Saturday, 6 June 2009

பேசா மொழி - 1

ஹே மொழி.. நாம இந்த வாரம் போகப்போற டூர்க்கு வர இல்லை....

இல்லைமா வருவேன்னு தோணலை... கொஞ்சம் வேலை இருக்கு கவி... சரி அதை விடு, யார் யார்லாம் வராங்க சொல்லு...

என்ன கனிமொழி இது.. ( கனிமொழி தான் முழுப் பெயராயினும், மொழி என்று தன்னை அழைப்பதையே அவள் விரும்புவாள் .. அவள் நண்பர்கள் அப்படி தான் அவளை அழைப்பார்கள்) நீ தான் இந்த டூர் போறதுக்கு முக்கிய காரணமே, இப்ப வர மாட்டேன்னு சொல்றியே... என்னாச்சு உனக்கு, ஒரு வாரமா உன் நடவடிக்கை எதுவும் சரி இல்லையே... வீட்டுல எதாவது பிரச்சனையா?

அதெல்லாம் ஒன்னும் இல்லை கவி... அப்படி எதாவது இருந்தா உன் கிட்ட சொல்லாமலா என்று புன்னகைத்தாள்...

என்னமோ போ... எதைக் கேட்டாலும் இப்படி சிரிச்சே மழுப்பிடு....

ஹ்ம்ம்ம் எல்லாரும் வராங்க தானே...

உன்னை தவிர எல்லாரும் வராங்க மொழி .. நீயும் வாயேன்....

சரி டா... நான் சொல்றேன்.. எதுக்கும் வீட்டுல ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றேன்... சரியா....

ஹ்ம்ம் சரி... சீக்கிரம் நல்ல முடிவா சொல்லு.... சரி மதியம் பார்க்கலாம் என்று விடைபெற்றுக் கொள்கிறாள் கவிதா....

யப்பா ஒரு வழியா இவளை சமாளிச்சிட்டோம் , மத்தவங்களை எப்படி சமாளிக்கறது... ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு எதையோ யோசித்த வண்ணம் நாற்காலியில் சாய்கிறாள் கனிமொழி ...

ஒரு வாரத்துக்கு பின்னோக்கி செல்கிறது அவளின் நினைவு...

கனிமொழி... சாப்பிட போகலியா? என்ற குரல் வந்த இடம் திரும்பிப் பார்க்கிறாள்... 3 மாதங்களுக்கு முன் தன் குழுவிற்கு புதிதாய் வந்த அகிலன், இவளின் பதிலுக்காக காத்திருப்பது தெரிந்தது...

இல்லை அகிலன், போகனும்... கவிதா மீட்டிங் போயிருக்கா.... சத்யா நம்ம டூர்க்கு டிக்கெட் புக் பண்ரதுக்கு போயிருக்கான்... கதிர்க்கு இன்னைக்கு CompOff ,வீட்டுல இருக்கான்... செல்விக்கு உடம்பு சரி இல்லைன்னு லீவ்ல இருக்கா... அதான் என்னப் பண்ணலாம்னு யோசிட்டு இருக்கேன் .. ( இவர்கள் தான் அலுவலகம் சேர்ந்த நாள் முதல் மொழியின் உலகம்...இதில் ஒருவர் இல்லையெனினும் மொழிக்கு ஏதோ மாதிரி இருக்கும்... ஒரு சேர , நால்வரும் இல்லாதது, தனியாய் உணர்ந்தாள்... அகிலனும் வந்த நாளில் இருந்து அவ்வப்பொழுது இவர்கள் கூட்டத்தில் ஐக்கியம் ஆவது உண்டு... ) நீங்க என் கூட வரீங்களா தனியா போக ஒரு மாதிரி இருக்கு...

ஹ்ம்ம் சரி போலாமே... எனக்கும் யாருமில்லை இன்னைக்கு, உங்களை கூப்பிடலாம்னு தான் வந்தேன்...

ஓ அப்ப சரி போகலாம் வாங்க...

ப்ரொஜெக்ட் இல் ஆரம்பித்து ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியது வரை பேசி முடித்தனர்... எல்லாம் பேசிய பின் சில நேரம் மௌனம் நீடித்தது...

என்ன அகிலன், அமைதியாகிட்டீங்க... ஏதோ தீவிரமா யோசிட்டு இருக்கற மாதிரி தெரியுது.. அப்படி என்ன யோசனை...

