Tuesday, 2 October 2012

அதிசய காந்தம்..

கேள்வி பதில்களென நிறைந்திருந்த
குடுவையிலிருந்து தகுந்தவை ஈர்த்தெடுக்கவென
அதிசய காந்த‌ம் ஒன்றை கொண்டுள்ளேன்..

எஜ‌மான‌னுக்கு விசுவாசியாய் இருக்கும்
நாய்க்குட்டியைப் போன்றே காந்த‌மும்
எனக்கு விசுவாசியாய் இருந்தது இதுநாள்வரை..

இக்கணம்
அத‌ன் பிற‌ந்த‌ அல்ல‌தென்
பொக்கிஷ‌ பெட்ட‌கத்தினுள் புகுந்த
நாளை நினைவு கூர்கின்றேன்..

ஆண்டவன் விளையாட்டிற்கு
காரணம் கேட்பதே தம் கடமையென‌
பெரிவர்கள் கூட்டம் மும்முர‌மாய் இருக்க‌
விளையாட்டே வாழ்க்கையென கோவில் மணலில்
விளையாடிக்கொண்டிருந்தோம் நாங்க‌ள்,
அங்கே ஒரு
சிறு க‌ல்லாய்த் தென்பட்டு
மேனியில் மேலும் சில‌ தாதுக்க‌ளோடு
உயிர்த்தெழுந்த இந்த அதிச‌ய‌ காந்த‌த்தை
என் வ‌ச‌மாக்கிக்கொண்டேன்
சிறுவ‌ர் ப‌ஞ்சாய‌த்திற்குப்பின்!

அன்று முத‌ல்,
கேள்விக்கேற்ற‌ ப‌திலையும்
ப‌திலுக்கேற்ற கேள்வியையும்
என‌க்காக‌ ஈர்த்து த‌ந்தது,
உட‌ல் ந‌லக்கோளாறோ இல்லை
சூழ்நிலைக்கார‌ண‌மாக‌வோ
த‌ன் ப‌ணி மறந்து
பொருந்தாத பலதை ஈர்க்கின்றன
சில நாட்களாய்!

அதன் சக்தி முற்றிலும்
முற்று பெருவதற்கு முன்
மெதுமெதுவாய் அதன் திறனை
ஈர்த்துக்கொண்டிருக்கிறேன் நான்,
மற்றுமொரு காந்தம் தனை தேடிக்கொண்டே!

நன்றி,
நாணல்

Sunday, 30 September 2012

ரகசிய சினேகிதனே…

செல்பேசியின் க்ளிக் சத்ததிற்குப் பின்
உடனே அதன் திரையை
எட்டிப்பார்க்கும் குழந்தையென
உன் கண்களை எட்டிப்பார்க்கின்றேன்,
அதில் பதிந்த நம் காதலை உறுதிசெய்ய!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

என் செவிக்குள் ஒலிக்கும் இசைக்கேற்ப
தூரத்து குழந்தையின் நடனம்
அமைவ‌தாய் உணர்கின்றேன்
உந்தன் பரவசம்
என் காதலாலென‌ உணர்கையில்..


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

புதியதாய் கற்ற‌ எழுத்துக்களை
கண்படும் வார்த்தைகளில் எல்லாம்
துழாவும் ம‌ழ‌லையென‌ உன்னில்
என்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன்!


