Showing posts with label ரயில். Show all posts
Showing posts with label ரயில். Show all posts

Saturday, 24 March 2012

புத்தகத்தினுள்...

புத்தகத்தினுள் நுழைய முனைந்து
தொட்டுச்செல்லும் காற்றின் முகவரி தேடுகின்றேன்,

காக்கிச்சட்டைப் பெண்ணின் சுவாரசியக் கதைகளை
அவள் தம்பியுடன் அவளறியாது கேட்கின்றேன்,

காதலர் தினக்காகிதங்களோடு தம் கதைகள் சொல்லி
கன்னங்கள் சிவக்கும் எதிர்சீட்டுப்பெண்ணை ரசிக்கின்றேன்,

சற்றுமுன், நண்பருக்கு நானளித்த நாட்குறிப்பை மறந்து
நாட்குறிப்போடிருக்கும் பெண்ணை விசித்திரமாய்ப் பார்க்கின்றேன்,

சற்றே அறிமுகமான பெண்களுக்குள்
பேசக்கிடைக்கும் தலைப்புகளை எண்ணி வியக்கின்றேன்,

கையேந்தும் திருநங்கைக்கு புதுவாழ்வளிக்க
செய்வன எண்ணி காசு கொடுக்க மறுக்கின்றேன்,

பார்வையில்லா வியாபாரியின் கையில் கிடக்கும்
பொருளின் விலையெண்ணி வாங்க யோசிக்கின்றேன்,

விலை மறந்து, பொருள் தரம் மறந்து
பத்திற்கு மூன்றென எந்நிலையம் வரும்வரை கொறிக்கின்றேன்,

இக்கணம் உங்களைத்தழுவும் ஆயாசம்
என்னைத்தொழுகையில் மீண்டும் புத்தகத்தினுள் நுழைகின்றேன்.

நன்றி,
நாணல்