Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, 2 October 2012

அதிசய காந்தம்..

கேள்வி பதில்களென நிறைந்திருந்த
குடுவையிலிருந்து தகுந்தவை ஈர்த்தெடுக்கவென
அதிசய காந்த‌ம் ஒன்றை கொண்டுள்ளேன்..

எஜ‌மான‌னுக்கு விசுவாசியாய் இருக்கும்
நாய்க்குட்டியைப் போன்றே காந்த‌மும்
எனக்கு விசுவாசியாய் இருந்தது இதுநாள்வரை..

இக்கணம்
அத‌ன் பிற‌ந்த‌ அல்ல‌தென்
பொக்கிஷ‌ பெட்ட‌கத்தினுள் புகுந்த
நாளை நினைவு கூர்கின்றேன்..

ஆண்டவன் விளையாட்டிற்கு
காரணம் கேட்பதே தம் கடமையென‌
பெரிவர்கள் கூட்டம் மும்முர‌மாய் இருக்க‌
விளையாட்டே வாழ்க்கையென கோவில் மணலில்
விளையாடிக்கொண்டிருந்தோம் நாங்க‌ள்,
அங்கே ஒரு
சிறு க‌ல்லாய்த் தென்பட்டு
மேனியில் மேலும் சில‌ தாதுக்க‌ளோடு
உயிர்த்தெழுந்த இந்த அதிச‌ய‌ காந்த‌த்தை
என் வ‌ச‌மாக்கிக்கொண்டேன்
சிறுவ‌ர் ப‌ஞ்சாய‌த்திற்குப்பின்!

அன்று முத‌ல்,
கேள்விக்கேற்ற‌ ப‌திலையும்
ப‌திலுக்கேற்ற கேள்வியையும்
என‌க்காக‌ ஈர்த்து த‌ந்தது,
உட‌ல் ந‌லக்கோளாறோ இல்லை
சூழ்நிலைக்கார‌ண‌மாக‌வோ
த‌ன் ப‌ணி மறந்து
பொருந்தாத பலதை ஈர்க்கின்றன
சில நாட்களாய்!

அதன் சக்தி முற்றிலும்
முற்று பெருவதற்கு முன்
மெதுமெதுவாய் அதன் திறனை
ஈர்த்துக்கொண்டிருக்கிறேன் நான்,
மற்றுமொரு காந்தம் தனை தேடிக்கொண்டே!

நன்றி,
நாணல்

Sunday, 30 September 2012

ரகசிய சினேகிதனே…

செல்பேசியின் க்ளிக் சத்ததிற்குப் பின்
உடனே அதன் திரையை
எட்டிப்பார்க்கும் குழந்தையென
உன் கண்களை எட்டிப்பார்க்கின்றேன்,
அதில் பதிந்த நம் காதலை உறுதிசெய்ய!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

என் செவிக்குள் ஒலிக்கும் இசைக்கேற்ப
தூரத்து குழந்தையின் நடனம்
அமைவ‌தாய் உணர்கின்றேன்
உந்தன் பரவசம்
என் காதலாலென‌ உணர்கையில்..


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

புதியதாய் கற்ற‌ எழுத்துக்களை
கண்படும் வார்த்தைகளில் எல்லாம்
துழாவும் ம‌ழ‌லையென‌ உன்னில்
என்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன்!


முந்தையப் பதிவுகள் - 12,34, 5, 6, 7

நன்றி,
நாணல்

Monday, 30 July 2012

ரகசிய சினேகிதனே…


வெட்கப்படவைக்கும் உன் வினைக்கு
உன்னைச் சுடுவதே
பழமையின் மொழி,
மாறாக
முற்பகல் செய்த காதலின் பயனால்
சலுகைகள் உனக்கு கிட்டுவதும்
பழமையின் மொழியே!



♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


உன்னுடன் பேசியபின் தான்
எந்நாள் முழுமை பெறுகிறதென
உன்னுடன் பேசாதிருந்த
நாளொன்றில் புரிந்தேன்!



♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


ராவணனை மிஞ்சிய பல
அவதாரங்களெடுத்தவன் நீயோவென
சந்தேக்கின்றேன்
பல நெருங்கிய நண்பர்களாலும்
ஈடுசெய்ய முடியா
உன்னிழப்பில் தவிக்கையில்!



♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


காற்றில் மிதக்கின்ற
செல்ல கையோங்கல்கள்
தரும் அலாதி
பறிமாறிக்கொண்ட முத்தங்களைக்
காட்டிலும் அதிகமே! 



முந்தையப் பதிவுகள் - 12,34, 5, 6


நன்றி, 
நாணல்

Tuesday, 15 May 2012

தீர்ப்பின் வழக்கு

‘இன்று உனக்கு விடுதலை’யென
குரல் வந்த வழி
ந‌ன்றி சொல்லிப் புறப்பட்டேன்,
வழி நெடுக்க
விசித்திர நிகழ்வுகளைச் சும‌ந்த‌ப‌டி!


உச்ச‌க்க‌ட்ட‌மாய்
என‌க்கெதிரே ஒரு பிம்பம்;
என் கைக‌ள் செய்வ‌தை
நேரெதிர் திசையில்
செய்து கொண்டு,
நான் உச்ச‌ரிக்கும் வார்த்தைகளுக்கேற்ப‌
அத‌ன் இதழ்களைக்
குவித்துக் கொண்டும்;


என்ன‌ருகில் இருப்ப‌வ‌ரைப் போன்றே
அத‌ன‌ருகிலும் ஒரு பிம்ப‌ம்,
இவ‌ர் செய்வ‌தையே செய்த‌ப‌டி;
இவ‌ருக்கில்லா குழ‌ப்ப‌ம்
என‌க்கு ம‌‌ட்டுமேனோ
என யோசிக்கையில்
பிம்ப‌த்தையும் அழைத்து சென்றுவிட்டார்
என்னருகில் இருப்ப‌வ‌ர்;


மற்றுமொரு பிம்ப‌த்தின் துணையோட‌ வ‌ந்த‌
என்‌ பால்ய‌ சினேகித‌ன்,
‘எப்போ நீ வெளியில வ‌ந்தே?’
என்று இருமுறை வினவியப்பின்
நீண்ட நேர யோசனையின் விளைவாய்
நினைவுக்கு வ‌ந்த‌தென‌க்கு;


“வ‌ழ‌க்கொன்றின் தீர்ப்பாய்
க‌ண்ணாடியில்லா உல‌கிற்கு
மாற்ற‌ம் செய்ய‌ப்பட்டுள்ளேன்
ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னெனவும்,
இன்று தான் அங்கிருந்து
விடுத‌லையானேன் என‌வும்”


நன்றி,
நாணல்

Saturday, 24 March 2012

புத்தகத்தினுள்...

புத்தகத்தினுள் நுழைய முனைந்து
தொட்டுச்செல்லும் காற்றின் முகவரி தேடுகின்றேன்,

காக்கிச்சட்டைப் பெண்ணின் சுவாரசியக் கதைகளை
அவள் தம்பியுடன் அவளறியாது கேட்கின்றேன்,

காதலர் தினக்காகிதங்களோடு தம் கதைகள் சொல்லி
கன்னங்கள் சிவக்கும் எதிர்சீட்டுப்பெண்ணை ரசிக்கின்றேன்,

சற்றுமுன், நண்பருக்கு நானளித்த நாட்குறிப்பை மறந்து
நாட்குறிப்போடிருக்கும் பெண்ணை விசித்திரமாய்ப் பார்க்கின்றேன்,

சற்றே அறிமுகமான பெண்களுக்குள்
பேசக்கிடைக்கும் தலைப்புகளை எண்ணி வியக்கின்றேன்,

கையேந்தும் திருநங்கைக்கு புதுவாழ்வளிக்க
செய்வன எண்ணி காசு கொடுக்க மறுக்கின்றேன்,

பார்வையில்லா வியாபாரியின் கையில் கிடக்கும்
பொருளின் விலையெண்ணி வாங்க யோசிக்கின்றேன்,

விலை மறந்து, பொருள் தரம் மறந்து
பத்திற்கு மூன்றென எந்நிலையம் வரும்வரை கொறிக்கின்றேன்,

இக்கணம் உங்களைத்தழுவும் ஆயாசம்
என்னைத்தொழுகையில் மீண்டும் புத்தகத்தினுள் நுழைகின்றேன்.

