Sunday, 28 June 2009

முதல் முறையாக தமிலிஷில் பிரபல பதிவாக....

ஹையா முதல் முறையாக தமிலிஷில் எனது கவிதை பிரபல பதிவாக 28th June 2009 அன்று முகப்பில் சேர்க்கப் பட்டுள்ளது... வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி.... :))

நன்றி தமிலிஷ் ...

http://www.tamilish.com/story/78120

என்னை ஊக்கப்படுத்திவரும் அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி... :)

நன்றி,
நாணல்



Saturday, 27 June 2009

என்னை விட்டு பிரியாதே - யூத்ஃபுல் விகடனில்

இந்த கவிதை யூத்ஃபுல் விகடனில் வெளியிடப்பட்டுள்ளது ...

நன்றி யூத்ஃபுல் விகடன்..

http://youthful.vikatan.com/youth/nanalpoem27062009.asp

என்னை விட்டு பிரியாதே

வானவில் தோன்றவில்லை
மின்னல்கள் ஒளிரவில்லை
மழைச்சாரலும் அடிக்கவில்லை
புகையினூடே நீ வெளிவரவில்லை

இயல்பானதொரு நன்னாளில்
என்னுள் நீ நுழைந்திருக்க வேண்டும்...
நீ வந்த சுவடு தெரியாது
புது பொம்மை கிடைத்த
குழந்தையைப் போல் குதூகலித்திருந்தேன்...

தனியாளாய் உணர்ந்தேன்
எனக்காக நீயிருக்கிறாய்
என உணரும்வரை...
என் வெற்றியும் என் தோல்வியும்
உந்தன் கையில்தானடி...

பாசத்திற்கு பதில்
பணமென பழகிய நான்
பாசத்திற்கு அர்த்தம் கண்டு
உன் அன்பால்
உனக்கு அடிமையானேன்...

உன் வருகை
என் வாழ்வில் தந்த
திருப்புமுனையை திருத்திக்கொள்ள
தைரியமில்லையடி எனக்கு...
என் வாழ்விலிருந்து
உனை நீக்கும்
உரிமையுமில்லையடி எனக்கு...

நன்றி,

நாணல்




Thursday, 25 June 2009

நான் மென்துறை வல்லுநர் ...

வானுயர்ந்த கட்டிடங்களும்

இயற்கை நிறைந்த சூழலும்

கைக்கு அடக்கமாய் கைபேசியும்

தோளில் தொங்கியபடி மடிகணினியும்

பலவங்கி அட்டைகள் அடங்கிய பணப்பையும்

உயிர் வாழ பச்சைக் காய்கறியும்

எப்பொழுதாவது கேட்கும் தாய் மொழியும்

கனவில் எழுப்பும் தாயின் மொழியும்

நிஜத்தில் கேட்கத்துடிக்கும் தந்தையின் மொழியும்

அன்பால் கட்டிவைத்த மனைவியும்

காற்றில் கேட்கும் குழந்தையின் மழலையும்

என்றோ தொலைந்த உறவுகளும்

தோள் கொடுக்கும் தோழமையும்

"அவனுக்கென்ன அதிர்ஷ்டக்காரன்" என ஊராரின் பேச்சும்

சொல்லுமே நீ இழந்ததையும் கொண்டதையும்

நன்றி,

நாணல்






Saturday, 20 June 2009

தொலைந்த வைராக்கியம் ...

வருடக்கணக்கில் மிதிவண்டி
ஓட்ட கற்று தந்த
என் தம்பியிடம்
இன்று ஒட்டுகிறேன் பார்
என சபதமிட்டு
ஒரே நாளில் ஓட்டினேன்...
வருடக்கணக்கில் உன்னை நேசித்து
இன்றோடு உன்னை மறக்கிறேன்
என சபதமிட்டு
ஒரே நாளில் அது
கரைந்துபோவதேனோ...

நீ நேசித்த
என் கவிதைகளுக்கு
உன்படிப்பில் மட்டும் கவனம் செலுத்தென
நீ சொன்ன வார்த்தையால்
பல நாள் விடுமுறையளித்தேன் ...
நீ நேசித்த
என்னை
உன் வாழ்வில் மட்டும் கவனம் செலுத்தென
நீ சொன்ன வார்த்தையால்
என் வாழ்க்கைக்கு
விடுமுறையளிக்க முடியவில்லையேனோ ...


நன்றி,
நாணல்

Saturday, 13 June 2009

32 கேள்விகள் - இவ்வளவு பெரிய கேள்வித்தாளா....

இவ்வளவு பெரிய கேள்வித்தாளா.... (இதை பஞ்சதந்திரம் படத்தின் தேவயானி ஸ்டைலில் படிக்கவும்.. ) நெகட்டிவ் மார்க் எல்லாம் இருக்காதுன்னு நினைக்கறேன் ... ;)

01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

பொதுவாவே நமக்கு ஆர்வக்கோளாறு கொஞ்ச அதிகம்... அப்படி கவிதைங்கற பேர்ல கிறுக்கிட்டு இருந்தப்ப நமக்குன்னு ஒரு பட்டப் பேரு வெச்சுக்கிட்டா என்னனு ஒரு யோசனை... சரின்னு என் நண்பர் கிட்ட கேட்டேன்.. ஏதாவது நல்லாப் பேரு சொல்லுப்பான்னு... அவருக்கு இசைல ஆர்வமான்னு தெரியலை சுருதின்ற பேரு எப்படி இருக்குன்னு கேட்டாரு.. வேணும்னா அதையே வெச்சுக்கோன்னு சொன்னாரு.. பேரு நல்லா தான் இருக்கு...ஆனா வித்தியாசமா வேணும்னு(அப்ப எதுக்கு என் கிட்ட கேட்டன்னு அப்ப முனுமுனுத்திட்டு போயிட்டாரு, எதையோ வெச்சித் தொலைன்னு... ) மறுபடியும் யோசிக்க ஆரம்பிச்சேன்... அப்ப தான் நானும் என் தோழியும் அவங்க பிராஜக்ட் விஷயமா ஒருத்தரை பார்க்கப் போனோம்... அவர் பேரு என்னனு கேட்டா நாணல்னு சொன்னாரு... அட வித்தியாசமா இருக்கேன்னு அதை சுருட்டிடேன்... ;) அப்புறம் இமையில் ஐடி அது இதுனு உருவாக்கும் போது அந்த பேரை உபயோகிச்சி என் பேரு நாணல் என் பேரு நாணல்னு ஊர்பூரா சொல்லியாச்சு (நமக்கு பெயர் சஜஸ்ட் பண்ண நண்பருக்கு சேர்த்து தான், இதுவும் நல்லா தான் இருக்கு பரவாயில்லைன்னு பாராட்டையும் வாங்கிட்டோம்ல) ...அப்புறம் பிளாக் ஆரம்பிக்கும் போதும் அதே பேர்ல தொடங்கிட்டேன்..

இவ்வளவு பெரிய கொசுவர்த்திக்கு பின்னாடி இருக்கற பெயரை பிடிக்காம போகுமா.. நிஜ பெயர் எந்த அளவுக்கு பிடிக்குமோ அந்த அளவுக்கு இந்த பெயரும் பிடிக்கும்.. இன்னும் சொல்லப் போனா நிஜப் பெயரை விட "நாணல்" மிகவும் பிடித்த பெயர்...பெயருக்கு ஏற்ற மாதிரி இருக்கிறேனா தெரியாது.. இருக்க முயற்சிக்கிறேன்... :)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
வாழ்க்கைன்னு வந்துட்டா அழுகை சிரிப்பு எல்லாம் வரும் போகும் ... அழுகை வரும் பொது அழுதுட்டு அதை அப்பவே மறந்துடுவேன்..


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்கு ரொம்ப பிடிக்கும்... தமிழ் கையெழுத்து ரொம்ப பிடிக்கும்... அனால் இப்ப எழுதி பழக்கம் விட்டுப்போனதுனால சரியா எழுத வர மாட்டேன்கிறது... :(

4).பிடித்த மதிய உணவு என்ன?
பிடித்தது பிடிக்காதுன்னு தனியா இல்லை... நல்லா பசிக்கும் போதும் சூடான சைவ சாப்பாடு பிடிக்கும்...

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
இதுக்கு தமிழ் பிரியன் அண்ணா சொன்ன மாதிரி தான் ... எனக்கு ஒத்து போறவங்க கூட உடனே நட்பு வெச்சுப்பேன்..

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
தண்ணிரைப் பார்த்தாலே சந்தோசம் தான்...அது அலையடிக்கிற கடலா இருந்தா என்ன பொழியுற, அருவியா இருந்தா என்ன...

