Tuesday, 8 February 2011

ஒரு கேள்வியும் மூன்று நிகழ்வுகளும்..

சில காலமாய் எனக்குள் எரிச்சலூட்டி வரும் ஒரு விடயத்தைப் பற்றித் தெளிவான புரிதலுக்காக வேண்டி இந்த பதிவை எழுதுகிறேன். என் கேள்வி மிகவும் சிறியது.

பெண் என்றாலே மோகம் தரும் பொருட்களில் ஒன்று என்ற நினைப்பு எப்பொழுது மாறும்?

ஜனனம் தருவிக்கும் தாய் முதல் , தங்கையாய் , உற்ற தோழியாய் நம் அனைவரின் வாழ்விலும் பெண் ஒரு அங்கமாய்த்தானிருக்கிறாள். இருந்தும் அவளின் மென்மையான பெண்மை கேலிகூத்தாக ஆக்கப்படும் போது, இந்த சமுதாயத்தின் மீது எரிச்சலுடனான கோவம் தான் வருகிறது. பெண்ணியம், பெண் விடுதலை என முற்போக்கு சிந்தனையாளர்கள் ஒரு பக்கம் குரலெழுப்பிக் கொண்டிருந்தாலும் உண்மையில் தினசரி வாழ்வில் இந்த குரல்கள் எதிரொலிக்கப்படவில்லையென்று தான் தோன்றுகிறது. எனக்கோ என் தோழிக்கோ நிகழ்ந்தவை வைத்து இந்த பதிவை நான் எழுதுகிறேனா, என்றால், இல்லை என்பது தான் என் பதிலாக இருக்கும், அப்படியிருப்பின் நிச்சயம் என் மனக்குமுறல்களாக என் நட்பின் வட்டத்திலேயே நின்று போயிருக்கும்.


  1. நம் வாழ்வின் அங்கமாகிப்போன தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிவரும் பல விளம்பரங்களில்,தேவைப்படாத இடங்களில் கூட பெண்கள் இருப்பர். சில நேரங்களில், அது அவர்களின் வியாபர யுக்தி எனக் கொள்ளலாம் . ஆனால், வியாபாரத்திற்காக இப்படி ஒரு அட்டூழியம் தேவையா எனத் தோன்றுகிறது சிலவற்றைப் பார்க்க நேர்கையில். உடலின் வியர்வை நாற்றம் என்பது இயல்பே, இயற்கைக்கு மாறாய், அதை மறைக்க வாசனையூட்டும் திரவியம் அடித்துக் கொள்வது இந்நாளில் வாடிக்கையாகிவிட்டது. இந்த பொதுவான ஒன்றை வைத்துக் கொண்டு, ஆண்களின் வாசனைத் திரவியம் பெண்களைக் கட்டுப்பாடற்றதாக்கும் என்பது போன்ற சித்தரிப்புகள் என்ன சொல்ல வருகின்றன என்று தான் தெரியவில்லை. வெறும் வார்த்தையோடு நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை, அதை நிரூபிக்கும் வகையில் ஆணின் வாசம் நுகர்வதற்கு முன், நுகர்ந்த பின் என அந்தப் பெண்ணைக் காட்டும் கோலம், பெண்களைப் பற்றி அவர்களின் மனதில் உள்ள கேவலமான உணர்வின் உச்சக்கட்டமாகவேப் படுகிறது.