முந்தையப் பதிவுகள் - 12,34, 5, 6, 7

நன்றி,
நாணல்

Sunday, 5 August 2012

பாதை

ச்சா செத்துப்போகலாம் போல இருக்கு”, சொல்லிக்கொண்டே வீட்டுக் கதவை வெளியே தாளிட்டு வேகமாய் ஓடினேன் மொட்டை மாடிக்கு. உச்சி வெயிலின் தாக்கம், என் மனதின் உச்சத்தை ஈடு செய்ய முடியாது கொஞ்சம் தணிந்தே இருந்தது. யாருமில்லா அந்த வெற்று இடம் கூட பாரமாய்த் தோன்றியது எனக்கு, எவர் கண்ணிலும் படாத ஒரு மூலையில் சென்று அமர்ந்தேன்.. இன்றே மொத்தமாய் அழுது தீர்த்துவிட வேண்டுமென வரம் பெற்றதைப்போல் அழுது தீர்த்துக் கொண்டிருந்தேன். என் கேவல் சத்தம் எனக்கே பயமாய் இருந்தது. யாருக்கும் பாரமாய் இராமல் செத்துவிடலாமென தோன்ற, செய்ய வேண்டியவை ஏதேனும் இருக்கிறதா என என்னை நானே கேட்டுக் கொண்டேன். நல்ல வேளை அப்படி அவசர வேலை எதுவும் மனதிற்கு தோன்றவில்லை. ”நாளை சாவை எதிர்கொள்ளும் மனநோக்கோடு இன்றைய நாளை நீ வாழ்” என்னும் காந்தியின் பொன்மொழிக்கேற்ப வாழ்ந்ததால் தானோ என்னவோ, இந்த நொடியில் செய்ய வேண்டிய வேலை, சாவைத் தவிற வேறேதுவும் இல்லையெனக்கு.

தடுப்புச்சுவரின் அருகே சென்று என் பாதையை மெல்ல எட்டிப்பார்த்தேன். சிரமம் நிறையவே இருக்கும் போல பட்டது. மொட்டை மாடி இருக்கும் பத்தாவது மாடியிலிருந்து கீழே நடப்பவையை கடைசி முறையென நோட்டமிட்டேன். ப்ரார்த்தனை பலித்ததால், ஒவ்வொரு தேங்காயாய் வழிப்பிள்ளையாருக்கு அடித்து கொண்டிருந்தார் தாத்தாவும் பேரனும். ”நன்றி கடவுளே, அவர்களுக்கேனும் நினைத்ததை நடத்தி கொடுத்தாயே”. சிலர் அங்கும் இங்கும் அலைந்தவண்ணம் இருந்தனர், என்ன அவசர வேலையோ அவர்கட்கு, இன்னும் சற்று நேரத்தில், என் பிணத்தை வேடிக்கை பார்க்க வேண்டுமென தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தனர்.

பல தடவை இந்த தடுப்புசுவரின் மீது, மிச்சமிருக்கும் சாதத்தை வைத்து காக்காவை அழைத்திருக்கேன், அப்போதெல்லாம் தாமதமாக வரும் காக்கா, இன்று நான் அழைக்காமலே வந்து என் அருகில் வந்து கரைந்து கொண்டிருந்தது. இரண்டு மூன்று காக்காக்கள் உடனே எங்கிருந்தோ பறந்து வர, எங்கே தலையில் கொட்டி விடுமோவென பயந்து விலகினேன்.

என்னம்மா, இங்க என்னப் பண்ற?” புன்னகையோடு விசாரித்தார் பக்கத்து வீட்டில் வசிப்பவர்.

ஒண்ணுமில்லை அங்கிள், சும்மா காக்காக்கு சாப்பாடு வைக்க வந்தேன்” என்று பொய்யாய் புன்னகைத்தேன்.

நல்லப் பொண்ணு மா, நீ.. சீக்கிரம் வீட்டுக்குப் போ, வெயில்ல நிக்காதே” என்று அவர் பங்கிற்கு அறிவுரை சொல்லிச்சென்றார்.

பித்துப்பிடித்தாற் போல் வெற்று மாடியை வலம் வந்தேன். எங்கேனும் ஒளிந்துகொள்ள எண்ணி, மீண்டுமொரு மூலையில் அமர்ந்து அழுது தீர்த்தேன். சற்று முன் வந்த காக்கைகளையும் காணவில்லை. அவற்றில் ஏதோ ஒன்று என் மூதாதையர் போல, என்னை அழைத்துச்செல்ல வந்தாரோ இல்லை என்னை உயிர்ப்பிக்க வந்தாரோ தெரியாது.

