Tuesday 15 May 2012

தீர்ப்பின் வழக்கு

‘இன்று உனக்கு விடுதலை’யென
குரல் வந்த வழி
ந‌ன்றி சொல்லிப் புறப்பட்டேன்,
வழி நெடுக்க
விசித்திர நிகழ்வுகளைச் சும‌ந்த‌ப‌டி!


உச்ச‌க்க‌ட்ட‌மாய்
என‌க்கெதிரே ஒரு பிம்பம்;
என் கைக‌ள் செய்வ‌தை
நேரெதிர் திசையில்
செய்து கொண்டு,
நான் உச்ச‌ரிக்கும் வார்த்தைகளுக்கேற்ப‌
அத‌ன் இதழ்களைக்
குவித்துக் கொண்டும்;


என்ன‌ருகில் இருப்ப‌வ‌ரைப் போன்றே
அத‌ன‌ருகிலும் ஒரு பிம்ப‌ம்,
இவ‌ர் செய்வ‌தையே செய்த‌ப‌டி;
இவ‌ருக்கில்லா குழ‌ப்ப‌ம்
என‌க்கு ம‌‌ட்டுமேனோ
என யோசிக்கையில்
பிம்ப‌த்தையும் அழைத்து சென்றுவிட்டார்
என்னருகில் இருப்ப‌வ‌ர்;


மற்றுமொரு பிம்ப‌த்தின் துணையோட‌ வ‌ந்த‌
என்‌ பால்ய‌ சினேகித‌ன்,
‘எப்போ நீ வெளியில வ‌ந்தே?’
என்று இருமுறை வினவியப்பின்
நீண்ட நேர யோசனையின் விளைவாய்
நினைவுக்கு வ‌ந்த‌தென‌க்கு;


“வ‌ழ‌க்கொன்றின் தீர்ப்பாய்
க‌ண்ணாடியில்லா உல‌கிற்கு
மாற்ற‌ம் செய்ய‌ப்பட்டுள்ளேன்
ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னெனவும்,
இன்று தான் அங்கிருந்து
விடுத‌லையானேன் என‌வும்”


நன்றி,
நாணல்