாவின் உருவம். பிறகு தான் தெரிகிறது மகனைத் தந்தைப் பார்த்தே எட்டு வருடங்கள் ஆகின்றதென்று. இதைத் தெரிந்தப் பின் 'என்ன அப்பா இவர்' எனத் தோன்றுகிறது.
வீட்டிற்கு சென்ற பின் அதிர்ச்சியின் அடுத்த கட்டமாய், ரோஹனின் அறையில் ஒரு 5 வயது சிறுவன் அர்ஜுன். அப்பாவிடம் விசாரித்ததில் அர்ஜுன் தனது தம்பியென்று தெரிகிறது. ரோஹனின் அம்மா இறந்த பின் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால் அதுவும் நிலைக்கவில்லையெனவும் தந்தை சொல்கிறார். தனக்கு தெரியாமல் தனக்கு ஒரு தம்பி இருக்கிறான் என்பதில் தொடங்குகிறது ரோஹனின் கூண்டுப் பயணம். கொடுமையின் உச்சக்கட்டமே பெத்த மகன்கள் தன்னை அப்பா என்று அழைக்காமல் 'சர்' என்று தான் அழைக்க வேண்டும் என கொடுரத் தந்தை ஆணையிடுகிறார். வீட்டில் அவருக்கு மட்டும் தான் கேள்வி கேட்க அதிகாரமுண்டு. இலக்கியம் படிக்க விருமும் ரோஹனை தனது ஃபாக்டரியில் காலை வேலை செய்யும் படியும் மதியம் பொறியியல் கல்லூரியில் சேர்த்து விடுகிறார். அவருடன் ஓட்டப் பந்தயத்தில் ஓடி எப்படி அவரை வெல்கிறான் என்பது தான் கதை. பார்க்கும் நமக்கே அந்த வீட்டில் இருந்து எப்பொழுது தான் வெளிவருவோமென ஒவ்வொரு காட்சியும் வடிவமைக்கப் பட்டுள்ளது.
5 வயதேயானாலும், அடி மேல் அடி வாங்கி சிரிக்கக் கூட மறந்திருந்திருந்தான் அர்ஜுன். சாவி கொடுத்த பொம்மையென அப்பாவின் கட்டளைகளுக்கு உட்பட்டு ஒரு வட்டத்தில் சிக்கியிருந்தான். ரோஹனின் வருகைக்குப் பின் பேச ஒரு ஆளாவது கிடைத்தானனென தன் தந்தைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் அவ்வப்பொழுது சொல்வான். ஆரம்பத்தில் தந்தை மேலிருந்த வெறுப்பை அர்ஜுன் மீது காட்டினாலும், நாளடைவில் இருவரும் நண்பர்கள் ஆகின்றனர். குறைவான வசனங்களானாலும் தனது சுட்டி நடிப்பால் படம் முடிந்த பின்னும் கண்களில் அர்ஜுனின் முகம் நிழலாடுகிறது.
ஒரு கட்டத்தில் தனது இந்த கொடுரத்தனத்திற்கு தனிமையைக் குற்றம் சாட்டி தனது குற்றத்தை ஒப்புக்கொள்கிறார் தந்தை. திருந்திவிடுவார் , படம் முடியுமென பார்க்கையில் அடுத்த திருப்பமாய் , தான் மறு கல்யாணம் செய்து கொள்ளப் போவதாய் சொல்கிறார். அர்ஜுன் போர்டிங் பள்ளிக்கு செல்ல வேண்டுமென நிர்ணயிக்கிறார். பொறியியல் படிப்பில் தேறாததால் ரோஹனை முழு நேரம் தனது ஃபாக்டரியில் பணி புரிய ஆணையிடுகிறார். மற்றவர் புகழும் தன் எழுத்தை தன் தந்தை உதாசினப் படுத்தும் போதெல்லாம், அவரை எதிர்க்க தைரியமில்லாமல் நொந்து போகிறான் ரோஹன்.
தன்னுடன் பயின்ற நண்பர்கள் மும்பையில் சொந்தமாக ஹோடெல் நடத்துவது தெரிந்து அங்கு செல்வதென ஒரு மனதாய் முடிவெடுக்கிறான். வீட்டை விட்டு ஓடி வருகையில் தன்னை துறத்திவரும் தந்தையை வென்று முதல் வெற்றியோடு புன்னகைக்கிறான். மறு நாள் அர்ஜுன் போர்டிங் செல்ல தயாராகிறான். இதற்கிடையில் ரோஹன், அர்ஜுனிடம் என்னுடம் வருகிறாயா இல்லை தந்தை சொல்வழி போர்டிங் செல்கிறாயா எனக்கேட்கையில் யோசிக்காது உன்னுடன் வருகிறேன் எனச் சொல்லும் போது அன்பின் நிலை தெரிகிறது.
மூவரைச் சுற்றியே கதை நகர்ந்தாலும் அன்பே மையமாக் கொண்டது இந்தப் படம். தந்தைக்கும் ரோஹனுக்கும் 'பொய்' பற்றிய உரையாடல் அருமை. அவ்வப் பொழுது படித்துக் காட்டும் ரோஹனின் கவிதைகளும் கடைகளும் அருமை. ரோஹனை உற்சாகப் படுத்தும் தந்தையின் நண்பர் கதாபாத்திரமும் அருமை, இருந்தும் மூர்க்கதனத்திற்கு முன் அவரால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. புன்னகை மறந்த அர்ஜுன். மூர்க்கத்தனத்தின் முழு உருவமாய் அப்பா.
மூர்க்கனிடமிருந்து விடுதலைப் பெற்று ரோஹனும், அர்ஜுனும் எப்படி பறக்கிறார்கள் என்பது தான் 'உதான்'.
பி.கு: ஜூலையில் 2010 இல் வெளியான இப்படத்தைப் பலரும் பார்த்திருக்கக் கூடும். அன்பின் நிலை குறைந்துக் கொண்டே வரும் சூழலின் நிஜமாய் இந்தப் படம். சமீபத்தில் தான் பார்க்க நேர்ந்தது. இன்னும் பலரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே இந்த பதிவை எழுதுகிறேன். அன்பை நேசிக்கும் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.
நன்றி,
நாணல்