மெல்ல தடுப்புச் சுவரின் அருகில் சென்று நின்றதும், காற்றும் பலமாய் வீசிக்கொண்டே இருந்தது. விட்டுச்சென்ற காக்கைகளும் என் தலையை வட்டமிட்டுக்கொண்டே இருந்தன. யாரேனும் என்னை கவனிக்கிறாரா எனப் பார்த்து, இன்னும் என்னை கவனிக்க இவ்வுலகில் ஆள் மிச்சம் இருக்குமா என ஏங்கும் என் அறியாமையை எண்ணி சிரித்துக் கொண்டே குதித்தேன். முதலில் பட்டது 9 வது மாடி வீட்டு ஜன்னல் மேலிருக்கும் கூரை, அங்கே பட்டு, தெரித்து எங்கள் குடியிருப்பின் ட்ரான்ச்ஃபார்மர் மீது விழுந்தேன், அதற்கும் என்னைப் பிடிக்கவில்லைப் போல, உடனே தூக்கி எறிந்தது. சாலையில் சென்று விழுந்தேன். அந்த நொடி உலகம் ஸ்தம்பித்தது போன்ற ஒரு உணர்வு, சுற்றி ஒரே கூட்டம். முன் சொன்ன அவசர மக்கள் என்னைப் பார்ப்பதை மட்டுமே தலையாய கடமையாய் கொண்டிருந்தனர் இப்பொழுது.

உலகம் மிகச்சிறியது என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும், ஒரு மணிநேரத்தில், என் நண்பர்களும் உறவுகளும் என்னருகில்.

ச்சா நேத்துக்கூட பேசினேனே, ஒரு டாக்டர் நம்பர் வேணும்னு கேட்டா, எஸ்.எம்.எஸ்ல அனுப்பி விட்டு அப்புறம் பேசுறேனு சொன்னேன், அதுக்குள்ள இப்படி பண்ணிட்டாளே இவ”, எனத்தனக்குள் அழும் நண்பனொருவன்.

யாரோ கூட வேலை பாக்குற பையனை விரும்புறேனு போன வாரம் சொன்னாலே, சரி நல்ல விஷயம் சீக்கிறம் சொல்லி சட்டுபுட்டுனு கல்யாணம் பண்ணிக்கோனு சொன்னேனே, இப்ப ஏன் இப்படி அவசரப் பட்டுட்டா தெரியலேயே”, என கதறும் தோழி ஒருத்தி.

தனக்குத் தான் மனைவியாக ஆசைப்பட்டாள் இவளென தெரியாது, நேற்று அலுவலகத்தில் அடித்த அரட்டைகளை நினைவுகூர்ந்து அழுது கிடந்த்தான், நண்பனாய்த் தென்பட்ட காதலன். அவரவர் அவரவர் அறிவுக்கெட்டிய விஷயங்களை வைத்து, என தற்கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து கொண்டிருந்தனர். தன் மகள் சென்னையில் சந்தோஷமாய் இருக்கிறாள் என நிம்மதியாய் இருந்த, என் தாய் தந்தை, என்னை என் பிணத்தை பார்க்கப் பதறி அடித்து ஓடி வந்துகொண்டிருப்பதாக சிலர் பேசிக்கொண்டனர்.

தோற்றுப் போன தைரியமான கோழையான, என் இந்த கதாபாத்திரத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என மூளையை கசக்கிக் கொண்டிருந்தேன் . ”கவிதா”, ஹ்ம்ம்ம் இல்லையே, மிகவும் மென்மையான பெயர், சரி வராது… “ராதா”, ”கீதா”, “ஜானகி”, ஹ்ம்ம்ம் எதுவும் சரியாக படவில்லை. சட்டென நினைவுக்கு வந்தது “ப்ரபா”… ஆம், சரி “ப்ரபா” சரியான பெயர். யோசித்த களைப்பில் தூங்கிவிட்டேன் போல, விழிக்கையில் அம்மாவும் அப்பாவும் என் அருகில், “ஆபீஸ்ல ஏதோ ப்ரச்சனை போல ஆண்டி, என்ன கேட்டாலும் சொல்ல மாட்டென்கிறா, அதான் பயமா இருந்துச்சு, உங்களை வரச் சொன்னோம்”, அக்கறையுடன் சொல்லிக்கொண்டிருந்தாள் தோழி, என் இந்தக் கற்பனைக் கதையை தலையணை அடியில் மறைத்து என் அன்னையின் மடியில் அடைக்கலமானேன்.

