Saturday, 6 June 2009

பேசா மொழி - 2

தனிமையும் மௌனமும்
பேசிக்கொள்ளும் நேரம்
மனதின் பாரம்
கூடிக் கொண்டே போகும்...


அகிலனின் கவிதையை படித்ததாலோ இல்லை , நண்பர்களின் பிரிவோ தெரியவில்லை மனம் கனமாகிக் கொண்டிருந்தது...

அவளின் கைபேசி ஒலிக்க எடுத்து பேசினாள்...

ஹெலோ, சொல்லுங்க அப்பா...

என்னமா இன்னும் வீட்டுக்கு புறப்படலியா... உன்னை ரயில் நிலையத்தில் விட்டுட்டு நானும் உங்க அம்மாவும் ஊருக்கு போகலாம்னு இருக்கோம்...

என்னப்பா என்ன திடீர்னு .. யாருக்காச்சும் உடம்பு சரி இல்லையா?

அப்படி எல்லாம் இல்லைமா.. சும்மா தான் நீயும் வீட்டுல இல்லை, அதான் தாத்தா பாட்டியை பார்த்துட்டு வரலாம்னு...

ஓ சரி சரி... நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்பா... கொஞ்சம் வேலை இருக்கு , முடிச்சிட்டு கிளம்பறேன்... வீட்டுல பேசிக்கலாம்... என்று தொடர்பை துண்டித்தாள்...

அட இது என்ன புது கதை.. இப்ப நம்ம வீட்டுலையும் இருக்க முடியாது... சரி தாத்தா பாட்டியை பார்க்கபோலாம்னா , டூர்க்கு ஏன் போகலைன்னு கேட்டா என்ன சொல்றது... அம்மா, என் கண்ணசைவ வெச்சியே நான் என்ன நினைக்கறேன்னு கண்டுபிடிச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பாங்களே... அப்ப வேற வழியே இல்லையா டூர்க்கு போயிடலாமா... ஹ்ம் அது தான் சரி...அகிலனுக்காக நாம ஏன் போகாம இருக்கும்.... நம்ம friends கூட நாம போகப் போறோம்.. இதுல அகிலன் யாரு.. சரி கிளம்பலாம் , இப்ப வீட்டுக்கு போனா தான் , ரயில் பிடிக்க வசதியா இருக்கும்...

உடனே மறைமலைநகரில் இருக்கும் தனது வீட்டிற்கு செல்கிறாள்....
எல்லாம் எடுத்து வைத்து கிளம்புவதற்குள் மணி 5 ஆகி விட்டது... இனி எக்மோர் செல்ல முடியாது அதனால் என்ன செய்யலாம் என யோசிக்கையில், அவளின் அப்பா, எப்படியும் செங்கல்பட்டு வழியா தானே ரயில் போகும், அங்க போயி ஏறிடு... எந்த கோச் தெரியுமா?

S2 பா...

அப்ப சரி வாமா, போகலாம்...

சரி, போயிட்டு வறேன் மா...

சரி மா பத்திரமா போயிட்டு பத்திரமா வா...

சரி மா என்று தன் தாயிடம் விடைபெற்றுக்கொண்டாள்...

ஏன் மா, உன் friendsகு கால் பண்ணி, செங்கல்பட்டுல ஏறிக்கறேன்னு, உனக்காக காத்திருக்க போறாங்க....

இல்லை அப்பா, இருக்கட்டும்,, என்னை தேடட்டும்.. அவங்களுக்கு சொல்லாம நான் அவங்களுக்கு இன்ப அதிர்ச்சி தரலாம்னு இருக்கேன்...

ஹ்ம்ம்ம் எல்லாம் விளையாட்டு தான் மா உனக்கு...

மணி 5.45 ஆனது... 6.35 கு ரயில் வருவதாக ஒலிக்கப் பட்டது...

சரி மா, சாப்பிட ஏதாவது வாங்கி வரவா...

ஒன்னும் வேண்டாம் பா.. பசி இல்லை...

ஒரு வழியாக சொன்ன நேரத்திற்கு ரயில் வந்தது... மொழியை இங்கு யாரும் எதிர் பார்க்காததால் , வெளியே யாரும் வரவில்லை...

சரி பா..போயிட்டு வறேன், தாத்தா பாட்டியை கேட்டதா சொல்லுங்க...

ஹ்ம்ம்ம் பத்திரமா போயிட்டு வா மா...

S2 வில் தன் பெயர் இருப்பதை உறுதி செய்துகொண்டு ரயிலில் ஏறினாள்... வாசலில் இருந்து கொண்டு தன் தந்தையை வழி அனுப்பி விட்டு, தன் நண்பர்களை தேடி உள்ளே சென்றாள்...

முதலில் அவளின் கண்ணில் பட்டது அகிலன் தான்...
அகிலனுக்கோ எதிர்பாரா நேரத்தில் மொழியைப் பார்த்தது ஒரே குதூகலம்... அவனின் குதூகலம் மொழிக்கும் தொற்றிக்கொண்டது,.. இருந்தும் அதை வெளியில் காட்டக் கூடாது என தீர்மானமாக இருந்ததால்... ஒருவாரு சமாளித்தாள்...

ஹெய் மொழி.. வாங்க வாங்க .. அதிசயம்...

அதற்குள் செல்வி அந்த பக்கம் வர, ஹெய் மொழி வாங்க அம்மணி ... என்று அவளைப் பார்த்த சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தாள்...

மொழி வந்ததில் அவளின் நண்பர்கள் அனைவர்க்கும் ஒரே சந்தோசம் ..
இரண்டு நாள் புது புது இடங்களைப் பார்த்ததில் அனைவரும் குதூகலத்தில் இருந்தனர். மொழிக்கு மட்டுமேனோ சகஜமாக இருக்க முடியவில்லை... எங்கு திரும்பினாலும் அகிலன் தான் அவளின் கண்ணில் பட்டான்... அகிலன் வந்திருந்த அனைத்து மக்களிடமும் நட்பாகி இருந்தான்.. மொழிக்கு இது வியப்பாகவே இருந்தது..எப்படி இவனால் மட்டும் அனைவரிடமும் நன்றாக பேச முடிகிறதென்று.. காதலில் மட்டும் தன் தனக்கு நேரெதிர் என்றால், இதிலுமா என்று, சிரித்த முகத்துடன் இருக்கும் அகிலனை தன்னை அறியாமல் பல நேரம் பார்த்து ரசித்திருக்கிறாள். இதை மற்றவர்கள் கவனித்தார்களோ தெரியாது ஆனால் அகிலன் கவனிக்க தவறியதில்லை..

சரி பேசலாம் என்று அருகில் சென்றாலோ , இவன் வருவதை அறிந்த மொழியின் மனம் பதபதைக்க ஆரம்பித்துவிடுகிறது... இதனால் பூத்திருந்த முகம் வாடிவிடுகிறது.. இதை புரிந்த அகிலன் மொழியிருக்கும் பக்கம் செல்லாமல் தவிர்த்து வந்தான்.. இருந்தும் அங்கும் இங்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள தவறியதில்லை.. கண்ணாமூச்சி ஆடிக்கொண்டே இரண்டுநாட்களும் சென்று விட்டது..

சென்னைக்கு திரும்புவதற்காக , ரயிலில் அவரவர் இடங்களில் சென்று அமர்ந்து விட்டனர். அங்கங்கு அவரவர்க்கு விருப்பமான கோச்சில் அமர்ந்து நண்பர்களுடன் பேசி அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்..

மொழி மற்றும் அவள் நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு அகிலனும் வந்து கூட்டத்தில் ஐக்கியமானான்... எதிர்பாரா நேரத்தில் அகிலன் அங்கு வந்தது மொழிக்கு சங்கடமாக இருந்தாலும், அவளை அறியாமல் அவனின் வரவை ரசித்தாள்.. நண்பர்களுக்கும் இந்த கண்ணாமூச்சி பற்றி தெரியாது ஆதலால், அகிலனின் வரவை வேண்டாமென்று தடுக்கவும் இயலவில்லை..

பாட்டுக்கு பாட்டில ஆரம்பித்து , இன்னும் பல விளையாட்டுகளை விளையாடிய வண்ணம் ஓடும் ரயிலில் பொழுதை கழித்துக்கொண்டிருந்தனர் ..

சரி, கொஞ்ச நேரம் விளையாட்ட ஓரம்கட்டிடு உருப்படியா ஏதாவது பேசுவோம் என்று ஆரம்பித்தான் சத்யா ..

ஹ்ம்ம் நைஸ் .... செல்வி, நீங்க சொல்லுங்க உங்களை வருங்கால புருஷன் எப்படி இருக்கணும்னு எதிர்பார்க்கறீங்க .. என்றான் அகிலன்...

பெருசா ஒன்னும் கனவெல்லாம் இல்லை.. அப்பா அம்மா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோன்னு யாரை கை காட்டுறாங்களோ அவங்கள பண்ணிக்க வேண்டியது தான்...

அஹ அஹ ... மழுப்பாதீங்க செல்வி... சும்மா சொல்லுங்க ..

நிஜமா இல்லை அகிலன், இருந்தா உங்க கிட்ட சொல்லாமலா... ஹே கதிர் , நீ சொல்லு..

என்ன செல்வி , கதிர் பாவம் காதலிய ரெண்டு நாளா பார்க்கலைன்னு வருத்தமா இருக்கான்.. அவனை போய் ...

டேய் சத்யா , என்னை வம்பு இழுக்கலைன்னா உனக்கு தூக்கம் வராதா... சரி நீ சொல்லு , உன் கனவு தேவதை எப்படி இருக்கணும்னு...

