“ஹெல்லோ”
“ஹெல்லோ, கணேஷ்? “
“கணேஷ் தான் பேசுறேன், நீங்க?”
“கணேஷ், நான் கீதா.. உங்க கூட கல்லூரியில படிச்ச கீர்த்தியோட ஃப்ரெண்ட்“
கீதாவா... இப்ப எதுக்கு இவங்க நமக்கு கூப்பிட்டு இருக்காங்க... கீர்த்திக்கு ஏதாவது..... சே சே..அதெல்லாம் ஒன்னும் இருக்காது... அவ நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியாத்தான் நடக்கும்... சரி, கீதா என்ன தான் சொல்லவறாங்கன்னு கேப்போமே....
“சொல்லுங்க கீதா..”
“கணேஷ்...கீ ர் த் தி.... கீ ர் த் தி க் கு..”
“கீர்த்திக்கு.... ”
கீதா இப்படி தயங்கி தயங்கி பேசுவது கணேஷுக்குள் ஏதோ செய்ய..
“சொல்லுங்க கீதா, கீர்த்திக்கு என்ன ஆச்சு....”
“கீ ர் த் தி..................................… கீர்த்தியை ஒரு லா ரி மோ தி டு ச் சு… ”
இதைக் கேட்டவுடன் உலகமே இருட்டானதை போல் உணர்ந்தான் கணேஷ்... மேலே கீதா சொன்னது எதுவும் காதில் விழாது, கீர்த்தி இருக்கும் மருத்துவமனை விலாசத்தை மட்டும் வாங்கிக்கொண்டு, உயிரைப் பறி கொடுத்தவன் போல் தன் அலுவலகத்திலிருந்து மருத்துவமனைக்கு புறப்பட்டான்....
”கீர்த்திக்கா...கீர்த்திக்கா இப்படி....ஏன் கடவுளே....என் கீர்த்திக்கு இந்த நிலைமை.......கீர்த்திக்கு ஒன்னும் ஆகாது....இல்லை இல்லை அவ நல்லா இருப்பா..நிச்சயம் நல்லா இருப்பா...எப்படியெல்லாம் வலியில துடிச்சுகிட்டிருக்காளோ.. பாவம்..கடவுளே அவளைக் காப்பாற்று...என் ஆயுசையும் அவளுக்கு கொடுத்திடு.. கீர்த்தி நல்லா இருக்கா...ஆமா கீர்த்தி இஸ் ஃபைன்....”
இப்படி மாறி மாறி கண்ணீருடன் புலம்பிய வண்ணம் சென்று கொண்டிருந்தான்....நான்கு ஆண்டுகளாய் மனதில் பூட்டி வைத்த காதலும் பாசமும் நேசமும் அவனின் அனுமதியில்லாமல், கண்ணீராய்ப் பெருகிக் கொண்டிருந்தது....
கணேஷிற்கு இப்பொழுது வேண்டியது தனிமையாதலால், அவனை தனியாய் விட்டுவிட்டு கணேஷ் யார் என்பதையும், மருத்துவமனையில் இவனின் வருகைக்காக "போகின்றேன்" என்று சொன்ன உயிரை நிறுத்தி வைத்திருக்கும் கீர்த்தி யார் என்பதையும் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக 18ல் அனைவருக்கும் வரும் காதல் வியாதி இவர்களையும் விட்டுவைக்கவில்லை... கல்லூரியில் சேர்ந்த முதல் நாளன்று தான் கணேஷ் கீர்த்தனாவை முதன்முதலில் சந்தித்தான்...