நன்றி,
நாணல்

Monday, 30 July 2012

ரகசிய சினேகிதனே…


வெட்கப்படவைக்கும் உன் வினைக்கு
உன்னைச் சுடுவதே
பழமையின் மொழி,
மாறாக
முற்பகல் செய்த காதலின் பயனால்
சலுகைகள் உனக்கு கிட்டுவதும்
பழமையின் மொழியே!



♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


உன்னுடன் பேசியபின் தான்
எந்நாள் முழுமை பெறுகிறதென
உன்னுடன் பேசாதிருந்த
நாளொன்றில் புரிந்தேன்!



♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


ராவணனை மிஞ்சிய பல
அவதாரங்களெடுத்தவன் நீயோவென
சந்தேக்கின்றேன்
பல நெருங்கிய நண்பர்களாலும்
ஈடுசெய்ய முடியா
உன்னிழப்பில் தவிக்கையில்!



♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


காற்றில் மிதக்கின்ற
செல்ல கையோங்கல்கள்
தரும் அலாதி
பறிமாறிக்கொண்ட முத்தங்களைக்
காட்டிலும் அதிகமே! 



முந்தையப் பதிவுகள் - 12,34, 5, 6


நன்றி, 
நாணல்

Tuesday, 15 May 2012

தீர்ப்பின் வழக்கு

‘இன்று உனக்கு விடுதலை’யென
குரல் வந்த வழி
ந‌ன்றி சொல்லிப் புறப்பட்டேன்,
வழி நெடுக்க
விசித்திர நிகழ்வுகளைச் சும‌ந்த‌ப‌டி!


உச்ச‌க்க‌ட்ட‌மாய்
என‌க்கெதிரே ஒரு பிம்பம்;
என் கைக‌ள் செய்வ‌தை
நேரெதிர் திசையில்
செய்து கொண்டு,
நான் உச்ச‌ரிக்கும் வார்த்தைகளுக்கேற்ப‌
அத‌ன் இதழ்களைக்
குவித்துக் கொண்டும்;


என்ன‌ருகில் இருப்ப‌வ‌ரைப் போன்றே
அத‌ன‌ருகிலும் ஒரு பிம்ப‌ம்,
இவ‌ர் செய்வ‌தையே செய்த‌ப‌டி;
இவ‌ருக்கில்லா குழ‌ப்ப‌ம்
என‌க்கு ம‌‌ட்டுமேனோ
என யோசிக்கையில்
பிம்ப‌த்தையும் அழைத்து சென்றுவிட்டார்
என்னருகில் இருப்ப‌வ‌ர்;


மற்றுமொரு பிம்ப‌த்தின் துணையோட‌ வ‌ந்த‌
என்‌ பால்ய‌ சினேகித‌ன்,
‘எப்போ நீ வெளியில வ‌ந்தே?’
என்று இருமுறை வினவியப்பின்
நீண்ட நேர யோசனையின் விளைவாய்
நினைவுக்கு வ‌ந்த‌தென‌க்கு;


“வ‌ழ‌க்கொன்றின் தீர்ப்பாய்
க‌ண்ணாடியில்லா உல‌கிற்கு
மாற்ற‌ம் செய்ய‌ப்பட்டுள்ளேன்
ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னெனவும்,
இன்று தான் அங்கிருந்து
விடுத‌லையானேன் என‌வும்”


நன்றி,
நாணல்

Saturday, 24 March 2012

புத்தகத்தினுள்...