நன்றி,
நாணல்

Sunday, 12 February 2012

சுவரில்லாச் சித்திரங்கள்!

சமைத்த கறி இதுவென்று
சுவரேறும் புகைப்படத்தின்
வர்ண ஜாலங்களுக்கேற்ப
கூடும் விருப்ப எண்ணிக்கையோடு
வாழ்க்கை அடங்கி விடுமெனின்
ருசியாக சமைக்க தேவையிறாது!


நொடிக்கொரு முறை
சுவரேறும் வாசகங்களின்
வார்த்தை ஜாலங்களுக்கேற்ப
கூடும் பகிர்வு எண்ணிக்கைகளோடு
வாழ்க்கை அடங்கி விடுமெனின்
ரசனையோடு வாழத் தேவையிறாது!


பின்குறிப்பு : சமுகமயமாக்கல் என்னும் பெயரில் உண்மையில் நாம் சமூகத்தை விட்டு வெகுதூரம் சென்று கொண்டிருக்கிறோமோ என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த படைப்பு!


நன்றி உயிரோசை !


நன்றி,
நாணல்

Wednesday, 4 January 2012

ஆழி மழை

நனைக்கின்ற மழையை
மறுக்காது,
ஏற்கின்றேன் மணலாய்!

மறுக்கின்ற அலையைத்
தடுக்காது,
வழிவிடுகின்றேன் கரையாய்!

மழையாய் அலையாய்
மணலாய் கரையாய்
நீயாய் நானாய்
என எல்லாமுமாய்

நித்தமும் நிரம்பிக்கொண்டேயிருக்கிற
நரலை தனில் உன் துளிகளையும்
நிரப்புவது தான் உனக்கிட்ட பணியெனின்
நிரப்பிக்கொள் முடிந்தவரை!

நன்றி,
நாணல்

* நரலை - கடல்

Monday, 12 December 2011

இணையான துணை

தீட்டிய திட்டப்பணி
நேரத்தே முடிவுற‌
இரவு பகல் பாராது
தனிப்பட்ட வாழ்க்கை மறந்து
எமக்கு இணையாய்,
சிலநேரம் - இன்னும் அதிகமாய்
உழைக்கும் கன்னியர்களும் உண்டு
எம் திட்டக்குழுவில்!


உழைப்பை அங்கீகரிக்கும்
விருதுகளுக்கான‌
பட்டியலை வாசிக்கையில்
எம் எண்ணிக்கைக்கு இணையாய்,
சிலநேரம் - இன்னும் அதிகமாய்
நிலைக்கும் பெண்டீரும் உண்டு
எம் திட்டக்குழுவில்!


எம்மில் அவர்கள் என்னக்குறைவென
எம் வாழ்க்கைத் துணைவியாக
எமக்காக வாழவிருக்கும்
அவர்களிடமே தட்சனை கேட்கிறீரே
இது
எம்மை விலை பேசுவதற்கு சமமன்றோ!


நன்றி,
நாணல்

Tuesday, 15 November 2011

ரகசிய சினேகிதனே…

கண்ணிமைக்கும் நேரத்தில்
உன் உதட்டோரத்
திருஷ்டிப்பொட்டாக‌
உருவெடுக்கிறது
என் கண்ணின் மை!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

சீராக எழுதிய
தமிழின் எழுத்துக்களை விட‌
உன் பெயராய் உருபெற‌
சிதறிய தமிழின் எழுத்துக்கள்
தரும் மயக்கமே அலாதி!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

உனக்கு தரவேண்டி நான் சேமித்த
முத்தப்பரிசுகளையெல்லாம்

நீ எனக்களித்த பரிசுப்பொருட்களே
தட்டிப்பறித்தால்
என் செய்வேன் நான்!