எல்லோரும் பாராட்டும் அழகில்லையெனினும், ஒரு முறை பார்ப்பவர்கள், மீண்டும் பார்க்கத்தூண்டும் வசீகரம் நிறைந்த முகம்...சாந்தமான பார்வை...யாரிடமும் அதிகமாய் பேசிடாத அடக்கம்...ஆனால் அவளுடன் நட்பாகிவிட்டால், ”கீர்த்தி சொன்னா சரி தான்” என்று சொல்லும்வண்ணம் அவளின் அன்புக்கு அனைவரும் அடிமையாகிவிடுவர்...வீட்டிற்கு ஒரே செல்ல பெண் என்பதாலும், பல சரியான முடிவுகளை தைரியமாய் எடுக்கும் புத்தி கூர்மையுடையவள் என்பதாலும், அப்பா அம்மாவிடமும் இவள் வைத்தது தான் எழுதபடாத சட்டம்... உண்மைக்கும் தன் மனசாட்சிக்கும் தலை வணங்குபவள்... தான் செய்தது தவறெனின் சிறு குழந்தையிடம் கூட மன்னிப்பு கேட்க தயங்க மாட்டாள்…தான் செய்வது சரியெனின் அதை யார் தடுத்தாலும் செய்வாள்..
கணேஷ், ஐந்து நிமிடம் கூட பேசாமல் இருக்க முடியாது பேசிக்கொண்டே இருப்பான், அவனை சுற்றி எப்பொழுதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்... எளிதில் அனைவரிடமும் நட்பாகிவிடுவான்...”டே மச்சான், எனக்கு ஒரு உதவி” என யார் வந்தாலும் புன்னகை மாறாது உதவுவான்...அப்பாவிடம் பாசத்தைவிட ஒருபடி மேலான மரியாதையையும் அதைவிட ஒருபடி மேலான பயபக்தியும் கொண்டவன்...அம்மா தான் இவனின் முதல் தோழி.. ஒரு நாள் தவறாது பள்ளி, கல்லூரி என வெளியில் நடக்கும் அனைத்தையும் அம்மாவிடம் பகிர்ந்தால் தான் அன்று நாள் பூர்த்தியடைந்ததாய் உணர்வான்..அப்பா அம்மாவை சுற்றி தான் இவனின் உலகம் பொதுவாக இயங்கிக் கொண்டிருக்கும்.... வீட்டின் முதல் வாரிசென்பதால், அவர்களின் பிரதிநிதியாகவே கணேஷைப் பார்ப்பர்...கணேஷும் அதற்கேற்றார் போல் வயசுக்கு மீறிய முதிர்ச்சியுடையவன்..எதையும் யோசித்து சரியான முடிவெடுக்கும் மனப்பக்குவம் கொண்டவன்..
எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கப்படும் என்ற இயற்கையின் நியதியை உண்மையாக்குவதைப் போல், கலகலவென பேசிக்கொண்டிருக்கும் கணேஷிற்கு அமைதியாய் இருந்த கீர்த்தி மிகவும் வித்தியாசமாய்த் தென்பட்டாள்…அவனையறியாமல் கீர்த்தியினால் ஈர்க்கப்பட்டான்.. இவளை எப்படியாவது பேசவைக்க வேண்டுமென, அவளிடம் பேச்சு வளர்த்துக்கொண்டே இருந்தான்... ஆரம்பத்தில் கீர்த்தி சரியாய்ப் பேசாவிட்டாலும், சில நாளில் கணேஷின் பேச்சிற்கு ஈடுகொடுக்க ஆரம்பித்து விட்டாள்... இப்படி போட்டியாக ஆரம்பித்த இவர்களின் பேச்சு எப்பொழுது உண்மையான நட்பானதென்று இவர்களுக்கே தெரியாது.... கல்லூரியில் படித்த மூன்று ஆண்டுகளும், நட்புக்கு ஒரு புது இலக்கணம் வகுத்து நட்பின் அடையாளமாய்த் திகழ்ந்தனர்...