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்டிப்பா அவரோட கண்கள் பார்த்து பேசுவேன்.. அப்புறம் உதடுகள்ளேர்ந்து வெளி வர வார்த்தையின் உண்மையான நோக்கம் என்ன என்பதை கணக்கிடுவேன்...

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்த விஷயம் : உண்மையா இருக்கணும்னு இருப்பேன்..
பிடிக்காத விஷயம் : சில நேரம் ஏமாற்றத்தை தாங்க முடியாம மணிக்கணக்கா அழுவேன்.. அதுவும் நான் நெருக்கமா நினைக்கிற நண்பர்கள் , உறவுகள் பக்கத்துல இருந்துட்டா இன்னும் அதிகம் ...

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
மன்னிக்கவும்... இது அவுட் ஆப் சிலபஸ் ... ;)

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
காலத்தின் கட்டாயத்துனால தொலைத்த சில நண்பர்கள் ...

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
கிரீம் மற்றும் பிரவுன் கலவையில் ...

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
சமிபத்தில் வந்த குளிர் 100 படத்தில் இருந்து சிம்பு பாடிய "மனசெல்லாம்" பாடல்..

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு தான் எனக்கு பிடிக்க கலரு.. ;)

14.பிடித்த மணம்?
மல்லிகை பூவின் மணம் , மண் வாசனை , குழந்தையின் மீது வரும் பால் வாசனை..

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

சென்ஷி அண்ணா - பல வித்தியாசமான பதிவுகளை எப்படி தான் எழுதராறோன்னு படிப்பேன்..

மயாதி - ஒரு நாளைக்கு ரெண்டு மூனு கவிதைன்னு அசத்திகிட்டு இருக்கறவர்..


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
தமிழ் பிரியன் அண்ணா.. அவர் எழுதுற எல்லா பதிவுமே வித்தியாசமா அருமையா இருக்கும்... எனக்கு ரொம்ப பிடிச்சது இப்ப நான் எங்க இருக்கிறேன் ...

ஸ்ரீ ... இவங்க எழுதுற எல்லா கவிதையும் பிடிக்கும்.. எப்படிம்மா இப்படி யோசிக்கறேன்னு கேப்பவும்கேட்ப்பேன்.. வலை உலகில் எனக்கு கிடைத்த முதல் சகோதரியும் தோழியும் இவங்க தான்....

பூர்ணிமா - இவங்களை சமிப காலமா தான் தெரியும்..என்னோட நல்ல தோழி... பரிக்ஷித் பற்றி எழுதுற பதிவுகள் .. கவிதைகள்னு எல்லாம் பிடிக்கும்...

17. பிடித்த விளையாட்டு?
எதையும் உருப்படியா விளையாட தெரியாது... ஆனால் விளையாடுவேன்னு குதிசிக்கிட்டு போய் கை கால் வீ ங்கி அமைதியா வந்து உட்கார்ந்துடுவேன்.. ;)

18.கண்ணாடி அணிபவரா?
கணினியில் வேலை செய்யும் போது மட்டும்..

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
சண்டை காட்சிகள் நிறைய இல்லாமல் யதார்த்தமான படங்கள்...

20.கடைசியாகப் பார்த்த படம்?
மாசிலாமணி...

21.பிடித்த பருவ காலம் எது?
மழைக் காலம்..

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
மனம் என்னும் மார்க்கம் அப்படிங்கிற சுயமுன்னேற்ற புத்தகம் ...

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
கணக்குலாம் இல்லை... மாற்றனும்னு தோணும் போது மாற்றுவேன்.. இல்லை மாசக்கணக்கில் ஒன்றே குட இருக்கும்...

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் : மெல்லிய இசை , மழலையின் சிரிப்பு, கடலின் அலை
பிடிக்காத சத்தம் : இறைச்சல் எழுப்பும் வாகனத்தின் ஹார்ன் சத்தம்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
கோவா..

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
கவிதை எழுதுவது, மனிதர்களை படிப்பது, எதையும் வித்தியாசமாக செய்ய விரும்பும் குணம்...

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
பொய் பொய் பொய் ...

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எனக்கு பிடிக்காத ஒரு செயலை யார் சொன்னாலும் செய்ய மாட்டேன், அதேப் போல் பிடித்த செயலை யார் தடுத்தாலும் செய்வேன்... சுருக்கமா சொல்லனும்னா யார் பேச்சையும் கேட்க மாட்டேன்.. என் மனசாட்சியைத் தவிர..

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அப்படி ஒன்றுமில்லை ....

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
யார் கிட்டயும் ஏமாறாம யாரையும் ஏமாற்றாம வாழ ஆசை ..

31.கணவன் இல்லாமல் செய்ய விரும்பும் காரியம் ?
மன்னிக்கவும்... இது அவுட் ஆப் சிலபஸ் ...

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
இருப்பது ஒரு வாழ்க்கை ... அதில் யாரையும் புண்படுத்தாமல் நமக்கு விருப்பமானதை , மனசுக்கு நிம்மதி தரக் கூடியவைகளை செய்து சந்தோஷமா இருங்க... வாழ்க வளமுடன்!


பொறுமையா படித்தற்கு நன்றி..
நாணல்



Tuesday, 9 June 2009

நீயூட்டனின் மூன்றாம் விதி

புன்னகை மறந்த
இதழ்களுக்கு
புன்னகை பரிசளிக்க
மறப்பதில்லை
அந்நேரம் எவரேனும்
நீ புன்னகைக்க
பரிசளிப்பரென்று...

மலறாத முகங்களுக்கு
மலர வாய்ப்பளிக்க
மறப்பதில்லை
அந்நேரம் எவரேனும்
நீ மலர
வாய்ப்பளிப்பரென்று...

சோர்ந்த விழிகளுக்கு
வியப்பளிக்க
மறப்பதில்லை
அந்நேரம் எவரேனும்
உனை
வியக்கவைப்பரென்று...

உடைந்த நெஞ்சங்களுக்கு
உயிர் கொடுக்க
மறப்பதில்லை
அந்நேரம் எவரேனும்
உனை
உயிர்க்கவைப்பரென்று ...

-நன்றி,
நாணல்

Sunday, 7 June 2009

என் உலகம் ...



உன் கரத்தை பற்றினேன்
மூவுலகையும் சுற்றி வரவே
மாறாக
உனையே சுற்றி வருகிரேன்
நீயே என்னுலகமென்று..

நன்றி,
நாணல்



வெறுக்கவா - நேசிக்கவா


உனக்காக உனை
வெறுக்கத்தான் முயல்கிறேன்,
விடிந்ததும் வெளிவரும் கதிரவனாய்
உன் நினைவு
என்னுள் விடியலாய் பிரகாசிக்குதே ..

எனக்காக உனை
நேசிக்கத்தான் முயல்கிறேன்,
இருள் நீக்கும் நிலவாய்
உன் தவிர்ப்பு
என்னுள் பிரகாசமாய் தவிக்குதே ..

உனக்காக உனை
வெறுக்கவா - இல்லை
எனக்காக உனை
நேசிக்கவா..


நன்றி,
நாணல்




சொல்லபடாததும் கேட்கபடாததும் ...

"என்ன வேண்டும் ?"
என்ற உந்தன் கேள்விக்கு
"நீ தான் வேண்டும்"
என வேண்டாமல்
இன்றுனை வேண்டி
எங்கே சென்று உனை தேட....

"கடைசிவரை நீ இருப்பாயா?"
என்ற உந்தன் கேள்விக்கு
"கடைசி எது?"
என கேட்காது
தொலைத்த உனை
எங்கே சென்று உனை தேட....

நன்றி,
நாணல்

நன்றி யூத் விகடன்.. :))

ஒரு ரெண்டு மூனு வாரமா நான் படிக்கற ப்ளாக்கர்ஸ் எல்லாம் யூத் விகடன்ல தங்களோட பதிவு வெளியிட்டதை பார்த்து எனக்கும் ஆசை வந்து அனுப்பி வெச்சேன்.. நம்மளோடதை எல்லாம் எங்க வெளியிடபோறாங்கன்னு இருந்தேன்... பார்த்தா வெள்ளி கிழமை வெளியிட்டதா மின்னஞ்சல் வந்திருக்கு...

http://youthful.vikatan.com/youth/nanalpoem02042009.asp

நன்றி யூத் விகடன்.. :))

இந்த மாதிரி எங்க பதிவை வெளியிட்டு எங்களை ஊக்கப்படுத்தறதுக்கு நன்றி ....

உன்னை நான் மறக்கிறேனேன்று ...

எந்தன் சுவாசமாய் இருந்த நீ

எப்பொழுதாவது நுகரும் வாசமாய்

மாறிய போது உணர்ந்தேன்

உன்னை நான் மறக்கிறேனேன்று ...