ஹே கனவுன்னு சொன்ன உடனே தான் நியாபகம் வருது... கனவுல ஒரு பொண்ணைப் பார்த்தேன்.. கட்டினா அவளைத் தான் கட்டணும்னு முடிவு பண்ணிட்டேன்டா..

டேய் , இந்த கதை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே.. இந்த நினைத்தேன் வந்தாய் படமெல்லாம் இங்க ஓட்டாத ..

அப்படி போடு கவி... ஆமா இங்க ரெண்டு ஜீவன் ரொம்ப நேரம் அமைதியாவே இருக்கு ... சரி மொழி நீ சொல்லு , அப்புறம் அகிலன் நீங்க சொல்லுங்க ...

கதிர் , நான் அமைதியா இருக்கறது உனக்கு பிடிக்கலையா... என்னை பத்தி தான் உங்களுக்கு தெரியுமே , புதுசா சொல்றதுக்கு ஒன்னும் இல்லை ...

அதெல்லாம் ஒத்துக்கப்படாது... சொல்லியே ஆகணும் ... பரவாயில்லை சொல்லு மொழி, நாங்க தப்பா எடுத்துக்க மாட்டோம்...

ஹ்ம்ம் என்ன எல்லா பொண்ணும் எதிர்பார்க்கிறா மாதிரி தான், என் உணர்வுகளை மதிக்கணும் , எனக்கு புருஷனா மட்டுமில்லாம ஒரு நல்ல நண்பனா இருக்கனும் ...

ஹ்ம்ம் ஹ்ம்ம் சரி சரி, அகிலன் நீங்க சொல்லுங்க ..

எனக்கு கனவுல்லாம் பெருசா இல்லைங்க கதிர்.. ஒன்னே ஒன்னு தான் முக்கியம், என் அம்மாவை தன் அம்மாவா பார்த்துக்கணும் அவ்வளவு தான்.. அப்படி ஒருத்தி கிடைச்சா அவளை ராணி மாதிரி பார்த்துப்பேன் என்று சொல்லி மொழியைப் பார்த்தான்.. உடனே தலை குனிந்து விட்டாள் மொழி..

ஹ்ம்ம் ஹ்ம்ம் சரி சரி எல்லாரோட கனவும் நனவாகட்டும்... சரி இதுல காதல் வயப்பட்டிருக்கவங்க யார் யார்லாம்னு கை தூக்குங்க பார்க்கலாம் என்று தன் கையை உயர்த்திய படி கதிர் கேட்க, சிலர் மட்டும் கை தூக்கினர்(அகிலன் உட்பட)...

சரி , இருதலை காதல் .....

சொல்லி முடிக்கும் முன் வேகமாய் கையை தூக்கினான் அகிலன்...

அப்படி போடுங்க அகிலன், யாரு அவங்க...

இப்ப இல்லை சத்யா , சீக்கிரம் நானே சொல்றேன் ...

மொழிக்கு ஒன்றும் புரியவில்லை.. தன்னை வைத்து தான் அகிலன் சொன்னானா என்று குழம்பிக் கொண்டிருந்தாள்..

இப்படியே பேசிக்கொண்டிருந்ததனால், நேரம் போனதே தெரியவில்லை.. 12 மணிக்கு மேலாகி விட்டது.. அவரவர் பெர்த்தில் படுக்க , அகிலன் மட்டும் வேறுவொரு கோச்சிற்கு செல்ல வேண்டியிருந்தது .. ஆனால் கதவு அடைக்க பட்டிருந்ததால் , மொழியின் கோச்சிலேயே படுக்க வேண்டி இருந்தது...

அகிலன், நீங்க இங்க படுத்துகோங்க நானும் மொழியும் கொஞ்ச நேரம் பேசிட்டு தூங்கறோம், எப்படியும் இன்னும் 5 மணி நேரத்துல மொழி செங்கல்பட்டுல இறங்கிடுவா என்று சொல்லி , மொழியும் கவியும் சைட் பெர்த்தில் அமாந்து பேசிக் கொண்டே இருந்தனர்.. சிறிது நேரம் பேசிக் கொண்டே கவியும் உறங்கிவிட்டாள்....மொழிக்கு மட்டும் தூக்கம் வரவில்லை.. எதிரில் படுத்துறங்கிக் கொண்டிருந்த அகிலனையே பார்த்துக்கொண்டிருந்தாள்...

சாளரத்தின் வழிவரும் சாரல்
மூக்கின் நுனி தொட்டுசெல்லும் மண்வாசனை
காலத்தோடு போட்டிபோட்டு வேகமாய் ஓடும் ரயில்
மெதுவாய் எனை நலம் விசாரிக்கும் தென்றல்
கூட்டத்தில் வீசும் மல்லிகையின் வாசம்
இருப்போரிருந்தும் யாருமில்லா என் தனிமை
எனையறியாமல் என் கைகள் உன்பெயரை எழுதிடுதே ....

-
மொழி

- மொழி கவிதையாகலாம்

No comments: