Saturday 6 June 2009

பேசா மொழி - 3

அடைக்கப்பட்ட
வாசலையும் தட்டாமல்
உள்ளே நுழைவது
தான் காதல்

இரவெல்லாம் கண் விழித்து கண்ணைக் காக்கும் இமையைப் போல் அகிலனையே பார்த்து , அவன் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தனாலோ தெரியவில்லை, விடிந்தும், தன் வீட்டில் இருந்தும் மொழிக்கு ஏனோ அகிலனின் மனைவியாய் தான் வாழ்ந்த ஒருவித திருப்தி.. தனக்கு என்ன ஆயிற்று என்று யோசிக்க கூட முடியாமல் கனவு உலகத்தில் இருந்தாள்.. தன் அம்மா வருவதை கூட கவனிக்காமல் தனக்குள்ளேயே சிரித்து அகிலனை நினைத்து உருகிக் கொண்டிருந்தாள்...

மொழி... அப்படி என்ன மா யோசிக்கற...

ஒன்னும் இல்லை மா.. ரெண்டு நாளா சரியா தூங்கலை இல்லையா
..அதான் ..

ஓ ஓ ... என் கிட்ட பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டியா ...

பொய்யா அப்படி எல்லாம் இல்லை மா.. நிஜமா சொல்றேன்...

மொழி, நான் உன் அம்மா... நீ ததகா பிதகானு பேசின மழலை மொழியே புரிஞ்சிகிட்டவ நான்.. சரி சொல்லு யாரு அந்த பையன்?

இப்படி ஒரு கேள்வியை சற்றும் எதிர்பார்க்காததால் திடுக்கிட்டு நின்றாள்... இருந்தும் ஒருவாரியாக சமாளித்துக் கொண்டு ...

என்னமா ஆச்சு உங்களுக்கு, சம்மந்தமே இல்லாம கேள்வி கேக்கறீங்க..

நல்லாவே நடிக்கறமா நீ..
கொஞ்ச நாளா உன்னை நானும் கவனிச்சிட்டு தான் வரேன் ... சொல்லு... தாத்தா பாட்டியும் உன் கல்யாணத்தை பத்தி பேச தான் எங்களை ஊருக்கு வர சொன்னாங்க... சொல்லு மா உன் மனசுல யாராவது இருந்த சொல்லு...

மா , என்ன மா, உங்களுக்கு தான் என்னை பத்தி தெரியுமே , நான் அப்படி பட்ட பொண்ணு இல்லை மா..

ஹ்ம்ம் ஹ்ம்ம் அப்ப உன் தாத்தா ஒரு இடம் சொன்னாரு , ஜாதகமும் பொருந்தி இருக்கு , குடும்பமும் நல்ல குடும்பம் , என்ன சொல்ற நீ..

தன் மனதில் யாரும் இல்லையென தனக்கு தானே சொல்லிக் கொண்டாலும், இப்படி ஒரு கேள்வியை கேட்டதும் ஏனோ அகிலனின் முகம் தான் மனதில் வந்தது ... அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல் ... கலங்கிய கண்களுடன் தன் தாயை நோக்கினாள்..

அப்படி வா என் செல்ல மகளே... இந்த கண்ணீருக்கு என்ன அர்த்தம்.. என்று கண்களை சிமிட்டினாள் மொழியின் அம்மா ...

மா கண்ணீரா , அதெல்லாம் ஒன்னும் இல்லை, ஏதோ தூசி விழுந்திருக்கும் போல..

இப்படியே சமாளித்து வந்தாலும் , ஒரு கட்டத்துக்கு மேல் மொழியால் அகிலனை பற்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை... முதலில் அகிலனை சந்தித்து , அகிலன் தன்னிடம் அவனது விருப்பத்தை சொன்னது, டூரில் நடந்தது என எல்லாத்தையும் சொல்லி , என்ன செய்வது என்று தெரியாது நிற்கிறேன் மா என்று அழுதுவிட்டாள்..

ஹே மொழி, என்னது இது சின்ன குழந்தை மாதிரி... உனக்கு அவரை பிடிச்சிருக்குன்னா என் கிட்ட சொல்றதுக்கு என்ன மா ...

இல்லை மா, என்னை எவ்வளவு கஷ்டப் பட்டு வளர்த்தீங்க ..இப்ப நான் பாட்டுக்கு என் இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணிகிட்ட தப்பு இல்லையா..

அட அசடே...
இதுல என்ன டா தப்பு இருக்கு.. படிக்கற வயசுல படிக்காம காதல்னு சுத்தின எல்லா அப்பா அம்மாவுக்கும் தான் கோவம் வரும்.. இப்ப நீ பெரிய பொண்ணாயிட்ட ... உனக்கும் நல்லது கெட்டது எதுன்னு தெரியும் இல்லையா..

ஹ்ம்ம் ஆமா..

அப்புறம் ஏன் மா இப்படி கொழப்பிக்கற ... எப்படியும் யாரோ ஒருத்தர் சொல்ற பையனை நல்லவனா நல்ல குடும்பம்னு பார்த்து தான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறோம்.. இப்படி மூணாவது மனிஷங்க சொல்ற பையனை பத்தி யோசிக்கும் பொது, என் பொண்ணு நீ, நீ சொல்ற பையனை பத்தி யோசிக்க மாட்டோமா... நல்லப் பொண்ணு மா நீ..

அம்மா...

ஹ்ம்ம் நிஜமா தான்... அகிலனை நம்ம வீட்டுக்கு வர சொல்லு... பார்த்து பேசிடலாம்..

மா..எப்படி மா அவரை மட்டும் தனியா நம்ம வீட்டுக்கு கூப்பிடறது...

ஆமா இதையும் என் கிட்டயே கேளு.. அடுத்த வாரம் உனக்கு பிறந்த நாள் வருது இல்லையா , அதுக்கு உன் நண்பர்கள் எல்லாரையும் வீட்டுக்கு அழை, அகிலன் உட்பட... அவரைப் பார்த்துட்டு அப்புறம் நாங்க எங்க முடிவை சொல்றோம்... சரியா...

முகத்தில் 100 வாட்ஸ் எரிந்தார் போல் பிரகாசிக்க வெட்கத்துடன் எழுந்து ஓடினாள்..

ஹ்ம்ம் இந்த காலத்து பசங்க உண்மையிலேயே நல்ல பசங்க தான் ... சுய நலமா யோசிக்காம எவ்வளவு பெருந்தன்மையா இருக்காங்க ... "வாழ்க வளமுடன்" என்று மனதார வாழ்த்தினாள் ..

அடுத்த நாள் அலுவலகத்திற்கு சென்று தன் நண்பர்களையும் அகிலனையும் தன் பிறந்த நாளிற்காக வீட்டிற்கு அழைத்தாள்...

அகிலன் முதலில் வர மறுத்தாலும் , மொழியின் பிறந்த நாளன்று முதல் ஆளாக மொழியின் வீட்டிற்கு வந்து விட்டான்.. ஒருவர் பின் ஒருவராக வர, பிறந்த நாள் விழாவும் சிறப்பாக நடந்தேறியது... அகிலனை கவனிக்கவும் தவறவில்லை மொழியின் தாய் தந்தை .... அனைவரும் மொழிக்கு பரிசு கொடுத்த பின் அகிலன் மட்டும் தயங்கி தயங்கி நின்று கொண்டிருந்தான்... இதை உணர்ந்த மொழியின் தந்தை , என்ன அகிலன் நீங்க பரிசு எதுவும் கொண்டு வரலியா ...

இல்லைங்க , என்ன பரிசு கொடுக்கறதுன்னு தெரியலை அதான்...

சரியா போச்சு போ.. சரி உன் வீடு எங்கபா?

பெரம்பூர் சார்..

அப்ப தினமும் ஆபிஸ் பஸ்ல வரியாபா...

ஹ்ம்ம் ஆமாங்க..

கஷ்டமா இல்லையா..இங்கயே வீடு எடுத்து தங்கிடலாம் இல்லை...