முந்தையப் பதிவுகள் - 1, 2,3, 4, 5


நன்றி,

நாணல்

Sunday, 30 October 2011

ந‌க‌ர‌த்துப் பெருவிழாக்க‌ள்!

உறவுகளின் மேன்மை மறந்து
‌நம்மை மட்டுமே சார்ந்த ஆசைகளோடு
நெரிசலான கடைவீதிகளில் உலாவும் நாம்,
ஊர் கூடி உறவு பேண‌‌
வர‌வேற்கப்பட‌வேண்டிய‌ பெருவிழாக்களை,
அன்புள்ளங்களின் அரவணைப்பிற்குப் பதிலாய்
காவல்துறையினரின் பலத்த பாதுகாப்போடும்
பட்டறிந்தோரின் கண்காணிப்பிற்குப் பதிலாய்
கண்காணிப்பு நிழற்படவியின் அடியிலும் தானே
வர‌வேற்கின்றோம் நகரத்துப் பெருவிழாக்களை!

%$^&@#$

ரகசியக்கண்கள் பொருந்திய‌
கண்காணிப்பு நிழற்படவிக்கு
ரகசியக்கரங்களும் பொருத்தப்பட்டிருந்தால்,
சில விபத்துக்களும்
பல குற்றங்களும்
தவிர்க்கப்பட்டிருக்கலாம்!

ந‌ன்றி,
நாண‌ல்


Tuesday, 4 October 2011

ப‌ரிதாபக் காத‌ல்!

எனக்கானவன் நீயில்லையென‌
தெளிந்த‌ எதார்த்த‌த்திற்கும்
என்ன‌வ‌ன் நீயில்லையென‌
மெலிந்த‌ என் போராட்ட‌த்திற்கும்
இடையில்
நம்
ப‌ரிதாபக் காத‌ல்!

$%^&#@$

ஜானேற‌ முழ‌ம் ச‌ருக்கும்
ச‌ருக்கு ம‌ர‌ம் போல,
உன் நினைவுகள்
சிறுக மறைந்து
பெருக மலர்ந்து
என்னைக் கொல்லுதே!

$%^&#@$

தூரத்துப் புள்ளியைத் தொட்டிடும்
முயற்சியென சாலைகள்
நீண்டு கொண்டேப் போனாலும்,
கிட்டாத புள்ளியென
மனதின் ஆசைகள்!

நன்றி,
நாணல்

Tuesday, 6 September 2011

நீட்சி...

திருமணத்தடை நீங்க
மஞ்சற்கயிறு;
பிள்ளைப்பேறு பெற
மரத்தாலான தொட்டில்;
வேண்டுதல்கள் நிறைந்த
காகித மாலைகள்;
வெற்றி கிட்டிய பரவசத்தில்
மஞ்சள்குங்கும அபிஷேகமென
முக்காலத்து நம்பிகைகள்
பொய்க்காத வரையேனும்,
தன் வாழ்நாள் நீளுமென
நம்பிக்கை கொள்கிறது
திருவிடம் வாசம் செய்கின்ற
நற்பேறுடைய ஓங்கல்!

நன்றி,
நாணல்

Sunday, 28 August 2011

ரகசிய சினேகிதனே…

உனது கொஞ்ச நேரக்
கெஞ்சல்களுக்காகவே,
உயிர்க் கொள்கிறது
எனது கொஞ்ச நேரத் திமிரும்!!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

அர்த்தமில்லா அர்த்தங்கள்
நிறைந்த அபத்தங்களும்
அர்த்தம் தரும்
நமது உரையாடல்களில் மட்டும்!!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

காதலின் அழகைக் கூட்டும்
சுவாரசியமான தேடல்களுக்காகவே
ரகசியங்கள் காக்கப்படுகின்றன
காதலின் தேடலில்!!


முந்தையப் பதிவுகள் - 1, 2,3, 4


நன்றி,
நாணல்

Monday, 1 August 2011

தோழியின் தோழன்..

கதைகள் பல பேசி
கருத்துக்கள் பல பரிமாறி
நம்பத்தகுந்த உறவானாய் நீ - என்
உயிரின் உறவான தோழன்!

பால் வேற்றுமை தாண்டிய
உறவாயியினும்
நிச்சயிக்கப்பட்ட பிரிவைத் தவிர்க்க
தவியாய் தவித்தும்
தவறவில்லை நம் பிரிவு!

காலங்கள் மாறினாலும்
மனித மனங்கள் விரிந்தாலும்
வாழ்க்கைக் கோட்பாடுகளின்
நாகரிகம் கருதி முளைக்கின்ற
திடீர் மரியாதைகளையும் அவதானிப்புகளையும்
சகஜமாக்கிக் கொள்ள முயற்சிக்கின்றேன்,
நீ என் தோழனானதால்…

நன்றி,
நாண‌ல்

Saturday, 9 April 2011

வ‌ழிய‌னுப்புகிறேன் நானே!

பல‌ வண்ண
பள்ளிச் சீருடைகளை
எனக்கு அணிவித்து,
சின்ன‌ச் சின்ன‌
காலுறைக‌ளுக்குள்
என் பிஞ்சுக் கால்களைத் திணித்து,
அழுது வடிந்த கண்களுடன்
புத்த‌க‌ப் பையை
தூக்கிக்கொண்டு
நான் ப‌ள்ளி செல்லும்
முதல் நாளன்று,
எனக்கு கையசைத்து விடைகொடுத்து
வழியனுப்ப நீயிருக்கமாட்டாயென‌த்
தெரியும் தாயே!

பல‌ வ‌ண்ண‌
மேல்நாட்டு ஆடைக‌ள்
அணிந்து,
அத‌ற்கேற்றார் போன்ற
காலுறைக‌ளுக்குள்
உன் அவ‌ச‌ர‌த்தையும்
என் நினைப்பையும்
மாட்டிக்கொண்டு
தூக்கம் மிச்சமிருந்த கண்களுடன்
ம‌திய‌ உண‌வுப் பையைக்
கையில் தூக்கிக்கொண்டு
எனைப் பார்த்து கைய‌சைத்துக் கொண்டே
அலுவ‌ல‌க‌ம் செல்லும் உன‌க்கு
கைய‌சைத்து விடைகொடுத்து
வ‌ழிய‌னுப்பி வைக்கின்றேன்
தின‌மும்…
இன்றாவது,
என் இர‌வு தூக்க‌த்திற்கு
முன் நீ வ‌ருவாயென‌!

ந‌ன்றி,
நாண‌ல்

Friday, 25 March 2011

த‌வ‌றுக‌ள் இல்லாத‌ நாளொன்று

தவறி செய்த தவறும்
மறுத்துப்போகக்கூடும்;
பாதித்தவரின் பெருந்தன்மையால்
ஆறுதலையும் பெற்றுவிடக்கூடும்;
என்
த‌வ‌றுக‌ளை
ம‌ன்னிப்புக் க‌ண்ணீராய்
உரு மாற்றினால்!

மாறாக‌
யாருக்கும் புல‌ப்ப‌டாத‌
மௌன‌ச்சாட்டையாக‌வே
மாற்ற‌ விரும்புகிறேன்,
த‌வ‌றுக‌ள் ம‌றந்தாலும்
சாட்டையடி தந்த‌ வ‌லி
ம‌ற‌வாது என‌வே!

புரியாது செய்பவை
பிழையென
பிழைத்துக்கொள்ள‌க்கூடும்,
புரிந்தும் புரியாது
செய்த‌வை
ம‌ன்னிப்ப‌ற்று
ம‌ன்னிப்புக்கேட்கும் த‌குதிய‌ற்று
துண்டித்து விட‌ப்ப‌ட்டால் ஒழிய‌
‘த‌வ‌றுக‌ள் இல்லாத‌
நாளொன்றின்
பிம்ப‌ம் ஜ‌னிக்காது’
எனும் ப‌டிப்பினையோடு
த‌வ‌றுக‌ள் செய்யாத‌
நாளொன்றுக்காய்
செதுக்கிக்கொண்டிருக்கிறேன்
என்னை தினமும்!

நன்றி,
நாணல்

Saturday, 5 March 2011

க‌விஞ‌னும் காத‌லும்

“மனதிற்குப் பிடிக்காதது
மறதிக்குப் போகட்டும்”
என்றான் கவிஞன்;
எனக்கோ
பிடிக்காதவைகளை
உன்னுடன் பகிர்கையில்,
ந‌ம் நெருக்க‌ம்
கூடுமென்பதால்
பிடிக்காதவைகளும்
பிடித்தவைகளாகின்றன!

–00–00–

வார்த்தைக‌ளின் ஓட்ட‌ம்
குறையும் போது,
பிடித்த‌ எழுத்தாள‌ரின்
எழுத்தைப் புர‌ட்டும்
க‌விஞ‌னாய்,
வாழ்க்கையில் ஊட்ட‌ம்
குறைகின்ற‌ பொழுது
ந‌ம் காத‌லைப்
புர‌ட்டிக் கொண்டிருக்கிறேன் நான்!


ந‌ன்றி,
நாண‌ல்

Wednesday, 2 March 2011

ரகசிய சினேகிதனே…

“வர வர
உன் ச‌மைய‌லின் ப‌க்குவ‌ம்
கூடிக்கொண்டேயிருக்கிற‌து”,
என‌
புக‌ழும் தாய்க்கு,
எப்ப‌டி சொல்லுவேன்
உன்னுடன் பேசிக்கொண்டே
சமைக்கும் போது மட்டுமே
சுவையும் கூடுகின்றதென்று!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

வாச‌லில் நின்று கொண்டே
அவ்விலாச‌த்தைக் கையிலேந்தி
விசாரித்துக் கொண்டிருப்ப‌வ‌ளைப் போல்
என்னுள் இருக்கும்
உன்னைய‌றியாது
காதலைக் கையிலேந்தி
விசாரித்துக் கொண்டிருக்கிறேன் நான்!”

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

“எப்ப‌வுமே இப்ப‌டி தானா நீ?”,
என‌
நீ என்னைக்
கேட்கும் போதெல்லாம்
நீ என்ன‌ருகிலே இருந்தால்
ம‌ட்டுமே இப்ப‌டி
என‌ சொல்ல‌ விரும்பி,
“எப்ப‌வுமே இப்ப‌டி தான்”
என‌ ம‌ட்டும் சொல்லி
உனை என் கால‌த்துக்கும்
க‌ட்டிக்கொள்கிறேன்!


முந்தைய பதிவு -
1, 2,3


நன்றி,
நாணல்



Saturday, 26 February 2011

உன் ஞாப‌கங்களும்!!

புது வருடம்
பிறந்தும்
தன்னையறியாது
வந்து விழும்
பழைய வருடத்தைப்
போன்றே,
பிரிந்த பின்பும்
என்னையறியாது
வந்து விழும்
உன் பெயரின் உச்சரிப்பு
நிலைநாட்டுமே
நம் எஞ்சிய நேசத்தை!!

#$%^&#@

திரையில்
சில நொடிகள்
தங்கி ஓய்வெடுத்து
புகைப்படமாகப்
பதிவான பின்
சரசரவென நகரும்
சாலையின் வாகனங்களைப்
போன்றே
உன் ஞாப‌கங்களும்!!

நன்றி,
நாணல்

Saturday, 19 February 2011

(மூட)ந‌ம்பிக்கை

காலத்தே நிகழக்
கூடுமானவைகளுக்காக‌
காத்திருக்க பொறுமையிறாத‌
இடத்தே தான்
பிறக்கிறது மூட நம்பிக்கை!

தம் நம்பிக்கையால்
நிகழ்ந்த வெற்றியை
பிறரைப் பொறுப்பேற்றுகையில்
மூட நம்பிக்கையாய்
வடிவம் கொள்கிறது
நம்பிக்கை!

நன்றி,
நாணல்