Thursday, 15 September 2011

நியான் நகரம்

276709_161999560537544_1105744_n.jpg

நேற்று முன்னிரவில் உன் நித்திலப்பூ மடியில்,

காற்று நுழைவது போல் உயிர் கலந்து களித்திருந்தேன்,

இன்று பின்னிரவில் அந்த ஈர நினவில

கன்று தவிப்பது போல், மனம் கலங்கிப் புலம்புகிறேன்

என்னும் அலைபாயுதேவின் “சினேகிதனே..” பாடலின் வரிகளோடு, மனதில் நகர்வலம் வர தொடங்குகிறது ”நியான் நகரம்

ரணம் சுகம்‘- ஒரு புதிய முயற்சி என்று அறிமுகமானபோது அப்புத்தகத்தை படிக்க ஆவலிருந்தும் படிக்க முயலவில்லை.அதனைத் தீர்க்கும் விதமாக, நியான் நகரம் வெளி வர, நண்பர் வசந்த் மூலம் அவ்வப்பொழுது விவரங்கள் தெரிந்து கொண்டேன்… அவர் எழுதிய ‘நிலவுடன் நான்’ பாடலை அஜீஷின் குரலில் கேட்டப்பிறகு, முழு நாவலையும் படிக்க வேண்டி, அவ‌ரிட‌மிருந்து புத்தகத்தை வாங்கி அலமாரியில் வைத்ததோடு சரி…பாடல்களோடு நாவலைப் படிக்கலாமென ஒத்திவைத்துக் கொண்டேயிருந்தேன்…

நண்பர் ஒருவர் ‘நியான் நகரம்’ பற்றி மின்னஞ்சல் அனுப்ப, என் தங்கை அதை வழிமொழிய, படித்தே தீர வேண்டுமென கையிலெடுத்தேன் நாவலை.வைக்க மனமில்லை, பயணித்த 1.30 மணி நேரம் எப்படி போனதென்றே தெரியவில்லை..இடையில் யாரெனும் தொலைபேசியில் அழைத்துவிடுவாரோ, இல்லை குறுஞ்செய்தி அனுப்பிவிடுவாரோ, நாவல் பாதியில் நின்று விடுமோ என்னும் பதட்டத்துடன் படித்துகொண்டேயிருந்தேன்.. நல்ல வேளை யாரும் இடையில் அழைக்கவில்லை ;)

OCD - Obsessive compulsive Disorder என்பதைப் பற்றி படித்திருக்கிறேன் தவிற பெரிதாக ஆராய்ந்ததில்லை.. இதனால் அவதிப்படும் கதையின் ஹீரோ ‘வினய்’ பற்றி வரும் சிறு பிள்ளைப் பிராயத்து க்ரிக்கெட் நினைவுகள், நகம் க‌டிக்கும் பழக்கமென மிக நுண்ணியமாய் ஆராய்ந்து வினயின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளதாகப் படுகிறது. கதையோட்டத்தில், நேர்மையாக இருக்க விரும்பி வினய் படும் இன்னல்கள், அவற்றில் இருந்து எப்படி முன்னேறுகிறார் என்பனப் போன்ற கதையாடல்களை இயல்பானதாக உணர்ந்தேன்.

வின‌ய்க்கும் ம‌துவிற்கும் காத‌ல் அரும்பும் த‌ருண‌ங்க‌ளையும், அத‌னை இருவ‌ரும் வெளிக்காட்டிக்கொள்ளும் த‌ருண‌ங்க‌ளையும் இய‌ல்பாக‌, மிக‌ அழ‌காக‌ எழுத்தில் வெளிப்ப‌டுத்தியிருக்கிறார் ஷ‌மீர். உண்மைக்கு முக்கிய‌த்துவ‌ம் த‌ரும் வித‌மாக‌ அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ ம‌துவின் க‌தாபாத்திர‌ம், இக்கால‌த்திலும் உண்மையை‌ நேசிக்கும் சில‌ர் இருக்கின்ற‌ன‌ர் என்ற‌ நிம்ம‌தியை த‌ருகிற‌து.