கீர்த்திக்கு எதிர்காலத்தை பற்றி பெரியதாய் கனவு இருந்ததாக தெரியவில்லை...படித்து முடித்து வேலைக்கு செல்ல வேண்டுமென்பது வரை தான் அவளின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட்டிருந்தது.. இதிலும் கணேஷ் இவளுக்கு எதிர் துருவமே... இறுதியாண்டு படிக்கும் போதே தன் எதிர்காலத்தை திட்டமிட்டிருந்தான்... அப்படி அவன் மனசுக்குள் இருந்த அந்த கனவு தொழிற்சாலை பற்றி கீர்த்தியிடம் பகிர்ந்துகொள்ள மறந்ததில்லை...
“கீர்த்தி, நான் ஆட்டோமொபைல்ஸ்ல சில்லறை வியாபாரம் செய்யலாமுனு இருக்கேன்... அப்பாகிட்டையும் கேட்டிருக்கேன்... யோசிச்சு சொல்றேன்னு சொல்லி இருக்காரு... ஒத்துக்கிட்டா நல்லா இருக்கும்...”
“கவலைப்படாதே கணேஷ், கண்டிப்பா அப்பா ஒத்துப்பாரு..உன் மேல தான் அவருக்கு அபார நம்பிக்கையாச்சே.. உன்னை நினைச்சா ஒரு பக்கம் பெருமையா இருக்கு கணேஷ்..இந்த சின்ன வயசுல இவ்வளவு தெளிவா உன் எதிர்காலத்தை திட்டமிடுற.. ஆனா, எனக்கும் என் அப்பாக்கும் இருக்கற பாசப் பிணைப்பு உனக்கும் உன் அப்பாக்கும் இல்லைன்னு நினைக்கும் போது, கஷ்டமா இருக்கு...ஏன் கணேஷ் உனக்கு மட்டும் இப்படி? என் வயசு தானே உனக்கு ஆகுது?”
“என்ன செய்ய கீர்த்தி, நீங்க எல்லாம் உங்க அப்பா கூட கை கோர்த்து விளையாடி, வேணுங்ரத அடம் பிடிச்சு வாங்கி பழகியிருக்கீங்க...எனக்கு அப்படி இல்லை... பொதுவா என் அப்பா கிட்ட, பிஸிணஸ் மட்டும் தான் பேசுவேன்... ஆனா அம்மா அப்படியில்லை, அவங்க தான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்... ”
“ஹ்ம்ம்ம் எப்படியோ சந்தோஷமா இருந்தா சரி...சரி நீ ஆட்டோமொபைல்ஸ்ல வியாபாரம் செய்யறதுக்கும் Bsc Computer Science படிக்கறதுக்கும் என்ன சம்மந்தம்... ”
“ஹ்ம்ம்ம் ஒரு வேளை உன்னை பார்க்கனும்ங்கறதுக்காக தான் நான் இங்கே சேர்ந்தேனோ என்னமோ......”
“இருக்கலாம் இருக்கலாம்” என்று புன்னகைத்தாள்..
“கீர்த்தி... ரொம்ப நன்றி... “
“ஹே என்ன இது , நமக்குள்ள எதுக்கு இந்த நன்றியெல்லாம், அப்படியென்ன நான் செஞ்சிட்டேன்...”
“இல்லை கீர்த்தி, என் அம்மாவுக்கு அப்புறம் நீ தான் என்னை உண்மையா நேசிக்கறே. அதுவுமில்லாம என்னை நீ மட்டும் தான் சரியா புரிஞ்சுக்குற.... எப்படி கீர்த்தி, இப்படி உன்னால மட்டும் என்னை சரியா புரிஞ்சுக்க முடியுது... உனக்கு எப்படின்னு தெரியலை, ஆனால் நீ வந்தப்புறம் என் வாழ்க்கையே திருப்பி போட்ட மாதிரி இருக்கு... உன்னை கண்டிப்பா என் வாழ்க்கையில இழக்க மாட்டேன்... சரி அதை விடு இப்ப உனக்கு என்ன வேண்டும்?”
