Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

Monday, 7 March 2011

அதிசயமான குணாதிசயங்கள்!

நம் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு வகையில் எல்லாமுமாய் நிறைந்திருப்பது நிச்சயம் ஒரு பெண்ணாகத் தானிருக்கும். அப்படி கடந்த வந்த சில பெண்களைப் பற்றியும் பெண்களின் குணாதிசயங்களைப் பற்றியும் ஒரு குட்டி அலசல் இங்கே, உலக மகளிர் தினத்தைக்(March 8, 2011) கொண்டாடும் பொருட்டு.

*****************

“என்னடா கண்ணு பண்றே… இது என்னது?”

“எ ன் வ ய ல்..”

“எனக்குத் தரியாடா..”

“நோ நோ நோ”

எனத் தன் பிஞ்சுக் கைகளால் வளையலை பிடுங்க வந்த தன் தாயின் கையைத் தட்டிவிடுகிறாள் ஒன்றரை வயதான சுஹாசினி…

மழலையின் சுவடு மாறாது, வித விதமான முக பாவங்களால் சுற்றியிருக்கும் அனைவரையும் தன் பால் ஈர்க்கிறாள் இந்தச் சுட்டிப் பெண். பாலின வேறுபாட்டை மனதால் அறிந்து கொள்ள முடியா வயதிலும், தனக்கு வளையள்கள் மீதும், தன் தாய் அணிந்துள்ள ஆரத்தின் மீதும் ஆர்வம் காட்டுகிறாள் என்பது என்னை ஆச்சரிய‌த்திற்குத் தள்ளியது.

புதிதாய் உலகில் காலடி வைத்து ஒவ்வொன்றாய்க் கற்றுக் கொள்ளும் இந்த பிஞ்சு மனதினுள் பெண்மைக்குண்டான “நகைகள் மீதான ஆசை”யென்னும் கோட்பாட்டைத் திணித்த இயற்கையை என்னவென்று சொல்ல?

*****************

”பாரதி.. தம்பி கூப்பிடறான் பாரு…”

“பாரதி… கடைக்குப் போயி இதை வாங்கி வந்துடும்மா..”

“பாரதி… அப்பாக்கு சாப்பாடு போடு..”

எதற்கெடுத்தாலும் பாரதி தான் பொறுப்பாளியாய் இருந்தால் என் பக்கத்து வீட்டில்…அவளின் பெயரின் விளிப்பை மட்டுமே கேட்ட எனக்கு, பாரதி ஒரு பொறுப்புள்ள குடும்ப தலைவியாய்த் தெரிந்தாள்.நெருங்கி விசாரித்துப் பார்த்ததில், பாரதி ஏழு வயது மட்டுமே நிரம்பிய சுட்டிப் பெண்ணெனத் தெரிந்தது..

வயது வரம்பின்றி பொறுப்புகளைக் கையிலெடுத்துக் கொள்வதும் பெண்மைக்குண்டான அதிசயம் தானோ?

*****************

“Excuse me , காலைல இந்த பஸ் golden flats stopல எத்தனை மணிக்கு வரும்?”

“தெரியாதுங்களே, நான் வேற office, இன்னைக்கு மட்டும் தான் இதுல வரேன்.. நீங்க வேணா இறங்கும் போது driver கிட்ட கேட்டுக்கோங்க..”

“சரிங்க… நான் இந்த office தான், ஆனா, இன்னைக்கு தான் Bangalore ல இருந்து transfer ஆகி வந்தேன்… driver கிட்ட கேட்டுக்கறேன்… thanks ”

இந்த உரையாடலை முடித்ததும் “தெரியாது” என்ற ஒற்றை வார்த்தைப் பதிலுக்கு இத்தனை விளக்கங்களா?

முதல் தடவை தான் பழக்கமெனினும், நிரம்ப பேசுவது பெரும்பாலாக பெண்களின் குணாதிசயம் தானே?

*****************

“என்ன புக் படிக்கறீங்க?”

எதுவும் பேசாமல் அட்டைப் படத்தைக் காட்டினேன் …

“நீங்க எங்க இருக்கீங்க?”

“சென்னைல அம்பத்தூர்”

“அப்ப , இப்ப எங்க போயிட்டு இருக்கீங்க?”

“அரக்கோணத்துல எங்க மாமா வீட்டுக்குப் போறேன்”

இப்படியே என்ன பண்றீங்க, என்ன படிச்சிருக்கீங்க என பல கேள்விகளையும், எதிர் கேள்விகளையும் கொண்ட குட்டி அறிமுகத்திற்குப் பின் மீண்டும் புத்தகத்தினுள் நுழைந்து கொண்டேன், மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்க இடம் தர வேண்டாமென.. தொலைபேசி மணி அழைக்க எடுத்துப் பேசினேன்.. பாட்டியின் உடல் நிலை சரியில்லையென அப்பா சொல்ல, கண்கள் கலங்கி, பாட்டியின் புகைப்படத்தை அலைபேசியின் திரையில் பார்த்தவாறே பாட்டிக்காக பிரார்த்தனையைத் துவங்கினேன்…மீண்டும் அருகிலிருந்த பெண்…

“யாருங்க இவங்க? உங்க பாட்டியா?”

“அஹ் ஆமாம்”

“ஏங்க போட்டோவை ரொம்ப நேரமா பார்த்துட்டு இருக்கீங்க… அவங்களுக்கு உடம்பு சரியில்லையா என்ன?”

கண்கள் கலங்க “ஆமா, இப்ப தான் அப்பா சொன்னார், serious அஹ் இருக்காங்களாம்”

“சரி கவலைப் படாதீங்க, சரியாயிடும்… தைரியமாயிருங்க…” என இதமான புன்னகையைப் பரிசாகளித்தாள்…
அருகில் இருப்பவரின் விஷயத்தினுள் மூக்கை நுழைப்பது என்பது பெண்களுக்கே உண்டான குற்றச்சாட்டு தான்.. இதற்கேற்றார் போல் இருந்த ஆரம்ப நிலை உரையாடல், நான் பகிர்ந்திடாத கண்ணீரைத் துடைத்த போது பெண்மையின் அதிசயத்தை உணர்ந்து, நான் ஒரு பெண்னெபதில் கர்வம் கொண்டேன்…

*****************

”அக்கா , இன்னைக்கு என் கனவுல பூஜா வந்தாக்கா”

“ஹ்ம்ம்ம்… ஏண்டி உன் அக்கா நான், என்னைக்காச்சு உன் கனவுல வந்திருக்கேனா? ஆனா மூணு வருஷமா தெரிஞ்ச பூஜா வந்தாளாம்..” என கடிந்து கொண்டாள் அக்கா..

என்ன சொல்வதென்று தெரியாது.. அக்கா என்கிற முறையில் நான் மறுத்தாலும், தாய்க்கு அடுத்து எனது முக்கிய உறவாக இவள் தான் இருக்கப் போகிறாள். கனவில் வரவைல்லையென ஏன் இப்படி சிறு பிள்ளைத் தனமாக நடந்து கொள்கிறாள், என அவளின் possesiveness யை பரிகசித்துக் கொண்டு, இனி கனவில் வருகின்ற தோழியைப் பற்றி அவளுக்கு சொல்லக் கூடாதென என் வேலைகளை செய்ய ஆரம்பித்தேன்..

சில நேரங்களில் உறவுகளை அழித்தும் விடுகிற, இந்த மாதிரியான possesiveness பெண்களுக்கே உண்டான குணா(அ)திசயங்களில் ஒன்றோ?

*****************

”ஏழு மணியாச்சு எழுந்திரும்மா”

“ஹ்ம்ம்ம்… “

எழுந்திருக்கும் வரை அந்த இடத்தை விட்டு நகராது, எழுப்பிக்கொண்டேயிருப்பாள் பாட்டி.. ஒரு நிமிடம் கூட அமைதியாய் இருக்காது ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டேயிருப்பாள். ஊரிலிருந்து எங்கள் வீட்டிற்கு வருகிறாளென்றாலே, வீடு முழுவதையும் சுத்தம் செய்து வைத்திருப்போம்…வந்த இரண்டு மணி நேரத்தில், இது ஏன் இங்க இருக்கு என எதையாவது எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டிருப்பாள்.. பாட்டி வந்தாலே வீடு சுத்தமாக இருக்கும் என்பது எழுதப் படாத சட்டமாகி விட்டது எங்கள் வீட்டில்.. ஓய்வு நேரம் கிடைத்தால் தூங்கியே பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு பாட்டியின் பெண்மை சொல்லிக் கொள்வதென்ன?

வீட்டில் முக்கியமான ஒருவர் இறந்து விட, வீடே பரபரத்துக் கொண்டிருந்தது எப்படி கிளம்பலாம் என… அந்த இக்கட்டான சூழலிலும் “பின்னாடி கதவை மூடனியா? பால் காரனுக்கு சொல்லிட்டியா? பணம் எடுத்துட்டியா?” என ஒவ்வொன்றாய் ஞாபகப் படுத்திக்கொண்டு என்னையும் அம்மாவையும் விரட்டிக் கொண்டிருந்தாள் பாட்டி..
இப்படி எந்த விஷயமாக இருந்தாலும், எந்த இக்கட்டான நேரமாக இருந்தாலும் செய்யும் வேலையில் ஒரு பூரணத்துவம் கொண்டு வரும் பாட்டிப் போன்றோரின் பெண்மையும், அதிசயங்களில் ஒன்று தானே?

*****************

குடும்ப உறுப்பினர் ஒருவரின் இழப்புக்குப் பின், எல்லாக் காரியங்களையும் முடித்த ஞாயிறு இரவு பத்து மணியளவில்..
இழப்பின் வலி ஒரு பக்கமென, கடமை ஒரு பக்கமென, காலை எழுந்து அலுவலகம், பள்ளி , கல்லூரி செல்ல வேண்டுமேயென வீட்டில் ஒவ்வொருவரும் மூளையில் வீங்கிய கண்களுடன் உறங்கப் போனோம்… மன அயர்ச்சியோடு உடலும் சோர்ந்து இருந்ததால், வெகு நேரம் உறங்கி கடைசி நேரத்தில் பறந்து பறந்து கிளம்பிக் கொண்டிருந்த போது தான் கவனித்தேன், எங்களை விட பல மடங்கு சோகத்திலும், உடல் சோர்ந்தும் இருந்த அம்மா வழக்கம் போல காலை எழுந்து காலை உணவையும், கட்டி செல்ல வேண்டிய மதிய உணவையும் தயாராய் வைத்திருந்தாள் என்று..

இடியே இடிந்து விழிந்தாலும், தன் கடமையை நேரந்தவறாது செய்யும் அம்மாவின் பெண்மையிடமிருந்து, நான் கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம் தானே?

*****************

உலக மகளிர் அனைவருக்கும் என் உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்…



நன்றி,
நாணல்

Tuesday, 8 February 2011

ஒரு கேள்வியும் மூன்று நிகழ்வுகளும்..

சில காலமாய் எனக்குள் எரிச்சலூட்டி வரும் ஒரு விடயத்தைப் பற்றித் தெளிவான புரிதலுக்காக வேண்டி இந்த பதிவை எழுதுகிறேன். என் கேள்வி மிகவும் சிறியது.

பெண் என்றாலே மோகம் தரும் பொருட்களில் ஒன்று என்ற நினைப்பு எப்பொழுது மாறும்?

ஜனனம் தருவிக்கும் தாய் முதல் , தங்கையாய் , உற்ற தோழியாய் நம் அனைவரின் வாழ்விலும் பெண் ஒரு அங்கமாய்த்தானிருக்கிறாள். இருந்தும் அவளின் மென்மையான பெண்மை கேலிகூத்தாக ஆக்கப்படும் போது, இந்த சமுதாயத்தின் மீது எரிச்சலுடனான கோவம் தான் வருகிறது. பெண்ணியம், பெண் விடுதலை என முற்போக்கு சிந்தனையாளர்கள் ஒரு பக்கம் குரலெழுப்பிக் கொண்டிருந்தாலும் உண்மையில் தினசரி வாழ்வில் இந்த குரல்கள் எதிரொலிக்கப்படவில்லையென்று தான் தோன்றுகிறது. எனக்கோ என் தோழிக்கோ நிகழ்ந்தவை வைத்து இந்த பதிவை நான் எழுதுகிறேனா, என்றால், இல்லை என்பது தான் என் பதிலாக இருக்கும், அப்படியிருப்பின் நிச்சயம் என் மனக்குமுறல்களாக என் நட்பின் வட்டத்திலேயே நின்று போயிருக்கும்.


  1. நம் வாழ்வின் அங்கமாகிப்போன தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிவரும் பல விளம்பரங்களில்,தேவைப்படாத இடங்களில் கூட பெண்கள் இருப்பர். சில நேரங்களில், அது அவர்களின் வியாபர யுக்தி எனக் கொள்ளலாம் . ஆனால், வியாபாரத்திற்காக இப்படி ஒரு அட்டூழியம் தேவையா எனத் தோன்றுகிறது சிலவற்றைப் பார்க்க நேர்கையில். உடலின் வியர்வை நாற்றம் என்பது இயல்பே, இயற்கைக்கு மாறாய், அதை மறைக்க வாசனையூட்டும் திரவியம் அடித்துக் கொள்வது இந்நாளில் வாடிக்கையாகிவிட்டது. இந்த பொதுவான ஒன்றை வைத்துக் கொண்டு, ஆண்களின் வாசனைத் திரவியம் பெண்களைக் கட்டுப்பாடற்றதாக்கும் என்பது போன்ற சித்தரிப்புகள் என்ன சொல்ல வருகின்றன என்று தான் தெரியவில்லை. வெறும் வார்த்தையோடு நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை, அதை நிரூபிக்கும் வகையில் ஆணின் வாசம் நுகர்வதற்கு முன், நுகர்ந்த பின் என அந்தப் பெண்ணைக் காட்டும் கோலம், பெண்களைப் பற்றி அவர்களின் மனதில் உள்ள கேவலமான உணர்வின் உச்சக்கட்டமாகவேப் படுகிறது.

  2. தொலைக்காட்சியில் தான் இப்படி என்று புத்தகமாவாவது படிக்கலாம் என்றால் அது இன்னும் வெருப்பூட்டும் வண்ணமாகவே இருந்தது. கவிதை நூல் என்னும் வகையில் பெரிதாக எதுவும் படித்திடாத நான், இந்த ஆண்டு முதலேனும் படிப்போம் என்னும் ஆர்வத்தோடு வாங்கிய, கவிதைகளின் தொகுப்பு ஒன்றை முன்னுரையிலிருந்து படிக்கத் தொடங்கினேன். பல பிரபலங்களின் வாழ்த்துரைகளைப் படித்துக்கொண்டிருக்கையில், ஆர்வ மிகுதியில் கவிதைகள் பக்கம் திருப்பிப் படிக்கத் தொடங்கினேன். ஆரம்ப பக்கங்களில் அவரின் கற்பனையின் வெளிப்பாடான ஒவ்வொரு கவிதையையும் புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தேன். சில பக்கங்களைக் கடந்த பின், ஆண்களின் கவிதை உலகில் நிச்சயம் அடங்கியிருக்கும் பெண்ணைப் பற்றிய வர்ணிப்புகளும், அவள் சார்ந்த கற்பனைக் கவிதைகளும் இடம் பெற்றுக்கொண்டு இருந்தன. வர்ணனைகளின் உச்சக்கட்டமாக பெண்ணின் உடலமைப்பை பற்றியதாக சில கவிதைகள் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருந்த விஷயம் சலிப்பைத் தர ஆரம்பித்தது. எனினும் முன்னுரையில் பல கவிஞர்கள் பாராட்டியிருந்தார்களே, ஒருவேளை அடுத்த தலைப்பின் கீழெனினும் வித்தியாசங்கள் தெரியுமெனப் புரட்டிக் கொண்டேயிருந்தேன். பெண் என்ற பொதுநிலையைத் தாண்டி தாயைப் பற்றிய கவிதைகளிலும் அதே வாடையடிக்க புத்தகத்தை மூடியவள், இன்னும் திறக்கவில்லை. சிற்றிதழில் வெளியான கவிதைகளைப் புரட்டலாமென்றால், அங்கேயும் காமத்தையும் தாயையும் ஒப்பிட்டாற் போன்ற கவிதை. எனக்கு புரியாத ஒன்று இது தான், புனிதமான உறவுமுறையான தாயைப் பற்றி எப்படி கற்பனையாகக் கூட அனாவசிய வார்த்தைகளை உபயோகிக்க முடிகின்றது.

  3. இப்படி ஒன்றுக்கொன்றாய் கூடிக் கொண்டே போக ரூட், ஃபிகர், கரெக்ட் பண்றது போன்ற வார்த்தைகள் இன்னும் எரிச்சலூட்டுவதாகவே அமைந்துள்ளது. இப்படி பேசுவது சகஜமாகிவிட்டது தான். சகஜங்களையும் தாண்டிப் பார்க்கும் போது, புதிதாய் அறிமுகமாகி சில நாட்களாக மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம், இப்படி ஒரு ஆண் பேசுகிறானென்றால் அவளிடம் அவன் என்ன எதிர்பார்க்கிறான் என்று தான் புரியவில்லை. இயல்பாய் பரஸ்பர புரிதலுக்கு பின் வெளிக்காட்டினால் தானே காதலுக்கு மரியாதை. தூண்டுச் சீட்டாய் ஒவ்வொருவர் கையிலும் கொடுத்து விருப்பமுள்ளவர் வாசியுங்கள் என்று சொல்வதற்கு பெயர் என்ன? தான் சந்திக்கும் ஒவ்வொரு பெண்ணிடமும் வார்த்தை ஜாலங்கள் காட்டுவதனால் என்ன நேரப்போகிறது. ஒரு சில காலக் கட்டத்திற்கு பின் இப்படி பேசும் ஆணின் மீதான மரியாதை குறையத் தானே செய்யும்.


மேற்சொன்னவையாவும் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் இடையேயான மெல்லிய இடைவெளியாகவே படுகிறது எனக்கு. இருக்கும் இரு பாலினற்கிடையில் ஒரு வித ஈர்ப்பு இருப்பது இயல்பு தான். பெண்கள் உலகில் ஆண்கள் யாரென புரிந்து கொள்ள விரும்பும் ஆண்களைப் போன்று தான் ,ஆண்கள் உலகில் பெண்கள் யாரென அறிய முயற்சி செய்கிறேன். ”ஆண்களே இல்லாத உலகம் செல்ல வேண்டும்” என்று பெரும்பாலும் ஒரு ஆணிடம் தான் சொல்லிக் கொண்டிருப்பேன். வாதத்திற்கு என வீண் வாக்குவாதங்கள் செய்யாது, என் மனநிலையை புரிந்து விளக்கமளிக்கும் சில ஆண் தோழர்கள் இருக்கின்றனர் என்பது ஆறுதல் தரும் விஷயமாகத்தானிருக்கிறது.இருந்தும் தோழன் என்ற நிலையைத்தாண்டி ஆண் என்று வரும் போது தோழனும் புரியாமல் போவது சில நேரங்களில் நிகழ்கிறது.


ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாடிக்கொண்டிருக்க விருப்பமில்லை எனக்கு. வாழ்வின் ஒவ்வோர் கட்டத்திலும், பெண்களின் உலகில் ஆண்களின் பங்கு பெருவாரியாக நிச்சயம் இருக்கும். அதை இன்னும் முதிர்ந்த புரிதலோடு அணுகவேண்டும் என்பதற்கான துவக்கமே இது.


நன்றி,

நாணல்


Saturday, 25 December 2010

இந்தப் பொண்ணுங்களே இப்படி தான்

இந்தப் பொண்ணுங்களே இப்படி தான்’

‘பொண்ணுங்களைப் புரிஞ்சுக்கவே முடியலை’

இது போன்ற வசனங்களைக் கேட்டால் ஏனோ, சொன்ன ஆணின் மீது ஒரு நிமிட கோபம் என்னையும் மீறி வரத் தான் செய்கிறது. அதற்காக ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தையும் நான் குறை கூற விரும்பவில்லை. ஒரு உண்மையை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும், ’ஆணோ பெண்ணோ காதலும் காதல் தோல்வியும் ஒன்று தான்.. சில இடங்களில் ஆண், பெண்ணை சில காரணங்களால் பிரிகிறான், பெண் சில நேரங்களில் பிரிய நேர்கிறது.

ஆனால் பெரும்பாலும் ஏனொ பெண்ணை மட்டுமே குற்றம் சாட்டுகின்றனர் :( எனக்கு தெரிந்த காதல் கதைகளில், விட்டொழிந்த ஆண்களும் உள்ளனர், பெண்களும் உள்ளனர். அப்படியிருக்க ஏன் பெண் வர்க்கத்தை மட்டுமே குறை கூறுகிறீர்கள். :(

  • பெண்களுக்கு காதல் தோல்வியைத் தரும் ஆண்களே இல்லையா?
  • ஆண்கள் ஒரு பெண்ணை விழுந்து விழுந்து காதலிப்பாங்களாம், அந்தப் பொண்ணு வேண்டாம்னு சொன்னா, ஏன் அப்படி சொன்னா, உண்மையிலயே அவ மனசுல இவன் மேல அப்படி ஒரு எண்ணம் இருக்கான்னு தெரிஞ்சுக்காம, உடனே ‘மச்சான், அவ என்னை ஏமாத்திட்டான்னு, ஊர் பூறா அவளை வம்பிழுக்க வேண்டியது’.எனக்கு புரியாத ஒன்னு, காதலித்த பெண்ணைப் பற்றி எப்படி பிறரிடம் வம்பு பேச முடிகிறது?
  • தெரியாத பெண்ணிக் காதலிச்சவங்களே இப்படி இருக்கும் போது, நண்பர்களா அறிமுகமாகி, தோழின்ற உறவுல இருந்து காதலின்ற உறவுக்கு எடுத்து செல்ல வேண்டிய கட்டத்துல, அப்படி செய்ய விரும்பாதவர்கள் ஒரு பக்கம். மனதிற்குள் அவள் தோழி மட்டுமில்லைன்னு தெள்ளத்தெளிவா தெரியும் , ஒரு கட்டத்துக்கு மேல அவள் என் தோழி மட்டுமேனு ஏமாத்திக்க முடியாத கட்டம் வரும். அப்ப முன்னெச்சறிக்கையோட ‘உன் கிட்ட அந்த எண்ணத்துல பழகலை’ தோழியா மட்டும் தான் பார்த்தேன். அப்படி இப்படின்னு வெட்டி வசனம் பேச வேண்டியது. உடனே அந்தப் பொண்ணும் ஒன்னும் சொல்லாம, அமைதியா போயிட்டா, அவ தப்பிச்சா, இல்லை எதிர் கேள்வி கேட்டா, அவளை எவ்வளவு தூரம் உதாசினப்படுத்தி அவ பெண்மையை கொடூரமா மாத்த முடியுமோ, அவ்வளவு கொடுமையா மாத்தி ‘அந்த பொண்ணு டார்ச்சர் தாங்ககலைடானு’ நண்பர்கள் மத்தியில அவ மென்மையை கேலிக்கூத்தாக்க வேண்டியது. இது எந்த ஊருல நியாயம்?
  • சரி தப்பித் தவறி ஒரு பொண்ணு தன் காதலை முதல்ல சொல்லிட்டா, அப்புறம் கதையே வேற. முதல்ல ஒரு பொண்ணு நம்மளையும் மதிச்சு காதலிக்கறான்ற மிதப்புல சுத்த வேண்டியது. அப்புறம் அப்புறம் தான் அவனோட குடும்பம்,அவன் பார்க்கிற வேலைனு எல்லாம் நியாபகதுக்கு வரும், அப்புறம் மேல சொன்ன மாதிரி உஷாரா வசனம் பேசிட்டு கழட்டி விட வேண்டியது. தனக்கு பிடிச்சவன் மேல காதலைப் பொழிஞ்சது தான் அந்தப் பொண்ணு செஞ்ச தப்பா?

இப்படி பல கேள்விகள் பல நாளா என் மனசுக்குள்ள பதிலில்லாம இருந்தாலும், என்ன இருந்தாலும் ஆண்கள் என்றுமே எனக்கு புரியாத புதிர் தான். அதனால அவங்க எப்படி வேணா இருக்கடும்.

இந்த ஆண்களே இப்படி தான்’

‘ஆண்ககளைப் புரிஞ்சுக்கவே முடியலை’

போன்ற வசனங்களில் எனக்கு பெரிதாக உடன் பாடுமில்லை.

அதனால் பெண்கள் மீது சுமத்தப் பட்ட குற்றத்திற்கு மட்டும் பதிலளிக்க விரும்புகிறேன். பெண்களும் காதலில் ஏமாற்ற்ப்படுகிறார்கள், ஆனால் அவை ஏன் வெளியில் வருவதில்லை என்பதற்கான பட்டியல் தான் கீழே..

  • ஆண்களால் ஆண்களுக்காக உருவாக்கப் பட்ட சமுதாய சூழலில் பெண் தன் குரலை உயர்த்திக் கூட பேச முடியாத நிலையில். எப்படி தனக்கு நிகழ்ந்த தோல்வியை பலர் முன்னிலையில் ஒப்புக் கொண்டு அதற்கு காரணமான ‘ஆணைக் குறித்து குறை கூற முடியும்?’ இதனால் பல கதைகள் வெளி வராமல் போவது சாத்தியம் தானே?
  • ஒரு பெண் , தன் கணவனிடம் தன் பழைய காதலைச் சொன்னால், எத்தனை ஆண்கள் சரியாக எடுத்துக்கொள்கிறார்கள்.சந்தேகத்தின் பேரில் அவளை அனு அனுவாய் சாகடிக்க வேண்டியது. ’ஈரம்’ படம் இதற்கு ஒரு நல்ல அத்தாட்ச்சி. கணவனின் பழைய வாழ்க்கையை, மனைவி தெரிந்தும் தெரியாது போல் நடந்து கொள்ள வேண்டும் ஆனால் கணவனால் மனைவியின் பழைய வாழ்க்கையை தெரிந்து கொண்டு அவளின் நிகழ் கால வாழ்க்கையை அமைதியாய் நகர்த்த அவனின் கர்வம் இடம் தருவதில்லை. இப்படி தன் கணவனுக்காக பயந்து வேற்று ஆணால் ஏற்பட்ட காதல் தோல்வியை வெளியில் சொல்ல பல பெண்கள் துணிவதேயில்லை.
  • எல்லாவற்றுக்கும் மேல் கற்பு என்ற ஒன்று, பெண்ணுக்கு மட்டும் தான் முக்கியம் என மாதிரியான எண்ணங்கள் மேலோங்கியுள்ள இந்த சமூகத்தில், பெண் காதலித்தாள் என்றால், அதை ஒரு இழுக்காகவே எண்ணு்கிறது. ஏன் அவளின் பெற்றோர் கூட, எப்படியாவது அவசர அவசரமாய், மூடி மறைத்து அவளை வேறு இடத்தில் கட்டிக் கொடுப்பதில் தான் குறியாய் இருப்பர். பெண்ணுக்கு மனமிருக்கிறது என்பது பல இடங்களில் மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. :(
  • தப்பித் தவறி தனது பழையக் காதல் பற்றி அவளின் பெற்றோர் மாப்பிள்ளைக்கு சொன்னால், அன்றைய தினம் ஏதோ தியாகி உணர்வு கொண்டு, அவளுக்கு வாழ்வு கொடுப்பதாய் தனக்குள் பெருமிதங் கொண்டு திருமணம் செய்து கொள்வான். அந்த பெருமித எண்ணம் எத்தனை நாள் அந்த பெண்ணை நிம்மதியாய் வாழ விடும் என்பது நேரத்திற்கு தான் வெளிச்சம்.
  • பொதுவாகவே பெண்களுக்கு பொறுப்பு சிறு வயது முதல் நிச்சயம் அதிகம் தான், ஆண் குழந்தை வளர்ப்பிற்கும் பெண் குழந்தை வளர்ப்பிற்கும் இன்னும் சமுதாயத்தில் வித்தியாசம் இருக்கத் தான் செய்கிறது. குடும்பத்தின் குத்து விளக்காய், குடும்ப மானத்தின் சின்னமாய் அவள் வளர்க்கப்படுகிறாள். அப்படியிருக்கையில், காதலிப்பதே பெருங்குற்றம், காதலில் தோற்று பொறுப்பற்று புலம்பிக்கொண்டு இருக்க முடியுமா… முடியாது… காலத்தின் வேகத்தோடு அவள் தன்னை செதுக்கிக் கொண்டேயாக வேண்டிய கட்டாயம் வேறு..இப்படி எத்தனையோ சோகங்கள் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் நிச்சயம் இருக்கும்..கேட்டுப் பாருங்கள் தெரிய வரும் .
  • பெரும்பாலும் ஆணுக்குப் பல கனவுகள் இருக்கும் , இலட்சியமிருக்கும். பெண்ணுக்கோ திருமணம் என்ற ஒன்றோடு அவளின் பெரும்பாலான கனவுகள் முடுக்கி விடப்படும். திருமணம் மட்டுமே குறிக்கோள் என வளர்க்கப் பட்ட நிலையில், தோற்ற காதல் பற்றி சொல்லி ஏன் தனக்கும் தன் பெற்றோருக்கும் தர்ம சங்கடத்தை தர வேண்டுமென மனதில் பூட்டிக் கொள்ள வேண்டி வரும்.
  • சில பெண்கள் உறுகி உறுகி காதலித்து விடுவார்களா, தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, தன் காதலனுக்கு ஒன்றும் ஆகக் கூடாதென உணர்வுகளின் அடிமைகளாய் மாரியிருப்பர். இன்னிலையில் அவன் ஏமாற்றி விட்டாலும், நான் ஏமாந்ததற்கு அவனென்ன செய்வான் என பரிதாமான பதிலை சொல்லி சமாதானம் செய்து கொள்வர்.
  • ஊடகத்துறையிலும் ஆண்களே ஆட்கொண்டு நிலையில் நிச்சயம் அவர்களின் மனதில் இருப்பது தான் படமாகவோ,நாடகமாகவோ வெளிவரும்.அவர்களால் ஊகித்துவிட முடியா பெண்ணின் மன நிலையை எப்படி சமூகத்தில் கொண்டு வர முடியும்.

இன்னும் என்னென்னவோ காரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம், புரிந்து கொள்ள முயற்சிக்காமல், விவாதம் செய்பவர்களுக்கு பெண்கள் ஏமாற்ற்க்காரர்களாகவே இருந்து விட்டு போகட்டும், அவர்களைப் பற்றி கவலையில்லை எனக்கு. புரிந்து கொள்ள முயற்சிக்கும் சிலராவது, சிலப் பெண்கள் செய்யும் தவறுக்காக ஒட்டு மொத்த பெண்ணினத்தைக் கொச்சைப் படுத்தாதீர்கள் என சொல்லும் நோக்கோடு எழுதப்பட்டதே இந்தப் பதிவு.

நன்றி,

நாணல்