எந்தன் பார்வையாய் இருந்த நீ

எப்பொழுதாவது ரசிக்கும் காட்சியாய்

மாறிய போது உணர்ந்தேன்

உன்னை நான் மறக்கிறேனேன்று ...


எந்தன் மொழியாக இருந்த நீ

எப்பொழுதாவது படைக்கும் கவிதையாய்

மாறிய போது உணர்ந்தேன்

உன்னை நான் மறக்கிறேனேன்று ...


எந்தன் கேள்வியாக இருந்த நீ

எப்பொழுதாவது கேட்கத்தோன்றும் பாடலாய்

மாறிய போது உணர்ந்தேன்

உன்னை நான் மறக்கிறேனேன்று ...


எந்தன் உணர்வாய் இருந்த நீ

எப்பொழுதாவது தேகம்தீண்டும் தென்றலாய்

மாறிய போது உணர்ந்தேன்

உன்னை நான் மறக்கிறேனேன்று ...


எந்தன் காதலாக இருந்த நீ

எப்பொழுதாவது நினைத்து கண்ணீர்விடும்

முதலும் கடைசியுமான காதலாய்

மாறிய போது உணர்ந்தேன்

உன்னை நான் மறக்கிறேனேன்று ...


நன்றி,

நாணல்




Saturday, 6 June 2009

பேசா மொழி - 3

அடைக்கப்பட்ட
வாசலையும் தட்டாமல்
உள்ளே நுழைவது
தான் காதல்

இரவெல்லாம் கண் விழித்து கண்ணைக் காக்கும் இமையைப் போல் அகிலனையே பார்த்து , அவன் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தனாலோ தெரியவில்லை, விடிந்தும், தன் வீட்டில் இருந்தும் மொழிக்கு ஏனோ அகிலனின் மனைவியாய் தான் வாழ்ந்த ஒருவித திருப்தி.. தனக்கு என்ன ஆயிற்று என்று யோசிக்க கூட முடியாமல் கனவு உலகத்தில் இருந்தாள்.. தன் அம்மா வருவதை கூட கவனிக்காமல் தனக்குள்ளேயே சிரித்து அகிலனை நினைத்து உருகிக் கொண்டிருந்தாள்...

மொழி... அப்படி என்ன மா யோசிக்கற...

ஒன்னும் இல்லை மா.. ரெண்டு நாளா சரியா தூங்கலை இல்லையா
..அதான் ..

ஓ ஓ ... என் கிட்ட பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டியா ...

பொய்யா அப்படி எல்லாம் இல்லை மா.. நிஜமா சொல்றேன்...

மொழி, நான் உன் அம்மா... நீ ததகா பிதகானு பேசின மழலை மொழியே புரிஞ்சிகிட்டவ நான்.. சரி சொல்லு யாரு அந்த பையன்?

இப்படி ஒரு கேள்வியை சற்றும் எதிர்பார்க்காததால் திடுக்கிட்டு நின்றாள்... இருந்தும் ஒருவாரியாக சமாளித்துக் கொண்டு ...

என்னமா ஆச்சு உங்களுக்கு, சம்மந்தமே இல்லாம கேள்வி கேக்கறீங்க..

நல்லாவே நடிக்கறமா நீ..
கொஞ்ச நாளா உன்னை நானும் கவனிச்சிட்டு தான் வரேன் ... சொல்லு... தாத்தா பாட்டியும் உன் கல்யாணத்தை பத்தி பேச தான் எங்களை ஊருக்கு வர சொன்னாங்க... சொல்லு மா உன் மனசுல யாராவது இருந்த சொல்லு...

மா , என்ன மா, உங்களுக்கு தான் என்னை பத்தி தெரியுமே , நான் அப்படி பட்ட பொண்ணு இல்லை மா..

ஹ்ம்ம் ஹ்ம்ம் அப்ப உன் தாத்தா ஒரு இடம் சொன்னாரு , ஜாதகமும் பொருந்தி இருக்கு , குடும்பமும் நல்ல குடும்பம் , என்ன சொல்ற நீ..

தன் மனதில் யாரும் இல்லையென தனக்கு தானே சொல்லிக் கொண்டாலும், இப்படி ஒரு கேள்வியை கேட்டதும் ஏனோ அகிலனின் முகம் தான் மனதில் வந்தது ... அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல் ... கலங்கிய கண்களுடன் தன் தாயை நோக்கினாள்..

அப்படி வா என் செல்ல மகளே... இந்த கண்ணீருக்கு என்ன அர்த்தம்.. என்று கண்களை சிமிட்டினாள் மொழியின் அம்மா ...

மா கண்ணீரா , அதெல்லாம் ஒன்னும் இல்லை, ஏதோ தூசி விழுந்திருக்கும் போல..

இப்படியே சமாளித்து வந்தாலும் , ஒரு கட்டத்துக்கு மேல் மொழியால் அகிலனை பற்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை... முதலில் அகிலனை சந்தித்து , அகிலன் தன்னிடம் அவனது விருப்பத்தை சொன்னது, டூரில் நடந்தது என எல்லாத்தையும் சொல்லி , என்ன செய்வது என்று தெரியாது நிற்கிறேன் மா என்று அழுதுவிட்டாள்..

ஹே மொழி, என்னது இது சின்ன குழந்தை மாதிரி... உனக்கு அவரை பிடிச்சிருக்குன்னா என் கிட்ட சொல்றதுக்கு என்ன மா ...

இல்லை மா, என்னை எவ்வளவு கஷ்டப் பட்டு வளர்த்தீங்க ..இப்ப நான் பாட்டுக்கு என் இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணிகிட்ட தப்பு இல்லையா..

அட அசடே...
இதுல என்ன டா தப்பு இருக்கு.. படிக்கற வயசுல படிக்காம காதல்னு சுத்தின எல்லா அப்பா அம்மாவுக்கும் தான் கோவம் வரும்.. இப்ப நீ பெரிய பொண்ணாயிட்ட ... உனக்கும் நல்லது கெட்டது எதுன்னு தெரியும் இல்லையா..

ஹ்ம்ம் ஆமா..

அப்புறம் ஏன் மா இப்படி கொழப்பிக்கற ... எப்படியும் யாரோ ஒருத்தர் சொல்ற பையனை நல்லவனா நல்ல குடும்பம்னு பார்த்து தான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறோம்.. இப்படி மூணாவது மனிஷங்க சொல்ற பையனை பத்தி யோசிக்கும் பொது, என் பொண்ணு நீ, நீ சொல்ற பையனை பத்தி யோசிக்க மாட்டோமா... நல்லப் பொண்ணு மா நீ..

அம்மா...

ஹ்ம்ம் நிஜமா தான்... அகிலனை நம்ம வீட்டுக்கு வர சொல்லு... பார்த்து பேசிடலாம்..

மா..எப்படி மா அவரை மட்டும் தனியா நம்ம வீட்டுக்கு கூப்பிடறது...

ஆமா இதையும் என் கிட்டயே கேளு.. அடுத்த வாரம் உனக்கு பிறந்த நாள் வருது இல்லையா , அதுக்கு உன் நண்பர்கள் எல்லாரையும் வீட்டுக்கு அழை, அகிலன் உட்பட... அவரைப் பார்த்துட்டு அப்புறம் நாங்க எங்க முடிவை சொல்றோம்... சரியா...

முகத்தில் 100 வாட்ஸ் எரிந்தார் போல் பிரகாசிக்க வெட்கத்துடன் எழுந்து ஓடினாள்..

ஹ்ம்ம் இந்த காலத்து பசங்க உண்மையிலேயே நல்ல பசங்க தான் ... சுய நலமா யோசிக்காம எவ்வளவு பெருந்தன்மையா இருக்காங்க ... "வாழ்க வளமுடன்" என்று மனதார வாழ்த்தினாள் ..

அடுத்த நாள் அலுவலகத்திற்கு சென்று தன் நண்பர்களையும் அகிலனையும் தன் பிறந்த நாளிற்காக வீட்டிற்கு அழைத்தாள்...

அகிலன் முதலில் வர மறுத்தாலும் , மொழியின் பிறந்த நாளன்று முதல் ஆளாக மொழியின் வீட்டிற்கு வந்து விட்டான்.. ஒருவர் பின் ஒருவராக வர, பிறந்த நாள் விழாவும் சிறப்பாக நடந்தேறியது... அகிலனை கவனிக்கவும் தவறவில்லை மொழியின் தாய் தந்தை .... அனைவரும் மொழிக்கு பரிசு கொடுத்த பின் அகிலன் மட்டும் தயங்கி தயங்கி நின்று கொண்டிருந்தான்... இதை உணர்ந்த மொழியின் தந்தை , என்ன அகிலன் நீங்க பரிசு எதுவும் கொண்டு வரலியா ...