ஹ்ம்ம் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே...

ஹெய் பொய் சொல்லாதீங்க... பரவாயில்லை சொல்லுங்க...

ஒன்னும் இல்லை உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கனும், ஒரு விஷயம் சொல்லனும் , அதான் எதை முதல்ல செய்யலாம்னு யோசிட்டு இருக்கேன்...

அஹ் அஹ் புதிர் எல்லாம் பலமா இருக்கே...

பெரிய புதிரெல்லாம் இல்லை, சரி நீங்க சொல்லுங்க... எதை முதல்லை சொல்லட்டும்...

சிறிது நேரம் யோசித்து... ( அட என்ன இது இப்படி நம்மையே சாட்சிக்கு கூப்பிட்டாரே... சரி முதல்ல கேக்கவந்ததை கேப்போம்... அவரோட மனசுல என்ன இருக்குனு தெரிந்து கொள்வோம்... ) , சரி என்ன கேட்கனுமோ அதை கேளுங்க ...

நான் உங்களை மொழின்னு கூப்பிடலாமா?

அட என்ன கேள்வி இது, உங்களுக்கு தான் தெரியுமே என்னை மொழின்னு கூப்பிட்டா எனக்கு ரொம்ப பிடிக்கும்னு...
என்னது இது சின்ன புள்ளைத்தனமா என்று சிரித்தாள்.....

வெளியே சிரித்தாலும் உள்ளுக்குள் பதற்றமாக தான் இருந்தாள்.அகிலனும் பதற்றத்துடன் இருந்ததால் அவளின் பதற்றத்தைக் கவனிக்கவில்லை... மொழி அகிலனிடமிருந்து எதிர்பார்த்த கேள்வி வேறு, அகிலன் கேட்டதோ வேறு... யாரையாவது காதலிக்கிறாயா என்ற கேள்வியை எதிர்பார்த்து இருந்தாள். "இல்லை" என்ற பொய்யை எப்படி உண்மையைப் போல் சொல்வதென்று தன்னை தயார் படுத்திக் கொண்டது வீணாகப் போய்விட்டது...அகிலனை வந்த நாளே மொழிக்கு பிடித்திருந்தது... இருந்தும் தன் நட்பு வட்டத்திற்குள் எப்போதும் இருந்ததால் , அகிலனை பற்றி யோசிக்க அவளுக்கு இயலவில்லை... நண்பர்கள் தன் அருகில் இல்லாத சமயம் , தனிமையாய் உணரும் சமயம், எப்படி தான் அகிலனுக்கு தெறிகறதோ தெரியாது, மொழியின் இடத்திற்கு வந்து விட தவறியதில்லை... வந்து பேசிவிட்டும் செல்லும் போதெல்லாம், அகிலனின் மீதான தன் விருப்பம் கூடிக்கொண்டே இருக்கிறதென்பதை புரிந்தும் புரியாதவள் போல் நடந்து கொண்டாள்...

அப்பா அம்மாவின் செல்லமகளாய் இருக்கும் மொழிக்கு காதல் என்ற வார்த்தை கூட பிடிக்காது... நம்மை இந்த நிலைமைக்கு கொண்டு வந்த தாய் தந்தைக்கு தான் தன் திருமணம் பற்றி முடிவெடுக்க அதிகாரம் உண்டென்பது இவளின் விவாதம்... இவளைப் பற்றி தெரிந்ததனால் யாரும் இவளிடம் காதல் பற்றி பேச மாட்டார்கள்... கதிர் தன்னுடன் கல்லூரியில் பயின்ற ஒரு பெண்ணை விரும்புவதாக தெரிந்தபின், ஒரு வாரம் போராடிப் பார்த்தாள்... கதிர் செய்வது தவறென்று..கதிர் விட்டுக் கொடுக்காதலால், பெற்றோறை மீறி திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்ற வாக்கிற்கு பிறகே கதிரிடம் பேச ஆரம்பித்தாள்... தனக்குள் நடக்கும் இந்த மாறுதலையும் நிராகரித்து வந்தாள்...தனக்குள் காதல் வராதென்றும், அப்படி வந்தாலும் தன் மனதை கட்டுபடுத்திக் கொள்வேன் என்று தீர்மானமாக இருந்தாள்...

இதனாலேயே அவளிடம் யாரும் காதல் என்ற வார்த்தையை கூட சொல்லமாட்டார்கள்... ஆனால் அகிலன் மட்டும், அவளிடம் அது எப்படி நீங்க காதல்ல விழாமா போறீங்கன்ணு நான் பார்க்கிறேன் என்று சவால் விட்டான்.. இதனால் தான் அகிலன் எங்கு தன் மனதின் போக்கை புரிந்து கொண்டானோ என பயந்தாள்.. காதல் பற்றி அகிலனிடம் வாக்கு வாதம் செய்வாள் .. அது எப்படிங்க , தப்பு இல்லையா நம்ம அப்பா அம்மாவை ஏமாற்றுவது .. எவ்வளவோ கஷ்டப்பட்டு நம்மை படிக்க வெச்சு, இந்த நிலைமைக்கு கொண்டு வந்த, நம்மளே நம்ம வாழ்க்கைய தீர்மானிக்கறது தப்பு என்று.. அகிலன் விடுவதாய் தெரியவில்லை.. நீங்க ஏன் காதல்னா அப்பா அம்மாவை ஏமாற்றனும்னு நினைக்கறீங்க... இப்ப ஒரு கடைக்கு போறீங்க துணி எடுக்கலாம்னு , அங்க உங்களுக்கு ஒரு புடவை பிடிக்குது, ஆனால் உங்க அம்மாவுக்கு வேற ஒண்ணு பிடிக்குது, அப்ப உங்களுக்கு பிடித்ததை எடுப்பீங்களா இல்லை உங்க அம்மாவுக்கு பிடித்ததை எடுப்பீங்களா... ஹ்ம்ம் எனக்கு பிடித்ததை தான் எடுப்பேன்.. அப்படி வாங்க வழிக்கு.. என்ன சொல்லி அம்மா கிட்ட புரியவைப்பீங்க... அந்த கலர் பிடிச்சிருக்கு, அப்படி என்கிட்ட எந்த புடவையும் இல்லை, அப்படி இப்படினு சொல்லி புரிய வைப்பேன்... ஹ்ம்ம்ம் சரி தான் , ஒரு நாள் கட்டிக்கப்போற புடவையை உங்க இஷ்டத்துக்கு எடுப்பீங்களாம், உங்க வாழ்க்கையை அவங்ககிட்ட விட்டுடுவீங்களாம்.. இது வேடிக்கையா இருக்கு கனிமொழி.. இங்க பாருங்க காதல்னா தப்புன்னு யாரு சொன்னா... நீங்க உங்க மனசுக்கு பிடித்தவரை, உங்க அப்பா அம்மாக்கு காட்டுங்க... அடம் பிடிக்காம இவர் கூட இருந்தா என் வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொல்லி, ஏன் உங்களுக்கு அவரைப் பிடித்ததுனு நாலு காரணத்தை சொல்லுங்க..எந்த அம்மா அப்பா தான் யோசிக்க மாட்டங்க... அவங்களுக்கு முக்கியம் நம்ம சந்தோஷம் தான், இவர் தான் என் சந்தோஷம்னு நீங்க நியாயமா பேசுங்க.. அப்புறம் காதல் தப்புனு யாரும்னு சொல்லமாட்டாங்க என்று சொல்லி வாயை மூடும் முன், மொழி அதெல்லாம் எனக்கு தெரியாது.. இது என் கருத்து யாரும் என்னை மாற்ற முயற்சிக்க வேண்டாம்னு சொல்லி அந்தவிடத்தை விட்டு நகர்ந்துவிட்டாள்..

அனேகமாக இந்த மாதிரியான வாக்குவாதங்களை செய்த பின் , வெகுநாள் கழித்து இன்று தான் அவர்கள் தனியாக சந்திக்கின்றனர்.. ஆமா அகிலன் ஏதோ சொல்லனும்னு சொன்னார் இல்லை..வாங்க சொல்லிட்டாரா இல்லையான்னு பார்ப்போம்....

சரி நீங்க ஏதோ சொல்லனும்னு சொன்னீங்களே அதை சொல்லுங்க...

ஹ்ம்ம்ம் என்று ஒரு பெருமூச்சை விட்டு விட்டு... மொழி, உங்களை எனக்கு பிடிச்சிருக்கு.. உங்களுக்கும் விருப்பம்னா உங்க அப்பா அம்மா கிட்ட என் அப்பா அம்மாவை பொண்ணு கேக்க சொல்றேன்...

என்னது, அகிலன், எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு உங்களுக்கு தெரியும் இல்லை.. அப்புறம் ஏன்...

ஏன் எல்லாம் எனக்கு தெரியாதுங்க...சொல்லனும்னு தோணுச்சு சொன்னேன்.. உங்களுக்கு விருப்பம் இல்லைனா உங்களை வற்புறுத்த மாட்டேன் என்று சொல்லி அவளின் பதிலுக்காக கூட காத்திறாமல் சென்றுவிட்டான்...

மொழி.... என்று செல்வி வந்து அழைக்க.. கவனிக்கமால் சிந்தனையில் இருந்தாள்

ஹெய் மொழி....

இரன்டாம் முறை தன் பெயர் ஒலிக்க , மெல்ல சுதாரித்துக் கொண்டு, சொல்லு சொல்லு செல்வி...

என்ன அப்படி ஒரு யோசனை...தூங்கிட்டியா, நான் கூப்பிடறது கூட காதுல விழாம....

அதெல்லாம் ஒன்னும் இல்லை செல்வி...

சரி என்னமோ நீ சொல்ற, நான் நம்பிதானே ஆகனும்...வா சாப்பிட போகலாம்...

ஹ்ம்ம் போகலாம் வா....

ஒரு வழியாக சாப்பிட அமர்ந்தனர்..

சத்யா .. பாரு மொழி டூர்க்கு வரமாட்டேன்னு சொல்றா.... என்று கவிதா ஆரம்பிக்க

ஏன் மொழி வரமாட்டே, அதெல்லாம் எனக்கு தெரியாது... ஏதோ அதிசயமா நாம எல்லாரும் ஒன்னா போகலாம்னா . நீ தான் கன்னியாகுமரிக்கு போலாம்னு சொன்னே, உனக்காக தானே அங்க போக எல்லாரையும் ஒத்துக்க வைச்சோம்.. இப்ப நீ இப்படி பண்றே... கொஞ்சம் கூட நல்லா இல்லை.... டிக்கெட் எல்லாம் பூக் பண்ணியாச்சு, இப்ப போய் இப்படி சொன்னா எப்படி....

மொழி, நீ வரலைன்னா நான் வரலே என்று செல்வி சொல்ல...

அப்ப நானும் வரலை, என்று கவிதாவும் கதிரும் வழிமொழிந்தனர்...

ஹெய் ஏன் இப்படி பண்றீங்க.. நீங்கலாம் போய்ட்டு வாங்க...எனக்காக யாரும் நிக்க வேண்டாம்... நான் வரலைன்னா என்ன , அதான் நம்ம டீம்ல இருக்கற எல்லாரும் வராங்க இல்லை...

நீ சொல்லித்தான் இந்த டூர்க்கே ஏற்பாடு பண்ணினோம்..இப்ப நீயே வரமாட்டேன்னா என்ன அர்த்தம் மொழி... யாரும் போக வேன்டாம்... அவங்க அவங்க வேலையைப் போய் பார்க்கலாம் என்று கோவத்துடன் சத்யா இடத்தை விட்டு நகர்ந்தான்....

பாரு மொழி சத்யா சாப்பிடாம போயிட்டான்....

இரு கவி, நான் போய் அவனை சமாதானம் பண்ணிக் கூட்டிட்டு வறேன்...நீங்க எல்லாம் சாப்பிடுங்க....

இவள் கூப்பிட கூப்பிட காதில் கேட்காதவன் போல் சென்று கொண்டே இருந்தான்...

அதே வழியாக அகிலன் எதிர்பட...

என்ன சத்யா, இவ்வளவு கோபமாக எங்க போறீங்க... மொழி உங்க பின்னாடி வறாங்க கவனிக்கலையா...

தெரியும், என்னை இப்படி கோபபட வெச்சதே அவ தான்...

ஏன் என்ன சொன்னாங்க...

டூர்க்கு வரமாட்டாளாம்... அதான் நாங்க யாரும் வரலை, நீங்க எல்லாம் போயிட்டு வாங்க அகிலன்...

ஓ........ சரி நான் மொழி கிட்ட பேசிப்பார்க்கட்டுமா..

ஹ்ம்ம்ம் உங்க இஷ்டம்...அவ தான் பிடிவாதக்காரியாச்சே... சரி நான் போறேன் எனக்கு வேலை இருக்கு...

சத்யாவிடம் பேசிவிட்டு நேராக மொழியிடம் செல்கிறான்...

மொழி.. ஒரு நிமிஷம்....

இல்லை எனக்கு வேலை இருக்கு , நான் போகனும்...

ஒரே ஒரு நிமிஷம் , நான் என்ன பேச வரேன்னாச்சும் கேளுங்க... நான் என்னை பத்தியெல்லாம் பேச வரலை.... ஒரே ஒரு நிமிஷம்...

சரி சொல்லுங்க...

நீங்க நான் டூர்க்கு வரேன்னு தானே வர மாட்டேன்னு சொல்றீங்க... நான் வேணும்னா நின்னுடரேன்... என் மனசுல பட்டதை தான் உங்க கிட்ட கேட்டேன்... உங்களுக்கு இஷ்டமில்லைன்னா சொல்லிட்டு போங்க.. அதை விட்டுட்டு ஏன் டூர்க்கு வரமாட்டேன்னு சொல்றீங்க... உங்க நண்பர்கள்லாம் பாவம் ... நான் தான் உங்களுக்கு ப்ரச்சனைன்னா சொல்லுங்க, நான் வரலை...

அப்படி எல்லாம் இல்லை.. எனக்கு வேற வேலை இருக்கு அதான்... நீங்க போயிட்டு வாங்க.. அவங்களை நான் பார்த்துக்கறேன்...

ஹ்ம்ம்ம் சரி நீங்க வந்தா நல்லா இருக்கும், வரனும்னு உங்களை கட்டாயப்படுத்த மாட்டேன்.. வர முயற்சி பண்ணுங்க... என்று சொல்லி மிகவும் கன்னியமாக சென்றவனையே சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தாள்...

இவன் வான்னு கூப்பிடறானா , இல்லை வராதேன்னு சொல்றானா... சரி பார்ப்போம் இன்னும் ரெண்டு நாள் இருக்கு இல்லை...

இரண்டு நாளும் எப்படி போச்சென்றே தெரியவில்லை... எப்படியோ அவர்களை தான் இல்லாமல் டூர் போக சமாதானம் செய்துவிட்டாள்.... இருந்தும் யாரும் மொழியிடம் முகம் கொடுத்து கூட பேச வில்லை... அழுகை வந்தாலும் அவர்கள் முன் அழக்கூடாதென அமைதியாக இருந்து விட்டாள்...

4.30 மணிக்காவது எக்மோர் ரயில் நிலையத்தில் இருக்கவேண்டுமென அனைவரும் மதியமே வீட்டிற்கு கிளம்பிவிட்டனர்..

மொழியின் நண்பர்கள் மட்டும் என்ன செய்வதென்று தெரியாமல், சரி இனி ஒரு முறை மொழியிடம் பேசுவோம் என்று அவளிடத்திற்கு செல்கின்றனர்...

மொழி.... இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலே... உன் டிக்கெட் அப்படியே இருக்கு.. எங்களுக்காக வாயேன்... என்று பாவமாக முகத்தை வைத்தபடி நால்வரும் கேட்டுப் பார்த்தனர்...

பதிலேதும் சொல்லாமல், "Happy Journey" என்று சிரித்தாள்...

என்னமோ போ மனசே கேட்கலை..சரி பத்திரமா இரு...

நான் இருக்கேன், நீங்க பத்திரமா போயிட்டு பத்திரமா வாங்க...

bye....

எல்லோரும் சென்ற பின், அகிலன் தன் பங்கிற்கு வந்து

வாங்க மொழி, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, என்னால தான் நீங்க வரலைன்னு நினைச்சா... சரி பரவாயில்லை இருக்கட்டும்..நான் ஆரம்பிச்சு வைச்சதை நானே வந்து முடிக்கறேன் என்று கூறி ஒரு கடிதத்தை அவள் மேஜையின் மீது விட்டுச் செல்கிறான்..

அவன் சென்ற பின், அதை எடுத்து படிக்கையில்,

உன்முகத்தின் அழகை விட
அகம் காட்டும் முகமே
என்னை கவர்ந்தது
அழகுக்கு மேலும் அழகூட்டவே
உன்னை நேசித்தேன்
என் நேசம் உனை காயப்படுத்தியது
என்னை மன்னித்து விடு
இனி நேசித்து உனை
காயப்படுத்தமாட்டேன் !

- அகிலன்- மொழி பேசப்படலாம்..

பேசா மொழி - 2

பேசா மொழி - 3
No comments: