இல்லையேல்
கல்லில் வடித்த
அழியா சிற்பம் போல்
உன் நினைப்போடு மட்டுமே
ஜீவித்துக் கொண்டிருப்பேனா….
என் தோழிக்கு
உனை அறிமுகம் செய்ய
உன் புகைப்படங்களில்
சிறந்ததைத் தேடுகையில் உணர்ந்தேன்
என்றுமே நீ
எனக்கு பேரழகன் தானென்று…
நாள் : 22-02-2010
நன்றி,
நாணல்
சமைத்த கறி இதுவென்று
சுவரேறும் புகைப்படத்தின்
வர்ண ஜாலங்களுக்கேற்ப
கூடும் விருப்ப எண்ணிக்கையோடு
வாழ்க்கை அடங்கி விடுமெனின்
ருசியாக சமைக்க தேவையிறாது!
நொடிக்கொரு முறை
சுவரேறும் வாசகங்களின்
வார்த்தை ஜாலங்களுக்கேற்ப
கூடும் பகிர்வு எண்ணிக்கைகளோடு
வாழ்க்கை அடங்கி விடுமெனின்
ரசனையோடு வாழத் தேவையிறாது!
பின்குறிப்பு : சமுகமயமாக்கல் என்னும் பெயரில் உண்மையில் நாம் சமூகத்தை விட்டு வெகுதூரம் சென்று கொண்டிருக்கிறோமோ என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த படைப்பு!
நன்றி,
நாணல்
பெரும்பாலும் நம்மை மீறி நடக்கும் சில விஷயங்களை ஏற்றுக்கொள்ள நமக்கு நாமே சொல்லிக்கொள்வது “எல்லாம் நல்லதுக்குனு எடுத்துக்க வேண்டியது தான்”. நடக்கவிருக்கும் நல்லது என்னவென்று ஆராயாமல் நடந்தவையை தற்காலிகமாக ஏற்றுக்கொள்வதே சில சமயங்களில் சரியாய்ப்படுகிறது.
இந்த விதி “மறதி”க்கும் பொருந்துமென்றே கருதுகிறேன். மனித மனங்களுக்கு வாய்த்த அழகிய சொத்து மறதி. வாழ்க்கை ஓட்டத்தின் பெரும்பகுதியை மறதியே அழகாக்குகிறது, இருந்தும் சில நேரம் மறக்க கூடாதவைகளை நினைவில் வைத்துக்கொள்ளாது சங்கடங்களில் சில பொழுதேனும் ஆழ்ந்திருப்போம். அத்தகு மறதியினால் கூடிய சுவாரசியம் தனை பகிர்வதே இந்த பதிவின் நோக்கம்.
ஒரு வருடத்தின் 365 (அத்தனை நல்லுள்ளங்களின் நட்பை பெற வேண்டுமெனும் ஆசையின் வெளிப்பாடாக கூட இருக்கலாம்) நாளும் யாரேனும் ஒருவர்க்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டுமென்பதே என் நீண்ட நாள் ஆசை. 365 நாளும் வாழ்த்து சொல்ல முடியவில்லையெனினும், நண்பர்களின்/உறவினர்களின் பிறந்த நாளை முடிந்த வரை நினைவில் வைத்துக்கொண்டு வாழ்த்திவிடுவேன்.
இன்றைய சூழலில் நண்பர்களின் பிறந்த நாளை நினைவுப்படுத்த, முகனூல் மற்றும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப வசதி இருக்கின்றது. கைப்பேசியும் இணையமும் அதிகம் அறிமுகமாகாத கல்லூரி காலங்களில், என் நெருங்கிய தோழியின் பிறந்த நாளை மறந்துவிட்டேன். மறந்ததோடல்லாமல் அன்று காலை வழக்கமாக பேசுவது போல் அவளுடன் பேசவும் செய்து, அவளின் பிறந்த நாள் எனக்கு நினைவில் இல்லை என்பதை அவளுக்கு புரியும்படி மிகவும் வழக்கமாக பேசி விடைப்பெற்றுக்கொண்டேன்.