இல்லைங்க , என்ன பரிசு கொடுக்கறதுன்னு தெரியலை அதான்...

சரியா போச்சு போ.. சரி உன் வீடு எங்கபா?

பெரம்பூர் சார்..

அப்ப தினமும் ஆபிஸ் பஸ்ல வரியாபா...

ஹ்ம்ம் ஆமாங்க..

கஷ்டமா இல்லையா..இங்கயே வீடு எடுத்து தங்கிடலாம் இல்லை...

தங்கலாம் , ஆனா.. தினம் இரவாவது அம்மா கையால சாப்பிடனும்... அந்த ஒரு வேலை சாப்பட்டுக்கு தான் மணி எத்தனை ஆனாலும் வீட்டுக்கு போய்டுவேன்..

ஹ்ம்ம் ஹ்ம்ம் ....

இப்படி இடையிடையே அகிலனிடம் நேர்காணலையும் முடித்துவிட்டு அனைவரும் உணவருந்தினர்.. விடைப்பெற்றுக் கொள்ளும் போது,

மொழி, உங்களுக்கு பரிசு கொடுக்கணும்னு எனக்கும் ஆசை தான்..ஆனா இப்ப நான் கொடுத்தேன்னா, அதுல என் காதலும் தெரியவரும், அதான் கொடுக்கலை .. மன்னிச்சிடுங்க... by the way, once again, my hearty wishes... என்று சொல்லி பதிலையும் எதிர்பாராது கண்ணியமாக சென்றுவிட்டான்..

மொழியின் வீட்டிலோ அகிலனுக்கு மார்க் கூடிக்கொண்டே போனது .. ஒரு வாரம் தீர விசாரித்த பின்னர்...
அகிலனின் பெற்றோரிடம் பேசுவது என முடிவு செய்து, பேசி அவர்களுக்கும் மொழியை பிடித்து விட .. அகிலனை அழைத்து உன் முடிவு என்னனு சொல்லுப்பா என்று அகிலனின் பெற்றோர் கேட்டனர்...

ஹ்ம்ம்
எனக்கு சம்மதம் ஆனா பொண்ணு வீட்டுல முக்கியமா மொழிக்கு சம்மதமா?

நல்ல கேள்வி.. பெரியவங்க நாங்க பேசிட்டோம், மொழி உன் ஆபிஸ் தானே , நீயே பேசி தெரிஞ்சிக்கோ..

அப்பா அது நல்லா இருக்காது பா...

இதுல என்ன தம்பி இருக்கு... நீயே பேசிடு... என்று சொல்லி மொழியின் வீட்டு தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு மொழியிடம் அகிலனை பேச வைத்தார் ..

மொழி, இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை.. நம்ம வீட்டு பெரியவங்களுக்காக நீங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க வேண்டாம்... உங்களுக்கு மனப்பூர்வமா சம்மதம்னா மட்டும் சொல்லுங்க ...

சம்மதம் இல்லேன்னா என்ன பண்ணுவீங்க..

இந்த கல்யாணத்தை நிறுத்திடுவேன் மொழி... அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் சொல்றேன், உங்களை காயப்படுத்தற எதையும் நான் செய்ய விரும்பமாட்டேன்...


சரி, நான் இல்லாத வாழ்கையை உங்களால நினைச்சு பார்க்க முடியுதா..

ஹ்ம்ம் அது கொஞ்சம் கஷ்டம் தான்...ஆனா அது என்னோட பிரச்சனை நான் பார்த்துக்கறேன்...

என்னை பார்த்துப்பீங்களா ..

அதான் சொன்னேனே , என் பிரச்சனையை
நான் பார்த்துக்கறேன்...

அட மண்டு (மெல்லிய குரலில்) , நான் அதை கேக்கலை, "
என்னை பார்த்துப்பீங்களா"னு கேட்டேன்..

என்ன என்ன திரும்ப சொல்லு...

எத்தனை தடவை சொல்றது...சொல்ல முடியாது போடா..

மொழி... இது கனவா நிஜமா.. ஐயோ ரொம்ப சந்தோஷமா இருக்கு மொழி... ரொம்ப ரொம்ப நன்றி... என்று சொல்லி துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தான்..

மொழி, மொழி ஒரே ஒரு முறை திருப்பி சொல்லு...

ஹ்ம்ம் ஹ்ம்ம் "என்னை உன் கண்ணுக்குள் வைச்சு ஆயுசுக்கும் பத்திரமா பார்த்துக்குவியாடா லூசு"........

- முற்றும்


பேசா மொழி - 1

பேசா மொழி - 2

பேசா மொழி - 2

தனிமையும் மௌனமும்
பேசிக்கொள்ளும் நேரம்
மனதின் பாரம்
கூடிக் கொண்டே போகும்...


அகிலனின் கவிதையை படித்ததாலோ இல்லை , நண்பர்களின் பிரிவோ தெரியவில்லை மனம் கனமாகிக் கொண்டிருந்தது...

அவளின் கைபேசி ஒலிக்க எடுத்து பேசினாள்...

ஹெலோ, சொல்லுங்க அப்பா...

என்னமா இன்னும் வீட்டுக்கு புறப்படலியா... உன்னை ரயில் நிலையத்தில் விட்டுட்டு நானும் உங்க அம்மாவும் ஊருக்கு போகலாம்னு இருக்கோம்...

என்னப்பா என்ன திடீர்னு .. யாருக்காச்சும் உடம்பு சரி இல்லையா?

அப்படி எல்லாம் இல்லைமா.. சும்மா தான் நீயும் வீட்டுல இல்லை, அதான் தாத்தா பாட்டியை பார்த்துட்டு வரலாம்னு...

ஓ சரி சரி... நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்பா... கொஞ்சம் வேலை இருக்கு , முடிச்சிட்டு கிளம்பறேன்... வீட்டுல பேசிக்கலாம்... என்று தொடர்பை துண்டித்தாள்...

அட இது என்ன புது கதை.. இப்ப நம்ம வீட்டுலையும் இருக்க முடியாது... சரி தாத்தா பாட்டியை பார்க்கபோலாம்னா , டூர்க்கு ஏன் போகலைன்னு கேட்டா என்ன சொல்றது... அம்மா, என் கண்ணசைவ வெச்சியே நான் என்ன நினைக்கறேன்னு கண்டுபிடிச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பாங்களே... அப்ப வேற வழியே இல்லையா டூர்க்கு போயிடலாமா... ஹ்ம் அது தான் சரி...அகிலனுக்காக நாம ஏன் போகாம இருக்கும்.... நம்ம friends கூட நாம போகப் போறோம்.. இதுல அகிலன் யாரு.. சரி கிளம்பலாம் , இப்ப வீட்டுக்கு போனா தான் , ரயில் பிடிக்க வசதியா இருக்கும்...

உடனே மறைமலைநகரில் இருக்கும் தனது வீட்டிற்கு செல்கிறாள்....
எல்லாம் எடுத்து வைத்து கிளம்புவதற்குள் மணி 5 ஆகி விட்டது... இனி எக்மோர் செல்ல முடியாது அதனால் என்ன செய்யலாம் என யோசிக்கையில், அவளின் அப்பா, எப்படியும் செங்கல்பட்டு வழியா தானே ரயில் போகும், அங்க போயி ஏறிடு... எந்த கோச் தெரியுமா?

S2 பா...

அப்ப சரி வாமா, போகலாம்...

சரி, போயிட்டு வறேன் மா...

சரி மா பத்திரமா போயிட்டு பத்திரமா வா...

சரி மா என்று தன் தாயிடம் விடைபெற்றுக்கொண்டாள்...

ஏன் மா, உன் friendsகு கால் பண்ணி, செங்கல்பட்டுல ஏறிக்கறேன்னு, உனக்காக காத்திருக்க போறாங்க....

இல்லை அப்பா, இருக்கட்டும்,, என்னை தேடட்டும்.. அவங்களுக்கு சொல்லாம நான் அவங்களுக்கு இன்ப அதிர்ச்சி தரலாம்னு இருக்கேன்...

ஹ்ம்ம்ம் எல்லாம் விளையாட்டு தான் மா உனக்கு...

மணி 5.45 ஆனது... 6.35 கு ரயில் வருவதாக ஒலிக்கப் பட்டது...

சரி மா, சாப்பிட ஏதாவது வாங்கி வரவா...

ஒன்னும் வேண்டாம் பா.. பசி இல்லை...

ஒரு வழியாக சொன்ன நேரத்திற்கு ரயில் வந்தது... மொழியை இங்கு யாரும் எதிர் பார்க்காததால் , வெளியே யாரும் வரவில்லை...

சரி பா..போயிட்டு வறேன், தாத்தா பாட்டியை கேட்டதா சொல்லுங்க...

ஹ்ம்ம்ம் பத்திரமா போயிட்டு வா மா...

S2 வில் தன் பெயர் இருப்பதை உறுதி செய்துகொண்டு ரயிலில் ஏறினாள்... வாசலில் இருந்து கொண்டு தன் தந்தையை வழி அனுப்பி விட்டு, தன் நண்பர்களை தேடி உள்ளே சென்றாள்...

முதலில் அவளின் கண்ணில் பட்டது அகிலன் தான்...
அகிலனுக்கோ எதிர்பாரா நேரத்தில் மொழியைப் பார்த்தது ஒரே குதூகலம்... அவனின் குதூகலம் மொழிக்கும் தொற்றிக்கொண்டது,.. இருந்தும் அதை வெளியில் காட்டக் கூடாது என தீர்மானமாக இருந்ததால்... ஒருவாரு சமாளித்தாள்...

ஹெய் மொழி.. வாங்க வாங்க .. அதிசயம்...

அதற்குள் செல்வி அந்த பக்கம் வர, ஹெய் மொழி வாங்க அம்மணி ... என்று அவளைப் பார்த்த சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தாள்...

மொழி வந்ததில் அவளின் நண்பர்கள் அனைவர்க்கும் ஒரே சந்தோசம் ..
இரண்டு நாள் புது புது இடங்களைப் பார்த்ததில் அனைவரும் குதூகலத்தில் இருந்தனர். மொழிக்கு மட்டுமேனோ சகஜமாக இருக்க முடியவில்லை... எங்கு திரும்பினாலும் அகிலன் தான் அவளின் கண்ணில் பட்டான்... அகிலன் வந்திருந்த அனைத்து மக்களிடமும் நட்பாகி இருந்தான்.. மொழிக்கு இது வியப்பாகவே இருந்தது..எப்படி இவனால் மட்டும் அனைவரிடமும் நன்றாக பேச முடிகிறதென்று.. காதலில் மட்டும் தன் தனக்கு நேரெதிர் என்றால், இதிலுமா என்று, சிரித்த முகத்துடன் இருக்கும் அகிலனை தன்னை அறியாமல் பல நேரம் பார்த்து ரசித்திருக்கிறாள். இதை மற்றவர்கள் கவனித்தார்களோ தெரியாது ஆனால் அகிலன் கவனிக்க தவறியதில்லை..

சரி பேசலாம் என்று அருகில் சென்றாலோ , இவன் வருவதை அறிந்த மொழியின் மனம் பதபதைக்க ஆரம்பித்துவிடுகிறது... இதனால் பூத்திருந்த முகம் வாடிவிடுகிறது.. இதை புரிந்த அகிலன் மொழியிருக்கும் பக்கம் செல்லாமல் தவிர்த்து வந்தான்.. இருந்தும் அங்கும் இங்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள தவறியதில்லை.. கண்ணாமூச்சி ஆடிக்கொண்டே இரண்டுநாட்களும் சென்று விட்டது..

சென்னைக்கு திரும்புவதற்காக , ரயிலில் அவரவர் இடங்களில் சென்று அமர்ந்து விட்டனர். அங்கங்கு அவரவர்க்கு விருப்பமான கோச்சில் அமர்ந்து நண்பர்களுடன் பேசி அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்..

மொழி மற்றும் அவள் நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு அகிலனும் வந்து கூட்டத்தில் ஐக்கியமானான்... எதிர்பாரா நேரத்தில் அகிலன் அங்கு வந்தது மொழிக்கு சங்கடமாக இருந்தாலும், அவளை அறியாமல் அவனின் வரவை ரசித்தாள்.. நண்பர்களுக்கும் இந்த கண்ணாமூச்சி பற்றி தெரியாது ஆதலால், அகிலனின் வரவை வேண்டாமென்று தடுக்கவும் இயலவில்லை..

பாட்டுக்கு பாட்டில ஆரம்பித்து , இன்னும் பல விளையாட்டுகளை விளையாடிய வண்ணம் ஓடும் ரயிலில் பொழுதை கழித்துக்கொண்டிருந்தனர் ..

சரி, கொஞ்ச நேரம் விளையாட்ட ஓரம்கட்டிடு உருப்படியா ஏதாவது பேசுவோம் என்று ஆரம்பித்தான் சத்யா ..

ஹ்ம்ம் நைஸ் .... செல்வி, நீங்க சொல்லுங்க உங்களை வருங்கால புருஷன் எப்படி இருக்கணும்னு எதிர்பார்க்கறீங்க .. என்றான் அகிலன்...

பெருசா ஒன்னும் கனவெல்லாம் இல்லை.. அப்பா அம்மா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோன்னு யாரை கை காட்டுறாங்களோ அவங்கள பண்ணிக்க வேண்டியது தான்...

அஹ அஹ ... மழுப்பாதீங்க செல்வி... சும்மா சொல்லுங்க ..

நிஜமா இல்லை அகிலன், இருந்தா உங்க கிட்ட சொல்லாமலா... ஹே கதிர் , நீ சொல்லு..

என்ன செல்வி , கதிர் பாவம் காதலிய ரெண்டு நாளா பார்க்கலைன்னு வருத்தமா இருக்கான்.. அவனை போய் ...

டேய் சத்யா , என்னை வம்பு இழுக்கலைன்னா உனக்கு தூக்கம் வராதா... சரி நீ சொல்லு , உன் கனவு தேவதை எப்படி இருக்கணும்னு...

ஹே கனவுன்னு சொன்ன உடனே தான் நியாபகம் வருது... கனவுல ஒரு பொண்ணைப் பார்த்தேன்.. கட்டினா அவளைத் தான் கட்டணும்னு முடிவு பண்ணிட்டேன்டா..

டேய் , இந்த கதை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே.. இந்த நினைத்தேன் வந்தாய் படமெல்லாம் இங்க ஓட்டாத ..

அப்படி போடு கவி... ஆமா இங்க ரெண்டு ஜீவன் ரொம்ப நேரம் அமைதியாவே இருக்கு ... சரி மொழி நீ சொல்லு , அப்புறம் அகிலன் நீங்க சொல்லுங்க ...

கதிர் , நான் அமைதியா இருக்கறது உனக்கு பிடிக்கலையா... என்னை பத்தி தான் உங்களுக்கு தெரியுமே , புதுசா சொல்றதுக்கு ஒன்னும் இல்லை ...

அதெல்லாம் ஒத்துக்கப்படாது... சொல்லியே ஆகணும் ... பரவாயில்லை சொல்லு மொழி, நாங்க தப்பா எடுத்துக்க மாட்டோம்...

ஹ்ம்ம் என்ன எல்லா பொண்ணும் எதிர்பார்க்கிறா மாதிரி தான், என் உணர்வுகளை மதிக்கணும் , எனக்கு புருஷனா மட்டுமில்லாம ஒரு நல்ல நண்பனா இருக்கனும் ...

ஹ்ம்ம் ஹ்ம்ம் சரி சரி, அகிலன் நீங்க சொல்லுங்க ..

எனக்கு கனவுல்லாம் பெருசா இல்லைங்க கதிர்.. ஒன்னே ஒன்னு தான் முக்கியம், என் அம்மாவை தன் அம்மாவா பார்த்துக்கணும் அவ்வளவு தான்.. அப்படி ஒருத்தி கிடைச்சா அவளை ராணி மாதிரி பார்த்துப்பேன் என்று சொல்லி மொழியைப் பார்த்தான்.. உடனே தலை குனிந்து விட்டாள் மொழி..

ஹ்ம்ம் ஹ்ம்ம் சரி சரி எல்லாரோட கனவும் நனவாகட்டும்... சரி இதுல காதல் வயப்பட்டிருக்கவங்க யார் யார்லாம்னு கை தூக்குங்க பார்க்கலாம் என்று தன் கையை உயர்த்திய படி கதிர் கேட்க, சிலர் மட்டும் கை தூக்கினர்(அகிலன் உட்பட)...

சரி , இருதலை காதல் .....

சொல்லி முடிக்கும் முன் வேகமாய் கையை தூக்கினான் அகிலன்...

அப்படி போடுங்க அகிலன், யாரு அவங்க...

இப்ப இல்லை சத்யா , சீக்கிரம் நானே சொல்றேன் ...

மொழிக்கு ஒன்றும் புரியவில்லை.. தன்னை வைத்து தான் அகிலன் சொன்னானா என்று குழம்பிக் கொண்டிருந்தாள்..

இப்படியே பேசிக்கொண்டிருந்ததனால், நேரம் போனதே தெரியவில்லை.. 12 மணிக்கு மேலாகி விட்டது.. அவரவர் பெர்த்தில் படுக்க , அகிலன் மட்டும் வேறுவொரு கோச்சிற்கு செல்ல வேண்டியிருந்தது .. ஆனால் கதவு அடைக்க பட்டிருந்ததால் , மொழியின் கோச்சிலேயே படுக்க வேண்டி இருந்தது...