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்... நீ சந்தோஷமா இருந்தா அதுவே போறும் எனக்கு... ” என அவன் கேட்கும் ஒவ்வொரு முறையும் புன்னகையோடு பதிலளிப்பாள்…
ஆனால் ஏனோ வீட்டீற்கு சென்ற பின், அவனை நினைத்து அழுவாள்,”என்ன வேண்டும் என கேட்கும் போது, நீ தான் வேண்டும்” என ஏன் தன்னால் பதில் சொல்ல முடியவில்லையென்று….வெளியே நட்பாக பழகினாலும் நட்பினுள்ளே காதல் எப்பொழுது நுழைந்தது என்று அவளுக்கே தெரியவில்லை.... எதையும் கணேஷிடம் வெளிப்படையாக பேசும் கீர்த்தியினால் தன் மனதிலிருப்பதை மட்டுமேனோ சொல்ல முடியவில்லை… காதல் மீதும் காதலிப்போர் மீதும் மரியாதையில்லாத கணேஷிடம் தன் மனதை வெளிப்படுத்தி அவனின் நட்பை இழக்க விருப்பமில்லை..
இது ஏதும் தெரியாது கணேஷ், கீர்த்தியை மனதால் காதலித்துக் கொண்டிருந்தான்… ஆனால் காதலைப் பற்றிய தன் எண்ணத்தை மாற்ற விரும்பாது, கீர்த்தி என் தோழி மட்டுமே என தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருந்தான்…
மகனின் போக்கை அறிந்த கணேஷின் அம்மா,
”என்னப்பா கொஞ்ச நாளாவே உன் நடவடிக்கை எதுவும் சரியில்லையே...”
”அதெல்லாம் ஒன்னுமில்லயே மா ..எப்பவும் போலத் தான் இருக்கேன்...”
“என்னமோ நீ சொல்ற, அதை நான் நம்பித்தானே ஆகனும்... சரி அதெல்லாம் விடு…புதுசா ஆரம்பிக்கப்போற ஆட்டோமொபைல்ஸ் வியாபாரம் பற்றி உன் கிட்ட ஏதோ பேசனும்னு உங்க அப்பா உன்னை கூப்பிட்டாரு…”
”சரி மா… நான் போய் பேசிக்கறேன்…” என்று சொல்லி விட்டு தன் அறையில், தன் கணினியில் இருக்கும் புது பிஸிணஸ் பற்றிய தகவல்களை எடுக்க சென்று கொண்டிருக்க, அலைபேசியில் கீர்த்தி அழைத்தாள்… ”சொல்லு கீர்த்தி….”
“ஹ்ம்ம் பெருசா ஒன்னுமில்லை கணேஷ், உன்கிட்ட பேசனும்னு தோணுச்சு...அதான்…வேலையா இருக்கியா என்ன?”
”வேலைன்னு இல்லை...அப்பா கூப்பிட்டாருன்னு போயிட்டு இருக்கேன்… அப்புறமா உனக்கு கூப்பிடட்டா…. “
“சரி கணேஷ்….பார்க்கலாம்….ஹே ஆட்டோமொபைல்ஸ் பற்றி தானே அப்பா கிட்ட பேசப்போற... ஆல் தி பெஸ்ட்.... “ என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தாள்…
தன் அப்பாவிடம் சென்று புது பிஸிணஸ் பற்றி கலந்தாலோசித்தான்… அப்பாவிடம் பேசிய பின் தான் தன் தலையில் இருக்கும் பாரம் பற்றி நன்கு உணர்ந்தான்… கிட்டத்தட்ட ஐந்து லட்சம் உதிரி பாகங்களைக் கொண்ட ஆட்டோமொபைல்ஸில் சில்லறை வியாபாரமென்றால் சாமானியமில்லை என்று தெரிந்தது...இவ்வளவு பெரிய வியாபாரத்தை இறுதி ஆண்டு படிக்கும் நம்மிடம் ஒப்படைக்கிறார் என்றார், தன் மீது அவர் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் என எண்ணி எண்ணி வியந்து கொண்டிருந்தான்... முதல் நாளிலிருந்தே கருத்துடன் இருந்தால் தான் இதில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க முடியுமென கணக்கிட்டுக் கொண்டிருந்தான்...