நல்ல வேளை அந்த நாள் முடியும் தருவாயிலாவது நினைவுக்கு வந்தது, அன்று அவளின் பிறந்த நாளென்று. இனி சாதாரணமாய் அழைத்து வாழ்த்து சொன்னால் சரிபடாதென, சிறப்பாக ஏதாவாது செய்ய வேண்டுமென யோசித்துக் கொண்டே, பிறந்த நாள் பரிசாக ஒரு இன்ப அதிர்ச்சி தரலாமென முடிவு செய்தேன். மற்றொரு தோழியை விட்டு, பிறந்த நாள் கொண்டாடும் தோழிக்கு, ஒரு சிறிய விபத்தில் நான் சிக்கிக்கொண்டதாக தகவல் சொல்லி அனுப்பினேன்.
அவளும் செய்தி கேட்ட மாத்திரம், உடனடியாக என்னைப் பார்க்க என் அறைக்கு ஓடி வந்தாள், அவள் என்னறையினுள் காலடி வைத்ததும், அறை விளக்கை அணைத்து விட்டு மெழுகின் வெளிச்சத்தில் அவளுக்கு பிடித்த “சாக்லெட் கேக்”கோடு ”சிறிய பரிசு”ம் தந்து “பிறந்த நாள் வாழ்த்துக்கள்” சொல்லி, மறந்த பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி முடித்தோம். பிறந்தநாளை மறந்ததற்கு திட்டாமல், நான் சொன்ன “விபத்து பொய்”க்காக கடிந்து கொண்டு என் மேல் கொண்ட அக்கறையை மிகத்தெளிவாக ஊர்ஜிதப்படுத்தினாளவள்.
ஒரு வாழ்த்தோடு முடிந்திருக்க வேண்டிய பிறந்தநாள், ‘கேக்’, ‘பரிசு’, ‘இன்ப அதிர்ச்சி’, ‘அன்பின் வெளிப்பாடு’, ‘பாசம்’ என மறக்க முடியாத நாளாக மாறியதற்கு காரணம் “மறதி” தானே!
இந்த ஒரு சான்றோடு, இக்கணம் நம் மனதில் தோன்றும் பல சான்றுகளோடு ஒப்புக்கொள்ளலாமா ”நடப்பவை நல்லதுக்கென்றே”!
நன்றி,
நாணல்
கண்ணிமைக்கும் நேரத்தில்
உன் உதட்டோரத்
திருஷ்டிப்பொட்டாக
உருவெடுக்கிறது
என் கண்ணின் மை!
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
சீராக எழுதிய
தமிழின் எழுத்துக்களை விட
உன் பெயராய் உருபெற
சிதறிய தமிழின் எழுத்துக்கள்
தரும் மயக்கமே அலாதி!
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
உனக்கு தரவேண்டி நான் சேமித்த
முத்தப்பரிசுகளையெல்லாம்
நீ எனக்களித்த பரிசுப்பொருட்களே
தட்டிப்பறித்தால்
என் செய்வேன் நான்!
முந்தையப் பதிவுகள் - 1, 2,3, 4, 5
நன்றி,
நாணல்
எனக்கானவன் நீயில்லையென
தெளிந்த எதார்த்தத்திற்கும்
என்னவன் நீயில்லையென
மெலிந்த என் போராட்டத்திற்கும்
இடையில்
நம்
பரிதாபக் காதல்!
$%^&#@$
ஜானேற முழம் சருக்கும்
சருக்கு மரம் போல,
உன் நினைவுகள்
சிறுக மறைந்து
பெருக மலர்ந்து
என்னைக் கொல்லுதே!
$%^&#@$
தூரத்துப் புள்ளியைத் தொட்டிடும்
முயற்சியென சாலைகள்
நீண்டு கொண்டேப் போனாலும்,
கிட்டாத புள்ளியென
மனதின் ஆசைகள்!
நன்றி,
நாணல்
நேற்று முன்னிரவில் உன் நித்திலப்பூ மடியில்,
காற்று நுழைவது போல் உயிர் கலந்து களித்திருந்தேன்,
இன்று பின்னிரவில் அந்த ஈர நினவில
கன்று தவிப்பது போல், மனம் கலங்கிப் புலம்புகிறேன்
என்னும் அலைபாயுதேவின் “சினேகிதனே..” பாடலின் வரிகளோடு, மனதில் நகர்வலம் வர தொடங்குகிறது ”நியான் நகரம்”
’ரணம் சுகம்‘- ஒரு புதிய முயற்சி என்று அறிமுகமானபோது அப்புத்தகத்தை படிக்க ஆவலிருந்தும் படிக்க முயலவில்லை.அதனைத் தீர்க்கும் விதமாக, நியான் நகரம் வெளி வர, நண்பர் வசந்த் மூலம் அவ்வப்பொழுது விவரங்கள் தெரிந்து கொண்டேன்… அவர் எழுதிய ‘நிலவுடன் நான்’ பாடலை அஜீஷின் குரலில் கேட்டப்பிறகு, முழு நாவலையும் படிக்க வேண்டி, அவரிடமிருந்து புத்தகத்தை வாங்கி அலமாரியில் வைத்ததோடு சரி…பாடல்களோடு நாவலைப் படிக்கலாமென ஒத்திவைத்துக் கொண்டேயிருந்தேன்…
நண்பர் ஒருவர் ‘நியான் நகரம்’ பற்றி மின்னஞ்சல் அனுப்ப, என் தங்கை அதை வழிமொழிய, படித்தே தீர வேண்டுமென கையிலெடுத்தேன் நாவலை.வைக்க மனமில்லை, பயணித்த 1.30 மணி நேரம் எப்படி போனதென்றே தெரியவில்லை..இடையில் யாரெனும் தொலைபேசியில் அழைத்துவிடுவாரோ, இல்லை குறுஞ்செய்தி அனுப்பிவிடுவாரோ, நாவல் பாதியில் நின்று விடுமோ என்னும் பதட்டத்துடன் படித்துகொண்டேயிருந்தேன்.. நல்ல வேளை யாரும் இடையில் அழைக்கவில்லை
OCD - Obsessive compulsive Disorder என்பதைப் பற்றி படித்திருக்கிறேன் தவிற பெரிதாக ஆராய்ந்ததில்லை.. இதனால் அவதிப்படும் கதையின் ஹீரோ ‘வினய்’ பற்றி வரும் சிறு பிள்ளைப் பிராயத்து க்ரிக்கெட் நினைவுகள், நகம் கடிக்கும் பழக்கமென மிக நுண்ணியமாய் ஆராய்ந்து வினயின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளதாகப் படுகிறது. கதையோட்டத்தில், நேர்மையாக இருக்க விரும்பி வினய் படும் இன்னல்கள், அவற்றில் இருந்து எப்படி முன்னேறுகிறார் என்பனப் போன்ற கதையாடல்களை இயல்பானதாக உணர்ந்தேன்.
வினய்க்கும் மதுவிற்கும் காதல் அரும்பும் தருணங்களையும், அதனை இருவரும் வெளிக்காட்டிக்கொள்ளும் தருணங்களையும் இயல்பாக, மிக அழகாக எழுத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் ஷமீர். உண்மைக்கு முக்கியத்துவம் தரும் விதமாக அமைக்கப்பட்டுள்ள மதுவின் கதாபாத்திரம், இக்காலத்திலும் உண்மையை நேசிக்கும் சிலர் இருக்கின்றனர் என்ற நிம்மதியை தருகிறது.
“மொத தப்பை மட்டும் செய்யாதே, தப்பு பழகிடும்“
“ஒருவாட்டி வளஜ்சு கொடுக்க ஆரம்பிச்சா, அப்புறம் திரும்பி நேரா நிக்கவே முடியாது“
“உண்மையை மட்டும் சொல்லு, உனக்காக உண்மையை ’உண்மை மாதிரி’ சொல்லாத. எல்லாத்துக்கும் மேல அடுத்தவன் வயித்துல அடிக்காம உண்மையைச் சொல்லு”
போன்ற வசனங்கள், பலதடவை பலரிடம் கேட்டிருந்தும், கதையைப் படிக்கும் பொழுது பல அர்த்தம் தருவதாக உணர்ந்தேன்.
மகன் செய்யும் தவறை சுட்டிக்காட்டாது, அவனுள் இருக்கும் சரிகளை மட்டுமே கோடிட்ட வினயின் தந்தை முதிர்ந்த, பொறுப்பான அப்பாவாக கண்முன் விரிகிறார்.
உண்மை, புதுமை, யதார்த்த நடையென பல புதுமையான விடயங்களை உள்ளடக்கியது தான் ‘நியான் நகரம்‘. உதாரணத்திற்கு, சரிந்தது என்னும் வார்த்தையை சரிந்தவாரே அச்சடித்த விதம் ரசிக்க வைக்கிறது.
திரைப்படங்களின் முடிவில் டைட்டிலோடு திரையிடப்படும் ஃப்ளாப்பர் காட்சிகளை நின்று நிதானமாகப் பார்த்துக் கிளம்பும் புதுமை விரும்பிகளைப் போல், புத்தகத்தின் கடைசிப் பக்கம் வரை, புதிதாய் என்ன சொல்லியிருக்கிறார்கள் எனத் தேடிக்கொண்டிருந்தேன். அதை நிரூபிக்கும் விதமாக ‘Gift A Song, HI meeting, Haiku cinema ‘ எனப் பல புதுமைகளை உள்ளடக்கியுள்ளது, நகரத்தின் கடைசிப் பக்கங்கள்.
பாடல்களும் அருமையாக வந்துள்ளது. சூழ்நிலைக்கு தகுந்தாற்போன்ற வரிகளும் அதற்கேற்ற இசையும் அருமை. இசையோடு படிக்கும் போது இன்னொரு கோணம் தரும் என்று நம்புகிறேன். நாவலில் இசையின் துணையோடு பயணம் செய்ய பயணிக்க தயாராகிக்கொண்டிருக்கிறேன்
பாதையின் ‘Musical Novel’ முயற்சி வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.
நன்றி,
நாணல்
உனது கொஞ்ச நேரக்
கெஞ்சல்களுக்காகவே,
உயிர்க் கொள்கிறது
எனது கொஞ்ச நேரத் திமிரும்!!
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
அர்த்தமில்லா அர்த்தங்கள்
நிறைந்த அபத்தங்களும்
அர்த்தம் தரும்
நமது உரையாடல்களில் மட்டும்!!
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
காதலின் அழகைக் கூட்டும்
சுவாரசியமான தேடல்களுக்காகவே
ரகசியங்கள் காக்கப்படுகின்றன
காதலின் தேடலில்!!
கதைகள் பல பேசி
கருத்துக்கள் பல பரிமாறி
நம்பத்தகுந்த உறவானாய் நீ - என்
உயிரின் உறவான தோழன்!
பால் வேற்றுமை தாண்டிய
உறவாயியினும்
நிச்சயிக்கப்பட்ட பிரிவைத் தவிர்க்க
தவியாய் தவித்தும்
தவறவில்லை நம் பிரிவு!
காலங்கள் மாறினாலும்
மனித மனங்கள் விரிந்தாலும்
வாழ்க்கைக் கோட்பாடுகளின்
நாகரிகம் கருதி முளைக்கின்ற
திடீர் மரியாதைகளையும் அவதானிப்புகளையும்
சகஜமாக்கிக் கொள்ள முயற்சிக்கின்றேன்,
நீ என் தோழனானதால்…
நன்றி,
நாணல்