தங்கலாம் , ஆனா.. தினம் இரவாவது அம்மா கையால சாப்பிடனும்... அந்த ஒரு வேலை சாப்பட்டுக்கு தான் மணி எத்தனை ஆனாலும் வீட்டுக்கு போய்டுவேன்..

ஹ்ம்ம் ஹ்ம்ம் ....

இப்படி இடையிடையே அகிலனிடம் நேர்காணலையும் முடித்துவிட்டு அனைவரும் உணவருந்தினர்.. விடைப்பெற்றுக் கொள்ளும் போது,

மொழி, உங்களுக்கு பரிசு கொடுக்கணும்னு எனக்கும் ஆசை தான்..ஆனா இப்ப நான் கொடுத்தேன்னா, அதுல என் காதலும் தெரியவரும், அதான் கொடுக்கலை .. மன்னிச்சிடுங்க... by the way, once again, my hearty wishes... என்று சொல்லி பதிலையும் எதிர்பாராது கண்ணியமாக சென்றுவிட்டான்..

மொழியின் வீட்டிலோ அகிலனுக்கு மார்க் கூடிக்கொண்டே போனது .. ஒரு வாரம் தீர விசாரித்த பின்னர்...
அகிலனின் பெற்றோரிடம் பேசுவது என முடிவு செய்து, பேசி அவர்களுக்கும் மொழியை பிடித்து விட .. அகிலனை அழைத்து உன் முடிவு என்னனு சொல்லுப்பா என்று அகிலனின் பெற்றோர் கேட்டனர்...

ஹ்ம்ம்
எனக்கு சம்மதம் ஆனா பொண்ணு வீட்டுல முக்கியமா மொழிக்கு சம்மதமா?

நல்ல கேள்வி.. பெரியவங்க நாங்க பேசிட்டோம், மொழி உன் ஆபிஸ் தானே , நீயே பேசி தெரிஞ்சிக்கோ..

அப்பா அது நல்லா இருக்காது பா...

இதுல என்ன தம்பி இருக்கு... நீயே பேசிடு... என்று சொல்லி மொழியின் வீட்டு தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு மொழியிடம் அகிலனை பேச வைத்தார் ..

மொழி, இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை.. நம்ம வீட்டு பெரியவங்களுக்காக நீங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க வேண்டாம்... உங்களுக்கு மனப்பூர்வமா சம்மதம்னா மட்டும் சொல்லுங்க ...

சம்மதம் இல்லேன்னா என்ன பண்ணுவீங்க..

இந்த கல்யாணத்தை நிறுத்திடுவேன் மொழி... அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் சொல்றேன், உங்களை காயப்படுத்தற எதையும் நான் செய்ய விரும்பமாட்டேன்...


சரி, நான் இல்லாத வாழ்கையை உங்களால நினைச்சு பார்க்க முடியுதா..

ஹ்ம்ம் அது கொஞ்சம் கஷ்டம் தான்...ஆனா அது என்னோட பிரச்சனை நான் பார்த்துக்கறேன்...

என்னை பார்த்துப்பீங்களா ..

அதான் சொன்னேனே , என் பிரச்சனையை
நான் பார்த்துக்கறேன்...

அட மண்டு (மெல்லிய குரலில்) , நான் அதை கேக்கலை, "
என்னை பார்த்துப்பீங்களா"னு கேட்டேன்..

என்ன என்ன திரும்ப சொல்லு...

எத்தனை தடவை சொல்றது...சொல்ல முடியாது போடா..

மொழி... இது கனவா நிஜமா.. ஐயோ ரொம்ப சந்தோஷமா இருக்கு மொழி... ரொம்ப ரொம்ப நன்றி... என்று சொல்லி துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தான்..

மொழி, மொழி ஒரே ஒரு முறை திருப்பி சொல்லு...

ஹ்ம்ம் ஹ்ம்ம் "என்னை உன் கண்ணுக்குள் வைச்சு ஆயுசுக்கும் பத்திரமா பார்த்துக்குவியாடா லூசு"........

- முற்றும்


பேசா மொழி - 1

பேசா மொழி - 2

No comments: