நம் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு வகையில் எல்லாமுமாய் நிறைந்திருப்பது நிச்சயம் ஒரு பெண்ணாகத் தானிருக்கும். அப்படி கடந்த வந்த சில பெண்களைப் பற்றியும் பெண்களின் குணாதிசயங்களைப் பற்றியும் ஒரு குட்டி அலசல் இங்கே, உலக மகளிர் தினத்தைக்(March 8, 2011) கொண்டாடும் பொருட்டு.
*****************
“என்னடா கண்ணு பண்றே… இது என்னது?”
“எ ன் வ ய ல்..”
“எனக்குத் தரியாடா..”
“நோ நோ நோ”
எனத் தன் பிஞ்சுக் கைகளால் வளையலை பிடுங்க வந்த தன் தாயின் கையைத் தட்டிவிடுகிறாள் ஒன்றரை வயதான சுஹாசினி…
மழலையின் சுவடு மாறாது, வித விதமான முக பாவங்களால் சுற்றியிருக்கும் அனைவரையும் தன் பால் ஈர்க்கிறாள் இந்தச் சுட்டிப் பெண். பாலின வேறுபாட்டை மனதால் அறிந்து கொள்ள முடியா வயதிலும், தனக்கு வளையள்கள் மீதும், தன் தாய் அணிந்துள்ள ஆரத்தின் மீதும் ஆர்வம் காட்டுகிறாள் என்பது என்னை ஆச்சரியத்திற்குத் தள்ளியது.
புதிதாய் உலகில் காலடி வைத்து ஒவ்வொன்றாய்க் கற்றுக் கொள்ளும் இந்த பிஞ்சு மனதினுள் பெண்மைக்குண்டான “நகைகள் மீதான ஆசை”யென்னும் கோட்பாட்டைத் திணித்த இயற்கையை என்னவென்று சொல்ல?
*****************
”பாரதி.. தம்பி கூப்பிடறான் பாரு…”
“பாரதி… கடைக்குப் போயி இதை வாங்கி வந்துடும்மா..”
“பாரதி… அப்பாக்கு சாப்பாடு போடு..”
எதற்கெடுத்தாலும் பாரதி தான் பொறுப்பாளியாய் இருந்தால் என் பக்கத்து வீட்டில்…அவளின் பெயரின் விளிப்பை மட்டுமே கேட்ட எனக்கு, பாரதி ஒரு பொறுப்புள்ள குடும்ப தலைவியாய்த் தெரிந்தாள்.நெருங்கி விசாரித்துப் பார்த்ததில், பாரதி ஏழு வயது மட்டுமே நிரம்பிய சுட்டிப் பெண்ணெனத் தெரிந்தது..
வயது வரம்பின்றி பொறுப்புகளைக் கையிலெடுத்துக் கொள்வதும் பெண்மைக்குண்டான அதிசயம் தானோ?
*****************
“Excuse me , காலைல இந்த பஸ் golden flats stopல எத்தனை மணிக்கு வரும்?”
“தெரியாதுங்களே, நான் வேற office, இன்னைக்கு மட்டும் தான் இதுல வரேன்.. நீங்க வேணா இறங்கும் போது driver கிட்ட கேட்டுக்கோங்க..”
“சரிங்க… நான் இந்த office தான், ஆனா, இன்னைக்கு தான் Bangalore ல இருந்து transfer ஆகி வந்தேன்… driver கிட்ட கேட்டுக்கறேன்… thanks ”
இந்த உரையாடலை முடித்ததும் “தெரியாது” என்ற ஒற்றை வார்த்தைப் பதிலுக்கு இத்தனை விளக்கங்களா?
முதல் தடவை தான் பழக்கமெனினும், நிரம்ப பேசுவது பெரும்பாலாக பெண்களின் குணாதிசயம் தானே?
*****************
“என்ன புக் படிக்கறீங்க?”
எதுவும் பேசாமல் அட்டைப் படத்தைக் காட்டினேன் …
“நீங்க எங்க இருக்கீங்க?”
“சென்னைல அம்பத்தூர்”
“அப்ப , இப்ப எங்க போயிட்டு இருக்கீங்க?”
“அரக்கோணத்துல எங்க மாமா வீட்டுக்குப் போறேன்”
இப்படியே என்ன பண்றீங்க, என்ன படிச்சிருக்கீங்க என பல கேள்விகளையும், எதிர் கேள்விகளையும் கொண்ட குட்டி அறிமுகத்திற்குப் பின் மீண்டும் புத்தகத்தினுள் நுழைந்து கொண்டேன், மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்க இடம் தர வேண்டாமென.. தொலைபேசி மணி அழைக்க எடுத்துப் பேசினேன்.. பாட்டியின் உடல் நிலை சரியில்லையென அப்பா சொல்ல, கண்கள் கலங்கி, பாட்டியின் புகைப்படத்தை அலைபேசியின் திரையில் பார்த்தவாறே பாட்டிக்காக பிரார்த்தனையைத் துவங்கினேன்…மீண்டும் அருகிலிருந்த பெண்…
“யாருங்க இவங்க? உங்க பாட்டியா?”
“அஹ் ஆமாம்”
“ஏங்க போட்டோவை ரொம்ப நேரமா பார்த்துட்டு இருக்கீங்க… அவங்களுக்கு உடம்பு சரியில்லையா என்ன?”
