Saturday, 26 February 2011

உன் ஞாப‌கங்களும்!!

புது வருடம்
பிறந்தும்
தன்னையறியாது
வந்து விழும்
பழைய வருடத்தைப்
போன்றே,
பிரிந்த பின்பும்
என்னையறியாது
வந்து விழும்
உன் பெயரின் உச்சரிப்பு
நிலைநாட்டுமே
நம் எஞ்சிய நேசத்தை!!

#$%^&#@

திரையில்
சில நொடிகள்
தங்கி ஓய்வெடுத்து
புகைப்படமாகப்
பதிவான பின்
சரசரவென நகரும்
சாலையின் வாகனங்களைப்
போன்றே
உன் ஞாப‌கங்களும்!!

நன்றி,
நாணல்

Saturday, 19 February 2011

(மூட)ந‌ம்பிக்கை

காலத்தே நிகழக்
கூடுமானவைகளுக்காக‌
காத்திருக்க பொறுமையிறாத‌
இடத்தே தான்
பிறக்கிறது மூட நம்பிக்கை!

தம் நம்பிக்கையால்
நிகழ்ந்த வெற்றியை
பிறரைப் பொறுப்பேற்றுகையில்
மூட நம்பிக்கையாய்
வடிவம் கொள்கிறது
நம்பிக்கை!

நன்றி,
நாணல்

Friday, 18 February 2011

ரகசிய சினேகிதனே…

உன்னுடன்
தொலைபேசுகையில் ம‌ட்டும்
அருகிலிருக்கும் தோழிக‌ளின்
க‌வ‌ன‌த்தை ஈர்க்க‌ முயற்சிக்கிறேன்,
ந‌ம்மைப் ப‌ற்றி
அவ‌ர்க‌ள் பேச‌விற்கும்
கேலிப்பேச்சிற்கு
வித்திடும் வ‌கையாய்!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

விடிந்த‌தும்
அனுப்ப‌ வேண்டிய‌
காலை வ‌ண‌க்க‌
குறுஞ்செய்திக்காக,
இர‌வெல்லாம் க‌ண்விழித்து
யோசிக்கின்றேனே!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

அவ‌சிய‌மில்லா போடாக்க‌ளும்
அவ‌ச‌ர‌மான‌ போடிக்க‌ளும்
நிலைநாட்டுமே
அவ‌ச‌ர‌வ‌சிய‌மான‌
ந‌ம் காத‌லை!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

தீண்ட‌ தீண்ட‌
இசைக்கும் வீணைப் போல்
பேச‌ப் பேச‌
உன‌க்கும் என‌க்கும்
காத‌லுக்குமான‌
புரித‌ல் நீள்கிறதே!

முந்தைய பதிவு - 1, 2


ந‌ன்றி,
நாண‌ல்

Thursday, 17 February 2011

கடவுளின் பரிசு

என் சுயத்திற்கு
இழுக்கு வருமென‌
எனக்கு முன்னமே
சுதாரித்து
என் செய்கைகளைத்
திருத்துமென் தோழி!

–00–00–

ஆண் பெண் வேறுபாடுகள்
கடந்து
ம‌ன‌தின் சாட்சியாய்
பிர‌திப‌லிக்கும்
என் தோழ‌ன்!

–00–00–

எனைத் துர‌த்தி
விளையாட்டின் சூட்சும‌ம்
புரிந்த‌வன்,
இன்று
உன் குழ‌ப்ப‌ங்களைத் துடைத்து
ச‌ரியான‌ முடிவெடுக்க‌
நான் உத‌வுகிறேன்
என‌ சொல்லி
என் த‌ம்முன்னான‌
என் இளைய‌வ‌ன்!

–00–00–

ச‌ராச‌ரிக்கும்
மேலாவ‌ன‌ள் நானென‌ப்
ப‌ர‌ப‌ர‌த்துக் கொண்டிருந்த‌ என‌க்கு
என் ச‌ராச‌ரிக‌ளை
உண‌ர்த்தி
எனை மெருகேற்றும்
என் தோழ‌ன்!

ந‌ன்றி,
நாண‌ல்

Monday, 14 February 2011

காதலித்துக் கொண்டேயிரு!

காதல் பாடல்களை
முனுமுனுத்தப் பள்ளிப் பருவத்தில்
காதலெல்லாம் ஒன்னுமில்லை,
புருஷனுக்கு கொடுக்குற காபியில
சர்க்கரை இல்லைனா
ஒரு சண்டை வரும் பாரு
அது தான் வாழ்க்கை,
மத்தபடி
காதல்னு ஒன்னுமில்லை
என்று சொன்ன தாயின்
பேச்சையும் பொருட்படுத்தியதில்லை !

சோர்ந்த கண்களோடு
எங்கே செல்லும் பாதை
எனப் பாடிக்கொண்டிருந்த
சேதுவைப் பார்த்தவாறே
பசங்க கிட்ட அதிகம்
வெச்சுகாதா,
படிச்சோமா வந்தோமா இருன்னு
தந்தை சொன்ன
மந்திரத்தைக் கேட்டதாக
நினைவில்லை கல்லூரிப் பருவத்திலே!

வாழ்க்கையின் தொடக்கம் தனில்
தமையன் சொன்ன
வாழ்க்கைக் குறிப்பையும்
குறித்ததாகச் சுவடில்லை,
சொந்தக் காலில் நிற்கத்
தொடங்கிய வேலைக் காலத்தில்!

நான் பட்டதெல்லாம்
போதும்
நீயும் காதலித்து
வேதனையில் மூழ்காதே,
அந்த வலி உனக்கு
வேண்டாம்என
பட்டறிந்த தோழி
சொன்ன வாக்கியத்தின்
அர்த்தம் புரிந்ததில்லை
மயங்கியிருந்தகாலத்தில்!

மேற்சொன்னவையாவையும்
எதிர் காலத்தில்
நானும் உரைக்கத் தான் போகின்றேன்,
அதைக் கேட்கத் தான்
யாருமிருக்கப் போவதில்லை.

வலிகள் பல இருந்தும்
இழப்புகள் பல தந்தாலும்
வேதனைகள் பல உற்றாலும்
கசக்கும் மருந்துக்காய்
இனிப்பை ஒதுக்கா
குழந்தையைப் போல்
காதலித்துக் கொண்டேயிரு!


நன்றி,
நாணல்

Sunday, 13 February 2011

மீண்டும் யாரோ ஒருவரால் …

எனக்கான
வரையறைகளும் அர்த்த‌ங்க‌ளும்
நான‌ல்லாத,
என் ப‌ங்குமில்லாத‌
யாரோ ஒருவ‌ரால்
தீட்ட‌ப்ப‌டும் போது,

அதை
கடைநிலை வாச‌கியாய்ப்
ப‌டித்து
முடியும் முடியாதெனப்
பல‌‌ பின்னூட்ட‌மிட்டு,

எழுத‌ப்ப‌ட்ட‌ வ‌ச‌ன‌ங்களைச்
சொற்பிழையோ
அர்த்த‌ப் பிழையோ இல்லாது
பேசிப்,

புல‌ப்படாத‌
ப‌ல‌ உண‌ர்வுக‌ளை
அவ‌ர‌வ‌ர் விதிக‌ளுக்கேற்ப
அவரவர் புரிதலுக்கேற்ப‌
வெளிப்ப‌டுத்தி,

இனியிது போதுமென‌
ச‌ரிந்து சாய்கையில்,
என் சுய‌த்திற்கான
புதிய‌
வ‌ரைய‌றைக‌ளும் அர்த்த‌ங்க‌ளும்
மீண்டும் யாரோ
ஒருவரால் வ‌டிக்க‌ப்ப‌டுகின்ற‌து!

நன்றி உயிரோசை

ந‌ன்றி,
நாண‌ல்

Saturday, 12 February 2011

ஜனித்தது என் காதல்..

அழகான‌
காதலியைக் கொண்டாடும்
அழகியோனைப் போலல்லாமல்
அழகான‌
காதலைக் கொண்டாடும்
உனக்காக
ஜனித்தது
என் காதல்!

சில நாள் கழித்துப்
பயணித்த பாதையிலிருந்த‌
முன்னேற்றங்களைப் போல்
சில நாள்
ஊடலுக்குப் பின்
ஜனித்திருந்தது
அதிகப்படியானக் காதல்!


நன்றி,
நாணல்

Tuesday, 8 February 2011

ஒரு கேள்வியும் மூன்று நிகழ்வுகளும்..

சில காலமாய் எனக்குள் எரிச்சலூட்டி வரும் ஒரு விடயத்தைப் பற்றித் தெளிவான புரிதலுக்காக வேண்டி இந்த பதிவை எழுதுகிறேன். என் கேள்வி மிகவும் சிறியது.

பெண் என்றாலே மோகம் தரும் பொருட்களில் ஒன்று என்ற நினைப்பு எப்பொழுது மாறும்?

ஜனனம் தருவிக்கும் தாய் முதல் , தங்கையாய் , உற்ற தோழியாய் நம் அனைவரின் வாழ்விலும் பெண் ஒரு அங்கமாய்த்தானிருக்கிறாள். இருந்தும் அவளின் மென்மையான பெண்மை கேலிகூத்தாக ஆக்கப்படும் போது, இந்த சமுதாயத்தின் மீது எரிச்சலுடனான கோவம் தான் வருகிறது. பெண்ணியம், பெண் விடுதலை என முற்போக்கு சிந்தனையாளர்கள் ஒரு பக்கம் குரலெழுப்பிக் கொண்டிருந்தாலும் உண்மையில் தினசரி வாழ்வில் இந்த குரல்கள் எதிரொலிக்கப்படவில்லையென்று தான் தோன்றுகிறது. எனக்கோ என் தோழிக்கோ நிகழ்ந்தவை வைத்து இந்த பதிவை நான் எழுதுகிறேனா, என்றால், இல்லை என்பது தான் என் பதிலாக இருக்கும், அப்படியிருப்பின் நிச்சயம் என் மனக்குமுறல்களாக என் நட்பின் வட்டத்திலேயே நின்று போயிருக்கும்.


  1. நம் வாழ்வின் அங்கமாகிப்போன தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிவரும் பல விளம்பரங்களில்,தேவைப்படாத இடங்களில் கூட பெண்கள் இருப்பர். சில நேரங்களில், அது அவர்களின் வியாபர யுக்தி எனக் கொள்ளலாம் . ஆனால், வியாபாரத்திற்காக இப்படி ஒரு அட்டூழியம் தேவையா எனத் தோன்றுகிறது சிலவற்றைப் பார்க்க நேர்கையில். உடலின் வியர்வை நாற்றம் என்பது இயல்பே, இயற்கைக்கு மாறாய், அதை மறைக்க வாசனையூட்டும் திரவியம் அடித்துக் கொள்வது இந்நாளில் வாடிக்கையாகிவிட்டது. இந்த பொதுவான ஒன்றை வைத்துக் கொண்டு, ஆண்களின் வாசனைத் திரவியம் பெண்களைக் கட்டுப்பாடற்றதாக்கும் என்பது போன்ற சித்தரிப்புகள் என்ன சொல்ல வருகின்றன என்று தான் தெரியவில்லை. வெறும் வார்த்தையோடு நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை, அதை நிரூபிக்கும் வகையில் ஆணின் வாசம் நுகர்வதற்கு முன், நுகர்ந்த பின் என அந்தப் பெண்ணைக் காட்டும் கோலம், பெண்களைப் பற்றி அவர்களின் மனதில் உள்ள கேவலமான உணர்வின் உச்சக்கட்டமாகவேப் படுகிறது.

  2. தொலைக்காட்சியில் தான் இப்படி என்று புத்தகமாவாவது படிக்கலாம் என்றால் அது இன்னும் வெருப்பூட்டும் வண்ணமாகவே இருந்தது. கவிதை நூல் என்னும் வகையில் பெரிதாக எதுவும் படித்திடாத நான், இந்த ஆண்டு முதலேனும் படிப்போம் என்னும் ஆர்வத்தோடு வாங்கிய, கவிதைகளின் தொகுப்பு ஒன்றை முன்னுரையிலிருந்து படிக்கத் தொடங்கினேன். பல பிரபலங்களின் வாழ்த்துரைகளைப் படித்துக்கொண்டிருக்கையில், ஆர்வ மிகுதியில் கவிதைகள் பக்கம் திருப்பிப் படிக்கத் தொடங்கினேன். ஆரம்ப பக்கங்களில் அவரின் கற்பனையின் வெளிப்பாடான ஒவ்வொரு கவிதையையும் புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தேன். சில பக்கங்களைக் கடந்த பின், ஆண்களின் கவிதை உலகில் நிச்சயம் அடங்கியிருக்கும் பெண்ணைப் பற்றிய வர்ணிப்புகளும், அவள் சார்ந்த கற்பனைக் கவிதைகளும் இடம் பெற்றுக்கொண்டு இருந்தன. வர்ணனைகளின் உச்சக்கட்டமாக பெண்ணின் உடலமைப்பை பற்றியதாக சில கவிதைகள் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருந்த விஷயம் சலிப்பைத் தர ஆரம்பித்தது. எனினும் முன்னுரையில் பல கவிஞர்கள் பாராட்டியிருந்தார்களே, ஒருவேளை அடுத்த தலைப்பின் கீழெனினும் வித்தியாசங்கள் தெரியுமெனப் புரட்டிக் கொண்டேயிருந்தேன். பெண் என்ற பொதுநிலையைத் தாண்டி தாயைப் பற்றிய கவிதைகளிலும் அதே வாடையடிக்க புத்தகத்தை மூடியவள், இன்னும் திறக்கவில்லை. சிற்றிதழில் வெளியான கவிதைகளைப் புரட்டலாமென்றால், அங்கேயும் காமத்தையும் தாயையும் ஒப்பிட்டாற் போன்ற கவிதை. எனக்கு புரியாத ஒன்று இது தான், புனிதமான உறவுமுறையான தாயைப் பற்றி எப்படி கற்பனையாகக் கூட அனாவசிய வார்த்தைகளை உபயோகிக்க முடிகின்றது.

  3. இப்படி ஒன்றுக்கொன்றாய் கூடிக் கொண்டே போக ரூட், ஃபிகர், கரெக்ட் பண்றது போன்ற வார்த்தைகள் இன்னும் எரிச்சலூட்டுவதாகவே அமைந்துள்ளது. இப்படி பேசுவது சகஜமாகிவிட்டது தான். சகஜங்களையும் தாண்டிப் பார்க்கும் போது, புதிதாய் அறிமுகமாகி சில நாட்களாக மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம், இப்படி ஒரு ஆண் பேசுகிறானென்றால் அவளிடம் அவன் என்ன எதிர்பார்க்கிறான் என்று தான் புரியவில்லை. இயல்பாய் பரஸ்பர புரிதலுக்கு பின் வெளிக்காட்டினால் தானே காதலுக்கு மரியாதை. தூண்டுச் சீட்டாய் ஒவ்வொருவர் கையிலும் கொடுத்து விருப்பமுள்ளவர் வாசியுங்கள் என்று சொல்வதற்கு பெயர் என்ன? தான் சந்திக்கும் ஒவ்வொரு பெண்ணிடமும் வார்த்தை ஜாலங்கள் காட்டுவதனால் என்ன நேரப்போகிறது. ஒரு சில காலக் கட்டத்திற்கு பின் இப்படி பேசும் ஆணின் மீதான மரியாதை குறையத் தானே செய்யும்.


மேற்சொன்னவையாவும் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் இடையேயான மெல்லிய இடைவெளியாகவே படுகிறது எனக்கு. இருக்கும் இரு பாலினற்கிடையில் ஒரு வித ஈர்ப்பு இருப்பது இயல்பு தான். பெண்கள் உலகில் ஆண்கள் யாரென புரிந்து கொள்ள விரும்பும் ஆண்களைப் போன்று தான் ,ஆண்கள் உலகில் பெண்கள் யாரென அறிய முயற்சி செய்கிறேன். ”ஆண்களே இல்லாத உலகம் செல்ல வேண்டும்” என்று பெரும்பாலும் ஒரு ஆணிடம் தான் சொல்லிக் கொண்டிருப்பேன். வாதத்திற்கு என வீண் வாக்குவாதங்கள் செய்யாது, என் மனநிலையை புரிந்து விளக்கமளிக்கும் சில ஆண் தோழர்கள் இருக்கின்றனர் என்பது ஆறுதல் தரும் விஷயமாகத்தானிருக்கிறது.இருந்தும் தோழன் என்ற நிலையைத்தாண்டி ஆண் என்று வரும் போது தோழனும் புரியாமல் போவது சில நேரங்களில் நிகழ்கிறது.


ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாடிக்கொண்டிருக்க விருப்பமில்லை எனக்கு. வாழ்வின் ஒவ்வோர் கட்டத்திலும், பெண்களின் உலகில் ஆண்களின் பங்கு பெருவாரியாக நிச்சயம் இருக்கும். அதை இன்னும் முதிர்ந்த புரிதலோடு அணுகவேண்டும் என்பதற்கான துவக்கமே இது.


நன்றி,

நாணல்