திடீரென கீர்த்தியின் நினைவு வர... ”கீர்த்தி ... ஆயுசுக்கும் உன் அன்புக்கு அடிமையா இருக்கனும்னு தான் எனக்கு ஆசை..ஆனால், அதுக்கு இந்த பிறவியில எனக்கு குடுப்பனை இல்லை போல....என் மேல அப்பா வெச்சிருக்குற நம்பிக்கையை நிஜமாக்கவே இந்தப் பிறவி போயிடும் போல… உன்னை இழக்க வேண்டிவந்தாலும் வரலாம்...அதுவுமில்லாம இப்ப காதல் கீதல்னு நான் யோசிச்சா என்னை நம்பி அப்பா கொடுக்கற பல லட்சங்கள் வீணாப்போயிடும்...இப்ப நான் எனக்குனு ஒரு நிலையை கொண்டு வரனும் அப்புறம் தான் என்னோட தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி யோசிக்க முடியும்...அதுவரை உன்னை காக்க வைக்க எனக்கு விருப்பமில்லை... ” இப்படி எவ்வளவு நேரம் தனக்கு தானே பேசிக் கொண்டானோ தெரியாது.. ஆனால் இனி கீர்த்தியை விட்டு விலகிவிடுவது தான் சரி என முடிவு செய்தான்…
முடிவு செய்தானே தவிற, அவளை நேரில் கண்ட பின்னர் அவனின் முடிவு தவிடு பொடி ஆனது தான் நிஜம்…இந்நிலையில் கீர்த்திக்கும் கணேஷிற்கு தெரியாமல் அவனை காதலனாய் பார்ப்பது, மனசுக்குள் ஏதோ செய்ய, இனியும் குற்ற உணர்வோடு இருக்க முடியாது என தன் காதலை கணேஷிற்கு சொல்லி விட வேண்டும் என தீர்மானித்திருந்தாள்….மனதில் காதலை வைத்துக் கொண்டு நட்போடு பழக அவளின் மனசாட்சி தொந்தரவு செய்து கொண்டே இருந்தது…எது எப்படியோ தன்னிடம் உண்மையாக இருக்கும் கணேஷிற்கு தானும் உண்மையாக இருக்க வேண்டும்…என்ன ஆனாலும் சரி அவனிடம் சொல்லி விட வேண்டுமென முடிவு செய்து, அவனிடம் தன் காதலை சொல்லி விட்டாள்….
“கணேஷ், ரொம்ப நாளா உன்கிட்ட ஒரு விஷயம் மறைச்சிட்டேன்... என்னை மன்னிச்சிடு... “
“ஹே என்ன கீர்த்தி, நமக்குள்ள மன்னிப்பு, நன்றில்லாம் வரக்கூடாதுன்னு நீ தான் சொல்லுவே... இப்ப நீயே... சரி அப்படி என்ன மறைச்சே சொல்லு....”
மிகுந்த தயக்கத்துடன்... “கணேஷ்... நீ எனக்கு நண்பன் மட்டுமில்லை...அதையும் தாண்டி... இத்தனை நாள் உன் கிட்ட சொல்லாம இருந்ததுக்கு என்னை மன்னிச்சிடு… உனக்கு நல்ல தோழியா மட்டும் இருக்க தான் நானும் முயற்சி செய்தேன்…ஆனால் என்னால் முடியலை… நட்புக்குள் காதல் எப்பொழுது நுழைந்தது என்று எனக்கு தெரியலை…உனக்கு காதல்னா பிடிக்காது தெரியும்..அதான் உன் கிட்ட சொல்லாம என் மனசுலையே பூட்டிக்கிட்டேன்.. ஆனா இப்ப உன் கிட்ட சொல்லாம இருக்கவும் என் மனசாட்சி இடம் கொடுக்கலை…அதான் சொல்லிட்டேன்…என்னை மன்னிச்சிடு கணேஷ்.. ” என்ற வார்தைகளும், கண்களில் கண்ணீரும் அவளின் காதலை பிரதிபலித்துக் கொண்டிருந்தது...