  2. தொலைக்காட்சியில் தான் இப்படி என்று புத்தகமாவாவது படிக்கலாம் என்றால் அது இன்னும் வெருப்பூட்டும் வண்ணமாகவே இருந்தது. கவிதை நூல் என்னும் வகையில் பெரிதாக எதுவும் படித்திடாத நான், இந்த ஆண்டு முதலேனும் படிப்போம் என்னும் ஆர்வத்தோடு வாங்கிய, கவிதைகளின் தொகுப்பு ஒன்றை முன்னுரையிலிருந்து படிக்கத் தொடங்கினேன். பல பிரபலங்களின் வாழ்த்துரைகளைப் படித்துக்கொண்டிருக்கையில், ஆர்வ மிகுதியில் கவிதைகள் பக்கம் திருப்பிப் படிக்கத் தொடங்கினேன். ஆரம்ப பக்கங்களில் அவரின் கற்பனையின் வெளிப்பாடான ஒவ்வொரு கவிதையையும் புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தேன். சில பக்கங்களைக் கடந்த பின், ஆண்களின் கவிதை உலகில் நிச்சயம் அடங்கியிருக்கும் பெண்ணைப் பற்றிய வர்ணிப்புகளும், அவள் சார்ந்த கற்பனைக் கவிதைகளும் இடம் பெற்றுக்கொண்டு இருந்தன. வர்ணனைகளின் உச்சக்கட்டமாக பெண்ணின் உடலமைப்பை பற்றியதாக சில கவிதைகள் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருந்த விஷயம் சலிப்பைத் தர ஆரம்பித்தது. எனினும் முன்னுரையில் பல கவிஞர்கள் பாராட்டியிருந்தார்களே, ஒருவேளை அடுத்த தலைப்பின் கீழெனினும் வித்தியாசங்கள் தெரியுமெனப் புரட்டிக் கொண்டேயிருந்தேன். பெண் என்ற பொதுநிலையைத் தாண்டி தாயைப் பற்றிய கவிதைகளிலும் அதே வாடையடிக்க புத்தகத்தை மூடியவள், இன்னும் திறக்கவில்லை. சிற்றிதழில் வெளியான கவிதைகளைப் புரட்டலாமென்றால், அங்கேயும் காமத்தையும் தாயையும் ஒப்பிட்டாற் போன்ற கவிதை. எனக்கு புரியாத ஒன்று இது தான், புனிதமான உறவுமுறையான தாயைப் பற்றி எப்படி கற்பனையாகக் கூட அனாவசிய வார்த்தைகளை உபயோகிக்க முடிகின்றது.

  3. இப்படி ஒன்றுக்கொன்றாய் கூடிக் கொண்டே போக ரூட், ஃபிகர், கரெக்ட் பண்றது போன்ற வார்த்தைகள் இன்னும் எரிச்சலூட்டுவதாகவே அமைந்துள்ளது. இப்படி பேசுவது சகஜமாகிவிட்டது தான். சகஜங்களையும் தாண்டிப் பார்க்கும் போது, புதிதாய் அறிமுகமாகி சில நாட்களாக மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம், இப்படி ஒரு ஆண் பேசுகிறானென்றால் அவளிடம் அவன் என்ன எதிர்பார்க்கிறான் என்று தான் புரியவில்லை. இயல்பாய் பரஸ்பர புரிதலுக்கு பின் வெளிக்காட்டினால் தானே காதலுக்கு மரியாதை. தூண்டுச் சீட்டாய் ஒவ்வொருவர் கையிலும் கொடுத்து விருப்பமுள்ளவர் வாசியுங்கள் என்று சொல்வதற்கு பெயர் என்ன? தான் சந்திக்கும் ஒவ்வொரு பெண்ணிடமும் வார்த்தை ஜாலங்கள் காட்டுவதனால் என்ன நேரப்போகிறது. ஒரு சில காலக் கட்டத்திற்கு பின் இப்படி பேசும் ஆணின் மீதான மரியாதை குறையத் தானே செய்யும்.


மேற்சொன்னவையாவும் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் இடையேயான மெல்லிய இடைவெளியாகவே படுகிறது எனக்கு. இருக்கும் இரு பாலினற்கிடையில் ஒரு வித ஈர்ப்பு இருப்பது இயல்பு தான். பெண்கள் உலகில் ஆண்கள் யாரென புரிந்து கொள்ள விரும்பும் ஆண்களைப் போன்று தான் ,ஆண்கள் உலகில் பெண்கள் யாரென அறிய முயற்சி செய்கிறேன். ”ஆண்களே இல்லாத உலகம் செல்ல வேண்டும்” என்று பெரும்பாலும் ஒரு ஆணிடம் தான் சொல்லிக் கொண்டிருப்பேன். வாதத்திற்கு என வீண் வாக்குவாதங்கள் செய்யாது, என் மனநிலையை புரிந்து விளக்கமளிக்கும் சில ஆண் தோழர்கள் இருக்கின்றனர் என்பது ஆறுதல் தரும் விஷயமாகத்தானிருக்கிறது.இருந்தும் தோழன் என்ற நிலையைத்தாண்டி ஆண் என்று வரும் போது தோழனும் புரியாமல் போவது சில நேரங்களில் நிகழ்கிறது.


ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாடிக்கொண்டிருக்க விருப்பமில்லை எனக்கு. வாழ்வின் ஒவ்வோர் கட்டத்திலும், பெண்களின் உலகில் ஆண்களின் பங்கு பெருவாரியாக நிச்சயம் இருக்கும். அதை இன்னும் முதிர்ந்த புரிதலோடு அணுகவேண்டும் என்பதற்கான துவக்கமே இது.


நன்றி,

நாணல்


4 comments:

sakthi said...

ஆண்களின் வாசனைத் திரவியம் பெண்களைக் கட்டுப்பாடற்றதாக்கும் என்பது போன்ற சித்தரிப்புகள் என்ன சொல்ல வருகின்றன என்று தான் தெரியவில்லை.

அது என்னமோ நிஜம் தான் ஓவரான கற்பனையின் வெளிப்பாடு இது

நாணல் said...

//அது என்னமோ நிஜம் தான் ஓவரான கற்பனையின் வெளிப்பாடு இது//

:( உண்மை தான் சக்தி..
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி...

Vivekanandan said...

1 , நிச்சயம் யோசிக்க வேண்டிய விஷயம்...
மேலாக இந்த விளமபரத்தை எல்லாரும் எதிர்த்தாலும்
வாசனை திரவியம் பயன் படுத்தும் பெரும்பாலனோர் குறைந்த பட்சம் ஒரு முறையேனும்
அந்த திரவியத்தை பயன் படுத்தி தான் இருக்கிறார்கள்.... (உளவியல்! )
we should try to avoid those products (we Includes me too :))...

2 . வார்த்தைகள் எப்போதும் வரம்பு மீறாமல் இருப்பது நல்லது
பெண்களின் அழகை எபோதும் எல்லாரும் பெண்கள் உட்பட ரசிக்கத்தான் செய்கிறோம்
அதை குறிப்பிடும் பொது குறிப்பிட பெண் பூரிபடயலாம் கூனி குறுக கூடாது
(ex : சூப்பர் பிகர் தப்பில்லை(ஹி ஹி ஹி ) , சப்பை பிகர் ரொம்ப ரொம்ப தப்பு )
+ அந்த மாதிரி கவிதைகளை இன்னும் யார் ரசிக்கிறாங்கன்னு தான் புரியல எழுதுறவங்கள தவிர.


3. காதலே ஒவ்வொருத்தர் பார்வையில் ஒவ்வன்ராக இருக்கும் போது அதுக்கு எப்படி மரியாதை செலுத்த முடியும்?
இனக்கவர்ச்சி எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும் அதை ஒன்னும் பண்ண முடியாது...
நினைவில் கொள்க. நமது தந்தையர்களும் பல பெண்களை பார்த்த பிறகுதான் நமது தாயாரை மணந்திருப்பார்!

கடைசியாக உணர்வும் உணர்ச்சியும் ஒன்று தானே (is there any difference?)

நாணல் said...

1. ஒப்புக்கொண்டமைக்கு நன்றி விவேக்... இதை ஒன்னும் பண்ணமுடியாது..பல மாதங்களுக்கு முன்னராக, இதேப் போன்ற இன்னொரு விளம்பரத்தை தடை செய்தனர்..இப்பொழுது இன்னொன்று முளைத்திருக்கிறது... ஒவ்வொருவரின் எண்ணங்கள் மாறினாலன்றி ஒன்றும் செய்ய முடியாது...

2. ர‌சிப்ப‌வ‌ர்க‌ள் இருக்கும் வ‌ரை எழுதுப‌வ‌ர்காளும் இருப்ப‌ர் தானே.. இதையே மாற்றியும் சொல்லிக் கொள்ள‌லாம்...

3.இனக்கவர்ச்சி பற்றி தவறாக சொல்லவில்லையே.. நிச்சயம் இருக்கும் இரு பாலினர்க்கிடையில் கவர்ச்சி இயற்கை தான்... சிலரின் சலிப்பூட்டும் பழக்கங்கள், பெண்கள் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று யோசிக்க்கும் போது தான் எரிச்சலாயிருக்கிறது... :(