அகிலன், நீங்க இங்க படுத்துகோங்க நானும் மொழியும் கொஞ்ச நேரம் பேசிட்டு தூங்கறோம், எப்படியும் இன்னும் 5 மணி நேரத்துல மொழி செங்கல்பட்டுல இறங்கிடுவா என்று சொல்லி , மொழியும் கவியும் சைட் பெர்த்தில் அமாந்து பேசிக் கொண்டே இருந்தனர்.. சிறிது நேரம் பேசிக் கொண்டே கவியும் உறங்கிவிட்டாள்....மொழிக்கு மட்டும் தூக்கம் வரவில்லை.. எதிரில் படுத்துறங்கிக் கொண்டிருந்த அகிலனையே பார்த்துக்கொண்டிருந்தாள்...

சாளரத்தின் வழிவரும் சாரல்
மூக்கின் நுனி தொட்டுசெல்லும் மண்வாசனை
காலத்தோடு போட்டிபோட்டு வேகமாய் ஓடும் ரயில்
மெதுவாய் எனை நலம் விசாரிக்கும் தென்றல்
கூட்டத்தில் வீசும் மல்லிகையின் வாசம்
இருப்போரிருந்தும் யாருமில்லா என் தனிமை
எனையறியாமல் என் கைகள் உன்பெயரை எழுதிடுதே ....

-
மொழி

- மொழி கவிதையாகலாம்

பேசா மொழி - 1

ஹே மொழி.. நாம இந்த வாரம் போகப்போற டூர்க்கு வர இல்லை....

இல்லைமா வருவேன்னு தோணலை... கொஞ்சம் வேலை இருக்கு கவி... சரி அதை விடு, யார் யார்லாம் வராங்க சொல்லு...

என்ன கனிமொழி இது.. ( கனிமொழி தான் முழுப் பெயராயினும், மொழி என்று தன்னை அழைப்பதையே அவள் விரும்புவாள் .. அவள் நண்பர்கள் அப்படி தான் அவளை அழைப்பார்கள்) நீ தான் இந்த டூர் போறதுக்கு முக்கிய காரணமே, இப்ப வர மாட்டேன்னு சொல்றியே... என்னாச்சு உனக்கு, ஒரு வாரமா உன் நடவடிக்கை எதுவும் சரி இல்லையே... வீட்டுல எதாவது பிரச்சனையா?

அதெல்லாம் ஒன்னும் இல்லை கவி... அப்படி எதாவது இருந்தா உன் கிட்ட சொல்லாமலா என்று புன்னகைத்தாள்...

என்னமோ போ... எதைக் கேட்டாலும் இப்படி சிரிச்சே மழுப்பிடு....

ஹ்ம்ம்ம் எல்லாரும் வராங்க தானே...

உன்னை தவிர எல்லாரும் வராங்க மொழி .. நீயும் வாயேன்....

சரி டா... நான் சொல்றேன்.. எதுக்கும் வீட்டுல ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றேன்... சரியா....

ஹ்ம்ம் சரி... சீக்கிரம் நல்ல முடிவா சொல்லு.... சரி மதியம் பார்க்கலாம் என்று விடைபெற்றுக் கொள்கிறாள் கவிதா....

யப்பா ஒரு வழியா இவளை சமாளிச்சிட்டோம் , மத்தவங்களை எப்படி சமாளிக்கறது... ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு எதையோ யோசித்த வண்ணம் நாற்காலியில் சாய்கிறாள் கனிமொழி ...

ஒரு வாரத்துக்கு பின்னோக்கி செல்கிறது அவளின் நினைவு...

கனிமொழி... சாப்பிட போகலியா? என்ற குரல் வந்த இடம் திரும்பிப் பார்க்கிறாள்... 3 மாதங்களுக்கு முன் தன் குழுவிற்கு புதிதாய் வந்த அகிலன், இவளின் பதிலுக்காக காத்திருப்பது தெரிந்தது...

இல்லை அகிலன், போகனும்... கவிதா மீட்டிங் போயிருக்கா.... சத்யா நம்ம டூர்க்கு டிக்கெட் புக் பண்ரதுக்கு போயிருக்கான்... கதிர்க்கு இன்னைக்கு CompOff ,வீட்டுல இருக்கான்... செல்விக்கு உடம்பு சரி இல்லைன்னு லீவ்ல இருக்கா... அதான் என்னப் பண்ணலாம்னு யோசிட்டு இருக்கேன் .. ( இவர்கள் தான் அலுவலகம் சேர்ந்த நாள் முதல் மொழியின் உலகம்...இதில் ஒருவர் இல்லையெனினும் மொழிக்கு ஏதோ மாதிரி இருக்கும்... ஒரு சேர , நால்வரும் இல்லாதது, தனியாய் உணர்ந்தாள்... அகிலனும் வந்த நாளில் இருந்து அவ்வப்பொழுது இவர்கள் கூட்டத்தில் ஐக்கியம் ஆவது உண்டு... ) நீங்க என் கூட வரீங்களா தனியா போக ஒரு மாதிரி இருக்கு...

ஹ்ம்ம் சரி போலாமே... எனக்கும் யாருமில்லை இன்னைக்கு, உங்களை கூப்பிடலாம்னு தான் வந்தேன்...

ஓ அப்ப சரி போகலாம் வாங்க...

ப்ரொஜெக்ட் இல் ஆரம்பித்து ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியது வரை பேசி முடித்தனர்... எல்லாம் பேசிய பின் சில நேரம் மௌனம் நீடித்தது...

என்ன அகிலன், அமைதியாகிட்டீங்க... ஏதோ தீவிரமா யோசிட்டு இருக்கற மாதிரி தெரியுது.. அப்படி என்ன யோசனை...

ஹ்ம்ம் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே...

ஹெய் பொய் சொல்லாதீங்க... பரவாயில்லை சொல்லுங்க...

ஒன்னும் இல்லை உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கனும், ஒரு விஷயம் சொல்லனும் , அதான் எதை முதல்ல செய்யலாம்னு யோசிட்டு இருக்கேன்...

அஹ் அஹ் புதிர் எல்லாம் பலமா இருக்கே...

பெரிய புதிரெல்லாம் இல்லை, சரி நீங்க சொல்லுங்க... எதை முதல்லை சொல்லட்டும்...

சிறிது நேரம் யோசித்து... ( அட என்ன இது இப்படி நம்மையே சாட்சிக்கு கூப்பிட்டாரே... சரி முதல்ல கேக்கவந்ததை கேப்போம்... அவரோட மனசுல என்ன இருக்குனு தெரிந்து கொள்வோம்... ) , சரி என்ன கேட்கனுமோ அதை கேளுங்க ...

நான் உங்களை மொழின்னு கூப்பிடலாமா?

அட என்ன கேள்வி இது, உங்களுக்கு தான் தெரியுமே என்னை மொழின்னு கூப்பிட்டா எனக்கு ரொம்ப பிடிக்கும்னு...
என்னது இது சின்ன புள்ளைத்தனமா என்று சிரித்தாள்.....

வெளியே சிரித்தாலும் உள்ளுக்குள் பதற்றமாக தான் இருந்தாள்.அகிலனும் பதற்றத்துடன் இருந்ததால் அவளின் பதற்றத்தைக் கவனிக்கவில்லை... மொழி அகிலனிடமிருந்து எதிர்பார்த்த கேள்வி வேறு, அகிலன் கேட்டதோ வேறு... யாரையாவது காதலிக்கிறாயா என்ற கேள்வியை எதிர்பார்த்து இருந்தாள். "இல்லை" என்ற பொய்யை எப்படி உண்மையைப் போல் சொல்வதென்று தன்னை தயார் படுத்திக் கொண்டது வீணாகப் போய்விட்டது...அகிலனை வந்த நாளே மொழிக்கு பிடித்திருந்தது... இருந்தும் தன் நட்பு வட்டத்திற்குள் எப்போதும் இருந்ததால் , அகிலனை பற்றி யோசிக்க அவளுக்கு இயலவில்லை... நண்பர்கள் தன் அருகில் இல்லாத சமயம் , தனிமையாய் உணரும் சமயம், எப்படி தான் அகிலனுக்கு தெறிகறதோ தெரியாது, மொழியின் இடத்திற்கு வந்து விட தவறியதில்லை... வந்து பேசிவிட்டும் செல்லும் போதெல்லாம், அகிலனின் மீதான தன் விருப்பம் கூடிக்கொண்டே இருக்கிறதென்பதை புரிந்தும் புரியாதவள் போல் நடந்து கொண்டாள்...

அப்பா அம்மாவின் செல்லமகளாய் இருக்கும் மொழிக்கு காதல் என்ற வார்த்தை கூட பிடிக்காது... நம்மை இந்த நிலைமைக்கு கொண்டு வந்த தாய் தந்தைக்கு தான் தன் திருமணம் பற்றி முடிவெடுக்க அதிகாரம் உண்டென்பது இவளின் விவாதம்... இவளைப் பற்றி தெரிந்ததனால் யாரும் இவளிடம் காதல் பற்றி பேச மாட்டார்கள்... கதிர் தன்னுடன் கல்லூரியில் பயின்ற ஒரு பெண்ணை விரும்புவதாக தெரிந்தபின், ஒரு வாரம் போராடிப் பார்த்தாள்... கதிர் செய்வது தவறென்று..கதிர் விட்டுக் கொடுக்காதலால், பெற்றோறை மீறி திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்ற வாக்கிற்கு பிறகே கதிரிடம் பேச ஆரம்பித்தாள்... தனக்குள் நடக்கும் இந்த மாறுதலையும் நிராகரித்து வந்தாள்...தனக்குள் காதல் வராதென்றும், அப்படி வந்தாலும் தன் மனதை கட்டுபடுத்திக் கொள்வேன் என்று தீர்மானமாக இருந்தாள்...

இதனாலேயே அவளிடம் யாரும் காதல் என்ற வார்த்தையை கூட சொல்லமாட்டார்கள்... ஆனால் அகிலன் மட்டும், அவளிடம் அது எப்படி நீங்க காதல்ல விழாமா போறீங்கன்ணு நான் பார்க்கிறேன் என்று சவால் விட்டான்.. இதனால் தான் அகிலன் எங்கு தன் மனதின் போக்கை புரிந்து கொண்டானோ என பயந்தாள்.. காதல் பற்றி அகிலனிடம் வாக்கு வாதம் செய்வாள் .. அது எப்படிங்க , தப்பு இல்லையா நம்ம அப்பா அம்மாவை ஏமாற்றுவது .. எவ்வளவோ கஷ்டப்பட்டு நம்மை படிக்க வெச்சு, இந்த நிலைமைக்கு கொண்டு வந்த, நம்மளே நம்ம வாழ்க்கைய தீர்மானிக்கறது தப்பு என்று.. அகிலன் விடுவதாய் தெரியவில்லை.. நீங்க ஏன் காதல்னா அப்பா அம்மாவை ஏமாற்றனும்னு நினைக்கறீங்க... இப்ப ஒரு கடைக்கு போறீங்க துணி எடுக்கலாம்னு , அங்க உங்களுக்கு ஒரு புடவை பிடிக்குது, ஆனால் உங்க அம்மாவுக்கு வேற ஒண்ணு பிடிக்குது, அப்ப உங்களுக்கு பிடித்ததை எடுப்பீங்களா இல்லை உங்க அம்மாவுக்கு பிடித்ததை எடுப்பீங்களா... ஹ்ம்ம் எனக்கு பிடித்ததை தான் எடுப்பேன்.. அப்படி வாங்க வழிக்கு.. என்ன சொல்லி அம்மா கிட்ட புரியவைப்பீங்க... அந்த கலர் பிடிச்சிருக்கு, அப்படி என்கிட்ட எந்த புடவையும் இல்லை, அப்படி இப்படினு சொல்லி புரிய வைப்பேன்... ஹ்ம்ம்ம் சரி தான் , ஒரு நாள் கட்டிக்கப்போற புடவையை உங்க இஷ்டத்துக்கு எடுப்பீங்களாம், உங்க வாழ்க்கையை அவங்ககிட்ட விட்டுடுவீங்களாம்.. இது வேடிக்கையா இருக்கு கனிமொழி.. இங்க பாருங்க காதல்னா தப்புன்னு யாரு சொன்னா... நீங்க உங்க மனசுக்கு பிடித்தவரை, உங்க அப்பா அம்மாக்கு காட்டுங்க... அடம் பிடிக்காம இவர் கூட இருந்தா என் வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொல்லி, ஏன் உங்களுக்கு அவரைப் பிடித்ததுனு நாலு காரணத்தை சொல்லுங்க..எந்த அம்மா அப்பா தான் யோசிக்க மாட்டங்க... அவங்களுக்கு முக்கியம் நம்ம சந்தோஷம் தான், இவர் தான் என் சந்தோஷம்னு நீங்க நியாயமா பேசுங்க.. அப்புறம் காதல் தப்புனு யாரும்னு சொல்லமாட்டாங்க என்று சொல்லி வாயை மூடும் முன், மொழி அதெல்லாம் எனக்கு தெரியாது.. இது என் கருத்து யாரும் என்னை மாற்ற முயற்சிக்க வேண்டாம்னு சொல்லி அந்தவிடத்தை விட்டு நகர்ந்துவிட்டாள்..

அனேகமாக இந்த மாதிரியான வாக்குவாதங்களை செய்த பின் , வெகுநாள் கழித்து இன்று தான் அவர்கள் தனியாக சந்திக்கின்றனர்.. ஆமா அகிலன் ஏதோ சொல்லனும்னு சொன்னார் இல்லை..வாங்க சொல்லிட்டாரா இல்லையான்னு பார்ப்போம்....

சரி நீங்க ஏதோ சொல்லனும்னு சொன்னீங்களே அதை சொல்லுங்க...

ஹ்ம்ம்ம் என்று ஒரு பெருமூச்சை விட்டு விட்டு... மொழி, உங்களை எனக்கு பிடிச்சிருக்கு.. உங்களுக்கும் விருப்பம்னா உங்க அப்பா அம்மா கிட்ட என் அப்பா அம்மாவை பொண்ணு கேக்க சொல்றேன்...

என்னது, அகிலன், எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு உங்களுக்கு தெரியும் இல்லை.. அப்புறம் ஏன்...

ஏன் எல்லாம் எனக்கு தெரியாதுங்க...சொல்லனும்னு தோணுச்சு சொன்னேன்.. உங்களுக்கு விருப்பம் இல்லைனா உங்களை வற்புறுத்த மாட்டேன் என்று சொல்லி அவளின் பதிலுக்காக கூட காத்திறாமல் சென்றுவிட்டான்...

மொழி.... என்று செல்வி வந்து அழைக்க.. கவனிக்கமால் சிந்தனையில் இருந்தாள்

ஹெய் மொழி....

இரன்டாம் முறை தன் பெயர் ஒலிக்க , மெல்ல சுதாரித்துக் கொண்டு, சொல்லு சொல்லு செல்வி...

என்ன அப்படி ஒரு யோசனை...தூங்கிட்டியா, நான் கூப்பிடறது கூட காதுல விழாம....

அதெல்லாம் ஒன்னும் இல்லை செல்வி...

சரி என்னமோ நீ சொல்ற, நான் நம்பிதானே ஆகனும்...வா சாப்பிட போகலாம்...

ஹ்ம்ம் போகலாம் வா....

ஒரு வழியாக சாப்பிட அமர்ந்தனர்..

சத்யா .. பாரு மொழி டூர்க்கு வரமாட்டேன்னு சொல்றா.... என்று கவிதா ஆரம்பிக்க

ஏன் மொழி வரமாட்டே, அதெல்லாம் எனக்கு தெரியாது... ஏதோ அதிசயமா நாம எல்லாரும் ஒன்னா போகலாம்னா . நீ தான் கன்னியாகுமரிக்கு போலாம்னு சொன்னே, உனக்காக தானே அங்க போக எல்லாரையும் ஒத்துக்க வைச்சோம்.. இப்ப நீ இப்படி பண்றே... கொஞ்சம் கூட நல்லா இல்லை.... டிக்கெட் எல்லாம் பூக் பண்ணியாச்சு, இப்ப போய் இப்படி சொன்னா எப்படி....

மொழி, நீ வரலைன்னா நான் வரலே என்று செல்வி சொல்ல...

அப்ப நானும் வரலை, என்று கவிதாவும் கதிரும் வழிமொழிந்தனர்...

ஹெய் ஏன் இப்படி பண்றீங்க.. நீங்கலாம் போய்ட்டு வாங்க...எனக்காக யாரும் நிக்க வேண்டாம்... நான் வரலைன்னா என்ன , அதான் நம்ம டீம்ல இருக்கற எல்லாரும் வராங்க இல்லை...

நீ சொல்லித்தான் இந்த டூர்க்கே ஏற்பாடு பண்ணினோம்..இப்ப நீயே வரமாட்டேன்னா என்ன அர்த்தம் மொழி... யாரும் போக வேன்டாம்... அவங்க அவங்க வேலையைப் போய் பார்க்கலாம் என்று கோவத்துடன் சத்யா இடத்தை விட்டு நகர்ந்தான்....