மொத தப்பை மட்டும் செய்யாதே, தப்பு பழகிடும்

ஒருவாட்டி வள‌ஜ்சு கொடுக்க‌ ஆர‌ம்பிச்சா, அப்புற‌ம் திரும்பி நேரா நிக்க‌வே முடியாது

உண்மையை மட்டும் சொல்லு, உனக்காக உண்மையை ’உண்மை மாதிரி’ சொல்லாத. எல்லாத்துக்கும் மேல அடுத்தவன் வயித்துல அடிக்காம உண்மையைச் சொல்லு

போன்ற வ‌சன‌ங்க‌ள், ப‌ல‌த‌ட‌வை ப‌ல‌ரிட‌ம் கேட்டிருந்தும், க‌தையைப் ப‌டிக்கும் பொழுது ப‌ல‌ அர்த்த‌ம் த‌ருவ‌தாக‌ உணர்ந்தேன்.

ம‌க‌ன் செய்யும் த‌வ‌றை சுட்டிக்காட்டாது, அவ‌னுள் இருக்கும் ச‌ரிக‌ளை ம‌ட்டுமே கோடிட்ட‌ வின‌யின் த‌ந்தை முதிர்ந்த‌, பொறுப்பான‌ அப்பாவாக‌ க‌ண்முன் விரிகிறார்.

உண்மை, புதுமை, ய‌தார்த்த‌ ந‌டையென‌ ப‌ல‌ புதுமையான‌ விட‌ய‌ங்க‌ளை உள்ளட‌க்கிய‌து தான் ‘நியான் ந‌க‌ர‌ம்‘. உதார‌ண‌த்திற்கு, சரிந்த‌து என்னும் வார்த்தையை ச‌ரிந்த‌வாரே அச்சடித்த‌ வித‌ம் ர‌சிக்க‌ வைக்கிற‌து.

திரைப்ப‌ட‌ங்க‌ளின் முடிவில் டைட்டிலோடு திரையிடப்படும் ஃப்ளாப்ப‌ர் காட்சிக‌ளை நின்று நிதான‌மாக‌ப் பார்த்துக் கிள‌ம்பும் புதுமை விரும்பிக‌ளைப் போல், புத்த‌க‌த்தின் க‌டைசிப் ப‌க்க‌ம் வ‌ரை, புதிதாய் என்ன‌ சொல்லியிருக்கிறார்க‌ள் என‌த் தேடிக்கொண்டிருந்தேன்.‌ அதை நிரூபிக்கும் விதமாக‌ ‘Gift A Song, HI meeting, Haiku cinema ‘ என‌ப் ப‌ல‌ புதுமைக‌ளை உள்ள‌ட‌க்கியுள்ள‌து, ந‌க‌ர‌த்தின் க‌டைசிப் ப‌க்க‌ங்க‌ள்.

பாட‌ல்க‌ளும் அருமையாக‌ வ‌ந்துள்ள‌து. சூழ்நிலைக்கு த‌குந்தாற்போன்ற வ‌ரிக‌ளும் அத‌ற்கேற்ற இசையும் அருமை. இசையோடு ப‌டிக்கும் போது இன்னொரு கோண‌ம் த‌ரும் என்று ந‌ம்புகிறேன். நாவலில் இசையின் துணையோடு பயணம் செய்ய‌ ப‌ய‌ணிக்க‌ தயாராகிக்கொண்டிருக்கிறேன்

பாதையின் ‘Musical Novel’ முய‌ற்சி வெற்றிய‌டைய‌ என‌து வாழ்த்துக்க‌ள்.

நன்றி,
நாணல்

Tuesday, 6 September 2011

நீட்சி...

திருமணத்தடை நீங்க
மஞ்சற்கயிறு;
பிள்ளைப்பேறு பெற
மரத்தாலான தொட்டில்;
வேண்டுதல்கள் நிறைந்த
காகித மாலைகள்;
வெற்றி கிட்டிய பரவசத்தில்
மஞ்சள்குங்கும அபிஷேகமென
முக்காலத்து நம்பிகைகள்
பொய்க்காத வரையேனும்,
தன் வாழ்நாள் நீளுமென
நம்பிக்கை கொள்கிறது
திருவிடம் வாசம் செய்கின்ற
நற்பேறுடைய ஓங்கல்!

நன்றி,
நாணல்