கண்கள் கலங்க “ஆமா, இப்ப தான் அப்பா சொன்னார், serious அஹ் இருக்காங்களாம்”
“சரி கவலைப் படாதீங்க, சரியாயிடும்… தைரியமாயிருங்க…” என இதமான புன்னகையைப் பரிசாகளித்தாள்…
அருகில் இருப்பவரின் விஷயத்தினுள் மூக்கை நுழைப்பது என்பது பெண்களுக்கே உண்டான குற்றச்சாட்டு தான்.. இதற்கேற்றார் போல் இருந்த ஆரம்ப நிலை உரையாடல், நான் பகிர்ந்திடாத கண்ணீரைத் துடைத்த போது பெண்மையின் அதிசயத்தை உணர்ந்து, நான் ஒரு பெண்னெபதில் கர்வம் கொண்டேன்…
*****************
”அக்கா , இன்னைக்கு என் கனவுல பூஜா வந்தாக்கா”
“ஹ்ம்ம்ம்… ஏண்டி உன் அக்கா நான், என்னைக்காச்சு உன் கனவுல வந்திருக்கேனா? ஆனா மூணு வருஷமா தெரிஞ்ச பூஜா வந்தாளாம்..” என கடிந்து கொண்டாள் அக்கா..
என்ன சொல்வதென்று தெரியாது.. அக்கா என்கிற முறையில் நான் மறுத்தாலும், தாய்க்கு அடுத்து எனது முக்கிய உறவாக இவள் தான் இருக்கப் போகிறாள். கனவில் வரவைல்லையென ஏன் இப்படி சிறு பிள்ளைத் தனமாக நடந்து கொள்கிறாள், என அவளின் possesiveness யை பரிகசித்துக் கொண்டு, இனி கனவில் வருகின்ற தோழியைப் பற்றி அவளுக்கு சொல்லக் கூடாதென என் வேலைகளை செய்ய ஆரம்பித்தேன்..
சில நேரங்களில் உறவுகளை அழித்தும் விடுகிற, இந்த மாதிரியான possesiveness பெண்களுக்கே உண்டான குணா(அ)திசயங்களில் ஒன்றோ?
*****************
”ஏழு மணியாச்சு எழுந்திரும்மா”
“ஹ்ம்ம்ம்… “
எழுந்திருக்கும் வரை அந்த இடத்தை விட்டு நகராது, எழுப்பிக்கொண்டேயிருப்பாள் பாட்டி.. ஒரு நிமிடம் கூட அமைதியாய் இருக்காது ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டேயிருப்பாள். ஊரிலிருந்து எங்கள் வீட்டிற்கு வருகிறாளென்றாலே, வீடு முழுவதையும் சுத்தம் செய்து வைத்திருப்போம்…வந்த இரண்டு மணி நேரத்தில், இது ஏன் இங்க இருக்கு என எதையாவது எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டிருப்பாள்.. பாட்டி வந்தாலே வீடு சுத்தமாக இருக்கும் என்பது எழுதப் படாத சட்டமாகி விட்டது எங்கள் வீட்டில்.. ஓய்வு நேரம் கிடைத்தால் தூங்கியே பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு பாட்டியின் பெண்மை சொல்லிக் கொள்வதென்ன?
வீட்டில் முக்கியமான ஒருவர் இறந்து விட, வீடே பரபரத்துக் கொண்டிருந்தது எப்படி கிளம்பலாம் என… அந்த இக்கட்டான சூழலிலும் “பின்னாடி கதவை மூடனியா? பால் காரனுக்கு சொல்லிட்டியா? பணம் எடுத்துட்டியா?” என ஒவ்வொன்றாய் ஞாபகப் படுத்திக்கொண்டு என்னையும் அம்மாவையும் விரட்டிக் கொண்டிருந்தாள் பாட்டி..
இப்படி எந்த விஷயமாக இருந்தாலும், எந்த இக்கட்டான நேரமாக இருந்தாலும் செய்யும் வேலையில் ஒரு பூரணத்துவம் கொண்டு வரும் பாட்டிப் போன்றோரின் பெண்மையும், அதிசயங்களில் ஒன்று தானே?
*****************
குடும்ப உறுப்பினர் ஒருவரின் இழப்புக்குப் பின், எல்லாக் காரியங்களையும் முடித்த ஞாயிறு இரவு பத்து மணியளவில்..
இழப்பின் வலி ஒரு பக்கமென, கடமை ஒரு பக்கமென, காலை எழுந்து அலுவலகம், பள்ளி , கல்லூரி செல்ல வேண்டுமேயென வீட்டில் ஒவ்வொருவரும் மூளையில் வீங்கிய கண்களுடன் உறங்கப் போனோம்… மன அயர்ச்சியோடு உடலும் சோர்ந்து இருந்ததால், வெகு நேரம் உறங்கி கடைசி நேரத்தில் பறந்து பறந்து கிளம்பிக் கொண்டிருந்த போது தான் கவனித்தேன், எங்களை விட பல மடங்கு சோகத்திலும், உடல் சோர்ந்தும் இருந்த அம்மா வழக்கம் போல காலை எழுந்து காலை உணவையும், கட்டி செல்ல வேண்டிய மதிய உணவையும் தயாராய் வைத்திருந்தாள் என்று..
இடியே இடிந்து விழிந்தாலும், தன் கடமையை நேரந்தவறாது செய்யும் அம்மாவின் பெண்மையிடமிருந்து, நான் கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம் தானே?
*****************
உலக மகளிர் அனைவருக்கும் என் உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்…
நன்றி,
நாணல்
No comments:
Post a Comment