பாரு மொழி சத்யா சாப்பிடாம போயிட்டான்....

இரு கவி, நான் போய் அவனை சமாதானம் பண்ணிக் கூட்டிட்டு வறேன்...நீங்க எல்லாம் சாப்பிடுங்க....

இவள் கூப்பிட கூப்பிட காதில் கேட்காதவன் போல் சென்று கொண்டே இருந்தான்...

அதே வழியாக அகிலன் எதிர்பட...

என்ன சத்யா, இவ்வளவு கோபமாக எங்க போறீங்க... மொழி உங்க பின்னாடி வறாங்க கவனிக்கலையா...

தெரியும், என்னை இப்படி கோபபட வெச்சதே அவ தான்...

ஏன் என்ன சொன்னாங்க...

டூர்க்கு வரமாட்டாளாம்... அதான் நாங்க யாரும் வரலை, நீங்க எல்லாம் போயிட்டு வாங்க அகிலன்...

ஓ........ சரி நான் மொழி கிட்ட பேசிப்பார்க்கட்டுமா..

ஹ்ம்ம்ம் உங்க இஷ்டம்...அவ தான் பிடிவாதக்காரியாச்சே... சரி நான் போறேன் எனக்கு வேலை இருக்கு...

சத்யாவிடம் பேசிவிட்டு நேராக மொழியிடம் செல்கிறான்...

மொழி.. ஒரு நிமிஷம்....

இல்லை எனக்கு வேலை இருக்கு , நான் போகனும்...

ஒரே ஒரு நிமிஷம் , நான் என்ன பேச வரேன்னாச்சும் கேளுங்க... நான் என்னை பத்தியெல்லாம் பேச வரலை.... ஒரே ஒரு நிமிஷம்...

சரி சொல்லுங்க...

நீங்க நான் டூர்க்கு வரேன்னு தானே வர மாட்டேன்னு சொல்றீங்க... நான் வேணும்னா நின்னுடரேன்... என் மனசுல பட்டதை தான் உங்க கிட்ட கேட்டேன்... உங்களுக்கு இஷ்டமில்லைன்னா சொல்லிட்டு போங்க.. அதை விட்டுட்டு ஏன் டூர்க்கு வரமாட்டேன்னு சொல்றீங்க... உங்க நண்பர்கள்லாம் பாவம் ... நான் தான் உங்களுக்கு ப்ரச்சனைன்னா சொல்லுங்க, நான் வரலை...

அப்படி எல்லாம் இல்லை.. எனக்கு வேற வேலை இருக்கு அதான்... நீங்க போயிட்டு வாங்க.. அவங்களை நான் பார்த்துக்கறேன்...

ஹ்ம்ம்ம் சரி நீங்க வந்தா நல்லா இருக்கும், வரனும்னு உங்களை கட்டாயப்படுத்த மாட்டேன்.. வர முயற்சி பண்ணுங்க... என்று சொல்லி மிகவும் கன்னியமாக சென்றவனையே சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தாள்...

இவன் வான்னு கூப்பிடறானா , இல்லை வராதேன்னு சொல்றானா... சரி பார்ப்போம் இன்னும் ரெண்டு நாள் இருக்கு இல்லை...

இரண்டு நாளும் எப்படி போச்சென்றே தெரியவில்லை... எப்படியோ அவர்களை தான் இல்லாமல் டூர் போக சமாதானம் செய்துவிட்டாள்.... இருந்தும் யாரும் மொழியிடம் முகம் கொடுத்து கூட பேச வில்லை... அழுகை வந்தாலும் அவர்கள் முன் அழக்கூடாதென அமைதியாக இருந்து விட்டாள்...

4.30 மணிக்காவது எக்மோர் ரயில் நிலையத்தில் இருக்கவேண்டுமென அனைவரும் மதியமே வீட்டிற்கு கிளம்பிவிட்டனர்..

மொழியின் நண்பர்கள் மட்டும் என்ன செய்வதென்று தெரியாமல், சரி இனி ஒரு முறை மொழியிடம் பேசுவோம் என்று அவளிடத்திற்கு செல்கின்றனர்...

மொழி.... இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலே... உன் டிக்கெட் அப்படியே இருக்கு.. எங்களுக்காக வாயேன்... என்று பாவமாக முகத்தை வைத்தபடி நால்வரும் கேட்டுப் பார்த்தனர்...

பதிலேதும் சொல்லாமல், "Happy Journey" என்று சிரித்தாள்...

என்னமோ போ மனசே கேட்கலை..சரி பத்திரமா இரு...

நான் இருக்கேன், நீங்க பத்திரமா போயிட்டு பத்திரமா வாங்க...

bye....

எல்லோரும் சென்ற பின், அகிலன் தன் பங்கிற்கு வந்து

வாங்க மொழி, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, என்னால தான் நீங்க வரலைன்னு நினைச்சா... சரி பரவாயில்லை இருக்கட்டும்..நான் ஆரம்பிச்சு வைச்சதை நானே வந்து முடிக்கறேன் என்று கூறி ஒரு கடிதத்தை அவள் மேஜையின் மீது விட்டுச் செல்கிறான்..

அவன் சென்ற பின், அதை எடுத்து படிக்கையில்,

உன்முகத்தின் அழகை விட
அகம் காட்டும் முகமே
என்னை கவர்ந்தது
அழகுக்கு மேலும் அழகூட்டவே
உன்னை நேசித்தேன்
என் நேசம் உனை காயப்படுத்தியது
என்னை மன்னித்து விடு
இனி நேசித்து உனை
காயப்படுத்தமாட்டேன் !

- அகிலன்



- மொழி பேசப்படலாம்..

பேசா மொழி - 2

பேசா மொழி - 3




உன்னை நீயே காத்திரு...

நிழல் தரும் மரத்திற்கு
குடை பிடிக்க வருபவர்யாரோ..
ஒளிர விடும் மெழுகிற்கு
வெளிச்கம் கொடுக்க உருகுபவர்யாரோ..

தாகம் தீர்க்கும் மழையின்
தாகம் தீர்க்க பொழிபவர்யாரோ..
உயிர் காக்கும் காவலாளியின்
உயிர் காக்க முயல்பவர்யாரோ..

வருபவர் வரும்வரை காத்து வருந்துவதைவிட
உன்னை நீயே காத்திரு...


நன்றி,
நாணல்

Friday, 5 June 2009

'படிகட்டில் பயணம் செய்யாதே' - சங்கமம் - பேருந்து போட்டிக்காக


'படிகட்டில் பயணம் செய்யாதே'
பேருந்தில் ஏறும்போதே எழுதியிருக்கும்....

இவன்
படித்த அறிவாளியாம்
நாகரீகம் தெரிந்தவனாம்
ஆதலால் பயணம்
படிகட்டில் மட்டுமே....

பிறர் கண்பார்வை
தன்மீது பட்டுவிட்டால்
தன்னை தலைவனென்றே எண்ணுவான்
குயிலென்றும் மயிலென்றும்
பகற்கனவு கண்டு துள்ளிக்குதிப்பான்

பின்னொரு நாள்
கைகால் கட்டோடு பேருந்தில் ஏறுவான்
பிறர் பார்வை தன்மீது படாதோ....
எவரேனும் தனக்கு இடம் தரமாட்டாரோ ....
என எண்ணி நிற்க
அன்று புரியும்
'படிக்கட்டில் பயணம் செய்யாதே'

படம் : http://www.hindu.com/2005/11/16/stories/2005111616660300.htm

Tuesday, 2 June 2009

இயந்திரமாய் மாறியது போதும்...

சாலையின் இருபுறத்தின்
வீடுகளுக்கிடையேயான இடைவெளிகள்
அதிகமாயியன....

பக்கத்து வாசலின்
அழைப்புஒலி உட்புகாதபடி
குளிரூட்டப்பட்ட அறையில் வாசமாயினோம்....

லிஃப்டின் ஓரிரு நிமிட
பயணங்களிலும் முகம் பார்த்து
மலற மறுக்கின்றோம்....

வார விடுமுறையில் களைப்பார
உண்டு தூங்கியே
கழிக்கின்றோம்....

நம் பளு குறைக்க கண்டுபிடித்த
இயந்திரத்திற்கு பதிலாக
நாமே இயந்திரமானோம்....

வெற்றியைக் காரணம் காட்டி
அன்பினை
தவிர்க்கின்றோம்....

இயற்கையோடினை
மானுடத்துக்கு மரியாதை செய்
பாசத்திற்கு கட்டுபட்டு
உன்னத வாழ்வை வாழ்
உண்மையான வாழ்வை வாழ்

-நன்றி
நாணல்