இந்த கீர்த்தி அவனுக்கு புதியதாய்த் தென்பட்டாள்… அவள் தன் காதலை சொன்னவுடன், தன் அப்பா அம்மா தான் அவனின் கண் முன் வந்தார்கள்… அப்பா அம்மாவா இல்லை கீர்த்தியா என மாறி மாறி யோசிக்கும் போது, அவன் முதலில் எடுத்த முடிவு தான் சரியென பட்டது… ஆனால் அதே சமயம், கீர்த்தியை நேரில் பார்த்துவிட்டால், அவனால் அவளை விட்டு விலக முடியவில்லை… சரி நம்ம கீர்த்தி தானே..சொன்னா புரிஞ்சிக்குவா…நம்ம வாழ்க்கைக்கு இந்த காதலெல்லாம் ஒத்து வராதுனு சொல்லிப் புரியவைப்போம் என்று…
“கீர்த்தி… எந்த விதத்துதலையாவது நான் உன்னை தொந்தரவு பண்ணி இருந்தா, என்னை மன்னிச்சிடு... அதே சமயம் உன்னோட உணர்வுகளை நான் மதிக்கறேன்... அதுக்காக என்னால உன்னை காதலிக்க முடியாது... என் வாழ்க்கைல காதலுக்கு இடமே இல்லை...என்னை புரிஞ்சுக்கோ... எனக்கு உன் நட்பு எவ்வளவு முக்கியம்னு எனக்கு தான் தெரியும்... அதுக்காக உன்னை கஷ்டப்படுத்த நான் விரும்பலை...உன்னால எனக்கு நட்பா மட்டும் இருக்க முடியும்னா இரு... இல்லை இதுவே நாம பேசறது கடைசியா இருக்கட்டும்...”
கீர்த்தியாலும் கணேஷிடம் பேசாமல் இருக்க முடியாது..எனவே காதலை மறந்து நட்பாக இருக்க முயற்சிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டாள்... உண்மையில் அவளால் காதலை மறக்கமுடியவில்லை...இது நாள் வரை கீர்த்தியின் அன்பிற்கு அடிமையாயிருந்த கணேஷிற்கு, இனியும் கீர்த்தியை ஊக்குவிக்க விருப்பமில்லை… அப்படி கீர்த்தியின் அன்பை ஏற்றுக்கொண்டால் அவள் காதலையும் ஏற்றுக்கொள்ள வேண்டி வரும், அது நடக்காது என தெரிந்த பின்னும் அவளிடம் பேசிக்கொண்டிருந்தால் அவளுக்கென்று யோசிக்காது, தன் வாழ்க்கையை எங்கே பாழ் செய்து கொள்வாளோ என்று பயந்து, இனி அவளின் எதிர் கால வாழ்க்கைக்கு நாம் தடையாயிருக்க கூடாது என அவளை மெதுவாய் நிராகரிக்க ஆரம்பித்தான்... இதை ஏதும் புரியாத கீர்த்தி, கணேஷுக்கும் தனக்குமிடையில் ஒரு திரை வளர்ந்து கொண்டிருப்பதை மட்டும் புரிந்து கொண்டாள்.. அதை சரி செய்ய தன்னால் முடிந்ததை செய்துப் பார்த்தாள்... எல்லாம் வீணாய்ப் போனது தான் மிச்சம்...
