காதல் பாடல்களை
முனுமுனுத்தப் பள்ளிப் பருவத்தில்
‘காதலெல்லாம் ஒன்னுமில்லை,
புருஷனுக்கு கொடுக்குற காபியில
சர்க்கரை இல்லைனா
ஒரு சண்டை வரும் பாரு
அது தான் வாழ்க்கை,
மத்தபடி
காதல்னு ஒன்னுமில்லை’
என்று சொன்ன தாயின்
பேச்சையும் பொருட்படுத்தியதில்லை !
சோர்ந்த கண்களோடு
’எங்கே செல்லும் பாதை’
எனப் பாடிக்கொண்டிருந்த
சேதுவைப் பார்த்தவாறே
‘பசங்க கிட்ட அதிகம்
வெச்சுகாதா,
படிச்சோமா வந்தோமா இருன்னு’
தந்தை சொன்ன
மந்திரத்தைக் கேட்டதாக
நினைவில்லை கல்லூரிப் பருவத்திலே!
வாழ்க்கையின் தொடக்கம் தனில்
தமையன் சொன்ன
வாழ்க்கைக் குறிப்பையும்
குறித்ததாகச் சுவடில்லை,
சொந்தக் காலில் நிற்கத்
தொடங்கிய வேலைக் காலத்தில்!
‘நான் பட்டதெல்லாம்
போதும்
நீயும் காதலித்து
வேதனையில் மூழ்காதே,
அந்த வலி உனக்கு
வேண்டாம்’ என
பட்டறிந்த தோழி
சொன்ன வாக்கியத்தின்
அர்த்தம் புரிந்ததில்லை
மயங்கியிருந்த காலத்தில்!
மேற்சொன்னவையாவையும்
எதிர் காலத்தில்
நானும் உரைக்கத் தான் போகின்றேன்,
அதைக் கேட்கத் தான்
யாருமிருக்கப் போவதில்லை.
வலிகள் பல இருந்தும்
இழப்புகள் பல தந்தாலும்
வேதனைகள் பல உற்றாலும்
கசக்கும் மருந்துக்காய்
இனிப்பை ஒதுக்கா
குழந்தையைப் போல்
காதலித்துக் கொண்டேயிரு!
நன்றி,
நாணல்
3 comments:
Happy valentiness day.. lov panunga sir life nallarukkum nu solli irukkinga :P
good one naanal
@Sandhiya - adhe adhe :)
@Imran - Thanks :)
Post a Comment