Monday, 12 December 2011

இணையான துணை

தீட்டிய திட்டப்பணி
நேரத்தே முடிவுற‌
இரவு பகல் பாராது
தனிப்பட்ட வாழ்க்கை மறந்து
எமக்கு இணையாய்,
சிலநேரம் - இன்னும் அதிகமாய்
உழைக்கும் கன்னியர்களும் உண்டு
எம் திட்டக்குழுவில்!


உழைப்பை அங்கீகரிக்கும்
விருதுகளுக்கான‌
பட்டியலை வாசிக்கையில்
எம் எண்ணிக்கைக்கு இணையாய்,
சிலநேரம் - இன்னும் அதிகமாய்
நிலைக்கும் பெண்டீரும் உண்டு
எம் திட்டக்குழுவில்!


எம்மில் அவர்கள் என்னக்குறைவென
எம் வாழ்க்கைத் துணைவியாக
எமக்காக வாழவிருக்கும்
அவர்களிடமே தட்சனை கேட்கிறீரே
இது
எம்மை விலை பேசுவதற்கு சமமன்றோ!


நன்றி,
நாணல்

Thursday, 8 December 2011

நடப்பவை நல்லதுக்கே..

பெரும்பாலும் நம்மை மீறி நடக்கும் சில விஷயங்களை ஏற்றுக்கொள்ள நமக்கு நாமே சொல்லிக்கொள்வது “எல்லாம் நல்லதுக்குனு எடுத்துக்க வேண்டியது தான்”. நடக்கவிருக்கும் நல்லது என்னவென்று ஆராயாமல் நடந்தவையை தற்காலிகமாக ஏற்றுக்கொள்வதே சில சமயங்களில் சரியாய்ப்படுகிறது.

இந்த விதி “மறதி”க்கும் பொருந்துமென்றே கருதுகிறேன். மனித மனங்களுக்கு வாய்த்த அழகிய சொத்து மறதி. வாழ்க்கை ஓட்டத்தின் பெரும்பகுதியை மறதியே அழகாக்குகிறது, இருந்தும் சில நேரம் மறக்க கூடாதவைகளை நினைவில் வைத்துக்கொள்ளாது சங்கடங்களில் சில பொழுதேனும் ஆழ்ந்திருப்போம். அத்தகு மறதியினால் கூடிய சுவாரசியம் தனை பகிர்வதே இந்த பதிவின் நோக்கம்.

ஒரு வருடத்தின் 365 (அத்தனை நல்லுள்ளங்களின் நட்பை பெற வேண்டுமெனும் ஆசையின் வெளிப்பாடாக கூட இருக்கலாம்) நாளும் யாரேனும் ஒருவர்க்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டுமென்பதே என் நீண்ட நாள் ஆசை. 365 நாளும் வாழ்த்து சொல்ல முடியவில்லையெனினும், நண்பர்களின்/உறவினர்களின் பிறந்த நாளை முடிந்த வரை நினைவில் வைத்துக்கொண்டு வாழ்த்திவிடுவேன்.

இன்றைய சூழலில் நண்பர்களின் பிறந்த நாளை நினைவுப்படுத்த, முகனூல் மற்றும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப வசதி இருக்கின்றது. கைப்பேசியும் இணையமும் அதிகம் அறிமுகமாகாத கல்லூரி காலங்களில், என் நெருங்கிய தோழியின் பிறந்த நாளை மறந்துவிட்டேன். மறந்ததோடல்லாமல் அன்று காலை வழக்கமாக பேசுவது போல் அவளுடன் பேசவும் செய்து, அவளின் பிறந்த நாள் எனக்கு நினைவில் இல்லை என்பதை அவளுக்கு புரியும்படி மிகவும் வழக்கமாக பேசி விடைப்பெற்றுக்கொண்டேன்.

நல்ல வேளை அந்த நாள் முடியும் தருவாயிலாவது நினைவுக்கு வந்தது, அன்று அவளின் பிறந்த நாளென்று. இனி சாதாரணமாய் அழைத்து வாழ்த்து சொன்னால் சரிபடாதென, சிறப்பாக ஏதாவாது செய்ய வேண்டுமென யோசித்துக் கொண்டே, பிறந்த நாள் பரிசாக ஒரு இன்ப அதிர்ச்சி தரலாமென முடிவு செய்தேன். மற்றொரு தோழியை விட்டு, பிறந்த நாள் கொண்டாடும் தோழிக்கு, ஒரு சிறிய விபத்தில் நான் சிக்கிக்கொண்டதாக தகவல் சொல்லி அனுப்பினேன்.

அவளும் செய்தி கேட்ட மாத்திரம், உடனடியாக என்னைப் பார்க்க என் அறைக்கு ஓடி வந்தாள், அவள் என்னறையினுள் காலடி வைத்ததும், அறை விளக்கை அணைத்து விட்டு மெழுகின் வெளிச்சத்தில் அவளுக்கு பிடித்த “சாக்லெட் கேக்”கோடு ”சிறிய பரிசு”ம் தந்து “பிறந்த நாள் வாழ்த்துக்கள்” சொல்லி, மறந்த பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி முடித்தோம். பிறந்தநாளை மறந்ததற்கு திட்டாமல், நான் சொன்ன “விபத்து பொய்”க்காக கடிந்து கொண்டு என் மேல் கொண்ட அக்கறையை மிகத்தெளிவாக ஊர்ஜிதப்படுத்தினாளவள்.

ஒரு வாழ்த்தோடு முடிந்திருக்க வேண்டிய பிறந்தநாள், ‘கேக்’, ‘பரிசு’, ‘இன்ப அதிர்ச்சி’, ‘அன்பின் வெளிப்பாடு’, ‘பாசம்’ என மறக்க முடியாத நாளாக மாறியதற்கு காரணம் “மறதி” தானே!

இந்த ஒரு சான்றோடு, இக்கணம் நம் மனதில் தோன்றும் பல சான்றுகளோடு ஒப்புக்கொள்ளலாமா நடப்பவை நல்லதுக்கென்றே”!

நன்றி,

நாணல்