யாருக்காகவும் நிற்காத காலம் ஓடிக் கொண்டேயிருந்தது… கல்லூரி முடிந்தவுடன் முழு நேரமாக தன் அலுவலைப் பார்த்துக் கொண்டிருந்தான் கணேஷ்... கீர்த்தியின் நினைப்பு வரும் போதெல்லாம், இன்னும் இன்னுமென உழைக்க ஆரம்பித்தான்...தொழிலிலும் ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருந்தான்.. கீர்த்தியும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துவிட்டாள்… புது மனிதர்கள்.. புது இடம்… என எல்லாம் புதுசாக இருக்க, முடிந்தவரை வேலையில் நினைப்பை செலுத்தி கணேஷின் பிரிவை ஈடு செய்ய முயற்சித்தாள்… உறவின் அருமை பிரிவில் தெரியும் என்பது போல், முன்பை விட கணேஷின் மீது கொண்ட பாசம் இன்னும் அதிகமாகிக் கொண்டேயிருந்தது... கணேஷின் நிலையோ, கிட்டத்தட்ட இயந்திரதனமாய் மாறியிருந்தது... கீர்த்தி அவ்வப்பொழுது தொடர்பு கொண்டாலும் அவளை தவிர்த்துக்கொண்டேயிருந்தான்... வருடங்கள் ஓடி பல மாற்றங்களை கண்டிருந்தாலும் கீர்த்தியின் காதலிலும் மாற்றமில்லை, கணேஷின் கொள்கையிலும் மாற்றமில்லை...
இது ஒரு புறமிருக்க கீர்த்தியின் தாய் தந்தை அவளுக்கு திருமணம் செய்துவைக்க கீர்த்தியின் சம்மதத்தை எதிர்பார்த்திருந்தனர்.. அவள் காதலை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு அவளின் பெற்றோர் பரந்த மனப்பாங்கும், அவள் முடிவின் மீது நம்பிக்கையும் வைத்திருந்தனர்... கீர்த்திக்கோ கணேஷைத் தவிர வேறு யாரையும் மணம் செய்ய விருப்பமில்லை... தன் ஒருதலைக் காதலைப் பற்றி பெற்றோரிடம் சொல்லி அவர்களை கஷ்டப்படுத்தவும் மனமில்லை…இது பற்றி கணேஷிடம் கேட்டாலோ,”நல்லது, நீ உன் பெற்றோர் விருப்பப்படி நடந்துகொள்... அன்று சொன்னது தான் இன்றும், என் வாழ்வில் காதலுக்கு இடமில்லை..எனக்காக நீ காத்திருப்பதில் அர்த்தமில்லை..உன் வாழ்க்கைய நீயே பார்த்துக்கோ ” என்று சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையைப் போல் சொல்லிக் கொண்டேயிருந்தான்... தொழிலில் பல சிக்கல்களைப் பார்த்துப்பார்த்து தன் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மறந்தே போயிருந்தான் அவன்...
தனக்கேற்ற துணையைக் கூட சரியாகத் தேர்வு செய்யத் தெரியாத அவனை, அவன் விருப்பபடி விட்டு விலகவும் முடியவில்லை… மீறி அவனை தொந்தரவு செய்யவும் மனமில்லை… தன் காதலால் தான், இனி என்றும் பெறமுடியாத நல்ல நட்பை இழந்துவிட்டோமென்று நட்புக்காகவும் பலமுறை ஏங்கிக்கொண்டிருந்தாள்.. அப்படியே பெற்றோருக்காக இன்று திருமணம் செய்து கொண்டாலும், வாழ்நாள் முழுக்க போலித்தனமான வாழ்க்கையே வாழ வேண்டிவருமென்பதால், அதிலும் மனம் செல்லவில்லை... சரி தன் விதி எதுவோ அது நடக்கட்டும் என்று அமைதியாயிருக்கலாம் என்றால், தன்னை விட வேறு யாராலும் கணேஷை சரியாகப் பார்த்துக் கொள்ள முடியாதெனும் நினைப்பு, அவனுக்காக இன்னும் காத்திருக்கத் தூண்டுகிறது… ஆனால் அவன் தன்னை விரும்புவதை எப்படி இந்த உலகிற்கும் அவனுக்கும் கண்டுணர்த்துவது என தெரியாது வியந்திருந்தாள்...