புத்தகத்தினுள் நுழைய முனைந்து
தொட்டுச்செல்லும் காற்றின் முகவரி தேடுகின்றேன்,

காக்கிச்சட்டைப் பெண்ணின் சுவாரசியக் கதைகளை
அவள் தம்பியுடன் அவளறியாது கேட்கின்றேன்,

காதலர் தினக்காகிதங்களோடு தம் கதைகள் சொல்லி
கன்னங்கள் சிவக்கும் எதிர்சீட்டுப்பெண்ணை ரசிக்கின்றேன்,

சற்றுமுன், நண்பருக்கு நானளித்த நாட்குறிப்பை மறந்து
நாட்குறிப்போடிருக்கும் பெண்ணை விசித்திரமாய்ப் பார்க்கின்றேன்,

சற்றே அறிமுகமான பெண்களுக்குள்
பேசக்கிடைக்கும் தலைப்புகளை எண்ணி வியக்கின்றேன்,

கையேந்தும் திருநங்கைக்கு புதுவாழ்வளிக்க
செய்வன எண்ணி காசு கொடுக்க மறுக்கின்றேன்,

பார்வையில்லா வியாபாரியின் கையில் கிடக்கும்
பொருளின் விலையெண்ணி வாங்க யோசிக்கின்றேன்,

விலை மறந்து, பொருள் தரம் மறந்து
பத்திற்கு மூன்றென எந்நிலையம் வரும்வரை கொறிக்கின்றேன்,

இக்கணம் உங்களைத்தழுவும் ஆயாசம்
என்னைத்தொழுகையில் மீண்டும் புத்தகத்தினுள் நுழைகின்றேன்.

நன்றி,
நாணல்

Friday, 9 March 2012

Library Due - Reminder

                After a day’s off from work, I was clearing my cognizant mail box yesterday. There was a mail from Library Information Management System reminding me to either return/renew the books that I had borrowed from my office library.

                Only then I realized the reason why my handbag appeared heavy for a few days! Yes, I had borrowed the books from Library, those were supposed to be read and returned to the library sometime last week. But due to my laziness, I was unable to return and hence opted to renew them.

                Followed by the reminder mail, there were lot of wishes in mail for International Women’s Day. I was proudly thanking my male friends and wishing the same to my female friends.

                Suddenly it struck my mind that there is some relation between Renewal and Love. I then perceived the special days like Women’s Day, Father’s Day, Mother’s Day, Valentine’s Day are reminders to renew our love towards any kind of relationships.

                With the busy schedules we tend to forget to spend some time with our loved ones. Though it is unintentional, we end up losing valuable friends/relations for not renewing their love frequently. Hence I believe the special days are the reminders to renew our love among our loved ones. Aren’t they?

                Love is a like a book lent from the library of love, keep renewing it then an then to make life interesting! But it is not a thumb rule that we have to wait for the special days to renew, we are great enough to get a brand new day everyday to renew our love and live our life peacefully.

Sunday, 12 February 2012

சுவரில்லாச் சித்திரங்கள்!

சமைத்த கறி இதுவென்று
சுவரேறும் புகைப்படத்தின்
வர்ண ஜாலங்களுக்கேற்ப
கூடும் விருப்ப எண்ணிக்கையோடு
வாழ்க்கை அடங்கி விடுமெனின்
ருசியாக சமைக்க தேவையிறாது!


நொடிக்கொரு முறை
சுவரேறும் வாசகங்களின்
வார்த்தை ஜாலங்களுக்கேற்ப
கூடும் பகிர்வு எண்ணிக்கைகளோடு
வாழ்க்கை அடங்கி விடுமெனின்
ரசனையோடு வாழத் தேவையிறாது!


பின்குறிப்பு : சமுகமயமாக்கல் என்னும் பெயரில் உண்மையில் நாம் சமூகத்தை விட்டு வெகுதூரம் சென்று கொண்டிருக்கிறோமோ என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த படைப்பு!


நன்றி உயிரோசை !


நன்றி,
நாணல்

Wednesday, 4 January 2012

ஆழி மழை

நனைக்கின்ற மழையை
மறுக்காது,
ஏற்கின்றேன் மணலாய்!

மறுக்கின்ற அலையைத்
தடுக்காது,
வழிவிடுகின்றேன் கரையாய்!

மழையாய் அலையாய்
மணலாய் கரையாய்
நீயாய் நானாய்
என எல்லாமுமாய்

நித்தமும் நிரம்பிக்கொண்டேயிருக்கிற
நரலை தனில் உன் துளிகளையும்
நிரப்புவது தான் உனக்கிட்ட பணியெனின்
நிரப்பிக்கொள் முடிந்தவரை!

நன்றி,
நாணல்

* நரலை - கடல்