Tuesday, 25 January 2011
பேருந்தில்..
பயணச் சீட்டில்
அம்பத்தூரிலிருந்து வேளச்சேரிக்கு
பயணிக்கும் இருவர்,
நடத்துனரின் வசவுகளை
ஜீரணித்துக்கொண்டும்
சில்லறையில்லையென வாதிடும்
சகபயணியின் வழக்குக்கு
தீர்ப்பளித்துக்கொண்டும்
ஒவ்வொரு நிறுத்தங்களிலும்
இறங்கிகொண்டு
அடையாரிலிருந்து கொண்டே
கைபேசியில் உரையாடிக்கொண்டே
என்னுடன் பயணிக்கிறாள்
என் தோழி.
‰00‰
விழித்திருந்தால்
மனிதாபிமானத்துகாய்
இருக்கை பறிபோயிடுமென
தூங்காது தூங்கிய
நிலையில் நான்!
நன்றி,
நாணல்
Sunday, 23 January 2011
ரகசிய சினேகிதனே…
தினம் பேசும் தோழிக்கு
ஏனோ இப்போதெல்லாம்
நான் பேசுவது புரிவதில்லையாம்
அவளுக்கெப்படி சொல்வேன்
என்னுள் இருக்கும் நீ
தான் இப்போதெல்லாம்
என்னையும் மீறி அதிகம்
பேசிக்கொண்டேயிருக்கிறாய் என
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
செல்லப் பெயர்கள்
பல கொண்டு விளித்தும்
ஊடல் பொழுதுகளில்
மெளனமாக உனைக் கொல்லும்
விழிகளின் விளிப்பு தான்
பிடிக்குமென்கிறாய் நீ
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
வேற்றுமைகளற்ற வேற்றுகிரக
மனிதர்களாய்
நம் முன்னோடிகளான
ஆதிவாசிகளாய் அலைகின்றோம்
நம்மை மறந்து
நாம் மறைந்த நேரங்களில்
முந்தைய பதிவு - 1
நன்றி,
நாணல்
Tuesday, 4 January 2011
இயந்திரமாய் மாறியது போதும்
நண்பர்களே,
2011 இன் இந்த முதல் பதிவு, மறக்கமுடியாத ஒன்றாக அமைந்துள்ளது.
முதல் கற்றலின்
எழுத்துக்களை
வீட்டுச்சுவரில் சித்திரங்களாய்
வடித்து பத்திரப்படுத்தும்
குழந்தையைப் போல்
எனது கிறுக்கல்கள்
புத்தக வடிவாய்..
சென்னை மணிமேகலைப் பிரசுரம் மூலம் ‘இயந்திரமாய் மாறியது போதும்’ என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளது.
இன்று முதல் நடக்கவிருக்கும், சென்னை புத்தக கண்காட்சியில் மணிமேகலைப் பிரசுரத்தில்(Stall No: F30) கிடைக்கும். புத்தகமாய் வருமளவிற்கு என் கவிதைகள் வளர்ந்துள்ளதா தெரியாது..சிறு பிள்ளை முயற்சியென இதில் இறங்கினேன். படித்து நிறை குறை கூறுங்கள், கற்றுக்கொள்கிறேன்.
நன்றி,
நாணல்