இப்படி தன் விருப்பமும் நிறைவேறாது, கணேஷ் விருப்பபடி தன் வாழ்க்கையை வேறு ஒருவருடன் அமைத்துக்கொள்ளவும் முடியாது, பெற்றோரின் ஒரே கனவான இவளின் திருமணத்தை, அவர்கள் விருப்பபடி செய்துகொள்ளவும் மனமில்லாது, இனி என்றும் கிடைக்காத ஒரு நல்ல நட்பையும் இழந்து என்ன செய்வதென்று தெரியாது யோசித்துக்கொண்டே சாலையில் சென்று கொண்டிருக்கும் போது தான் அந்த விபத்தும் நடந்திருக்க வேண்டும்...
இன்று, தன் காதலை மௌனமாக வெளிப்படுத்திக்கொண்டு கீர்த்தியின் அருகில் கணேஷ்... இந்த நொடிக்காகத் தான் தன் வாழ்நாள் இருந்த வரை காத்திருந்தாள்...கணேஷைப் பார்த்ததும் கண்களின் ஓரம் தேங்கியிருந்த ஒற்றைத்துளிக் கண்ணீரும், அவனின் வருகைக்காக காத்திருந்த உயிரும் தன் காத்திருப்புக்கு அர்த்தம் கிடைத்துவிட்டதென அவள் உடலை விட்டு பிரிந்து சென்றது...
காதலின் பிரிவாலும், பெற்றோரின் பாசத்தாலும், பொய்யான வாழ்க்கையை வாழ விரும்பாமலும், இழந்த நட்பை திரும்ப பெறமுடியாமலும், தற்கொலை செய்து கொண்டு சாகும் அளவு கோழையாயிருக்க விருப்பமில்லாமல் தவித்த கீர்த்தியை கருணைக் கொலை செய்வதென உண்மை முடிவு செய்துவிட்டது போல...உண்மையான உறவுகளை ஒருவன் இறுதி ஊர்வலத்தில் தான் பார்க்க முடியுமென்பதை நிஜமாக்கும் விதத்தில் கணேஷ் கீர்த்தியின் இறுதி ஊர்வலத்தில்....
** முற்றும் **
பி.கு: இவ்வளவு பெரிய்ய்யயய கதையை பொறுமையா படிச்சதுக்கு நன்றி... இது "டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி"க்காக அனுப்பிய கதை....
நன்றி,
நாணல்
12 comments:
Nalla muyarchi... But kojam neelam athikam... :)
நன்றிங்க அண்ணா... ஆமா :)) ... போட்டிக்கு அனுப்பினதுனால ஒரே பகுதியா போட வேண்டியதாப்போச்சு....
நீளம் ஜாஸ்தி தான் இருந்தாலும் முழு மூச்சா படிச்சாச்சி ...
வெற்றி பெற வாழ்த்துகள்.
கதை சுவாரசியமா இருந்தது!
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
நன்றாக உள்ளது
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
நன்றி ஜமால், கவிக்கிழவன்,கலையரசன் :))
கதை நன்றாக உள்ளது
வாழ்த்துகள்.
வெற்றிபெற வாழ்த்துக்கள்.......
Arumaiyaana idugai. Vaazhga, valarga.
Good one ..
சுவாரஸ்யம்... நீளம் கொஞ்சம் குரைச்சிருக்கலாம் அக்கா. :))
touching touching...
Post a Comment