Sunday 5 August 2012

பாதை

ச்சா செத்துப்போகலாம் போல இருக்கு”, சொல்லிக்கொண்டே வீட்டுக் கதவை வெளியே தாளிட்டு வேகமாய் ஓடினேன் மொட்டை மாடிக்கு. உச்சி வெயிலின் தாக்கம், என் மனதின் உச்சத்தை ஈடு செய்ய முடியாது கொஞ்சம் தணிந்தே இருந்தது. யாருமில்லா அந்த வெற்று இடம் கூட பாரமாய்த் தோன்றியது எனக்கு, எவர் கண்ணிலும் படாத ஒரு மூலையில் சென்று அமர்ந்தேன்.. இன்றே மொத்தமாய் அழுது தீர்த்துவிட வேண்டுமென வரம் பெற்றதைப்போல் அழுது தீர்த்துக் கொண்டிருந்தேன். என் கேவல் சத்தம் எனக்கே பயமாய் இருந்தது. யாருக்கும் பாரமாய் இராமல் செத்துவிடலாமென தோன்ற, செய்ய வேண்டியவை ஏதேனும் இருக்கிறதா என என்னை நானே கேட்டுக் கொண்டேன். நல்ல வேளை அப்படி அவசர வேலை எதுவும் மனதிற்கு தோன்றவில்லை. ”நாளை சாவை எதிர்கொள்ளும் மனநோக்கோடு இன்றைய நாளை நீ வாழ்” என்னும் காந்தியின் பொன்மொழிக்கேற்ப வாழ்ந்ததால் தானோ என்னவோ, இந்த நொடியில் செய்ய வேண்டிய வேலை, சாவைத் தவிற வேறேதுவும் இல்லையெனக்கு.

தடுப்புச்சுவரின் அருகே சென்று என் பாதையை மெல்ல எட்டிப்பார்த்தேன். சிரமம் நிறையவே இருக்கும் போல பட்டது. மொட்டை மாடி இருக்கும் பத்தாவது மாடியிலிருந்து கீழே நடப்பவையை கடைசி முறையென நோட்டமிட்டேன். ப்ரார்த்தனை பலித்ததால், ஒவ்வொரு தேங்காயாய் வழிப்பிள்ளையாருக்கு அடித்து கொண்டிருந்தார் தாத்தாவும் பேரனும். ”நன்றி கடவுளே, அவர்களுக்கேனும் நினைத்ததை நடத்தி கொடுத்தாயே”. சிலர் அங்கும் இங்கும் அலைந்தவண்ணம் இருந்தனர், என்ன அவசர வேலையோ அவர்கட்கு, இன்னும் சற்று நேரத்தில், என் பிணத்தை வேடிக்கை பார்க்க வேண்டுமென தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தனர்.

பல தடவை இந்த தடுப்புசுவரின் மீது, மிச்சமிருக்கும் சாதத்தை வைத்து காக்காவை அழைத்திருக்கேன், அப்போதெல்லாம் தாமதமாக வரும் காக்கா, இன்று நான் அழைக்காமலே வந்து என் அருகில் வந்து கரைந்து கொண்டிருந்தது. இரண்டு மூன்று காக்காக்கள் உடனே எங்கிருந்தோ பறந்து வர, எங்கே தலையில் கொட்டி விடுமோவென பயந்து விலகினேன்.

என்னம்மா, இங்க என்னப் பண்ற?” புன்னகையோடு விசாரித்தார் பக்கத்து வீட்டில் வசிப்பவர்.

ஒண்ணுமில்லை அங்கிள், சும்மா காக்காக்கு சாப்பாடு வைக்க வந்தேன்” என்று பொய்யாய் புன்னகைத்தேன்.

நல்லப் பொண்ணு மா, நீ.. சீக்கிரம் வீட்டுக்குப் போ, வெயில்ல நிக்காதே” என்று அவர் பங்கிற்கு அறிவுரை சொல்லிச்சென்றார்.

பித்துப்பிடித்தாற் போல் வெற்று மாடியை வலம் வந்தேன். எங்கேனும் ஒளிந்துகொள்ள எண்ணி, மீண்டுமொரு மூலையில் அமர்ந்து அழுது தீர்த்தேன். சற்று முன் வந்த காக்கைகளையும் காணவில்லை. அவற்றில் ஏதோ ஒன்று என் மூதாதையர் போல, என்னை அழைத்துச்செல்ல வந்தாரோ இல்லை என்னை உயிர்ப்பிக்க வந்தாரோ தெரியாது.

மெல்ல தடுப்புச் சுவரின் அருகில் சென்று நின்றதும், காற்றும் பலமாய் வீசிக்கொண்டே இருந்தது. விட்டுச்சென்ற காக்கைகளும் என் தலையை வட்டமிட்டுக்கொண்டே இருந்தன. யாரேனும் என்னை கவனிக்கிறாரா எனப் பார்த்து, இன்னும் என்னை கவனிக்க இவ்வுலகில் ஆள் மிச்சம் இருக்குமா என ஏங்கும் என் அறியாமையை எண்ணி சிரித்துக் கொண்டே குதித்தேன். முதலில் பட்டது 9 வது மாடி வீட்டு ஜன்னல் மேலிருக்கும் கூரை, அங்கே பட்டு, தெரித்து எங்கள் குடியிருப்பின் ட்ரான்ச்ஃபார்மர் மீது விழுந்தேன், அதற்கும் என்னைப் பிடிக்கவில்லைப் போல, உடனே தூக்கி எறிந்தது. சாலையில் சென்று விழுந்தேன். அந்த நொடி உலகம் ஸ்தம்பித்தது போன்ற ஒரு உணர்வு, சுற்றி ஒரே கூட்டம். முன் சொன்ன அவசர மக்கள் என்னைப் பார்ப்பதை மட்டுமே தலையாய கடமையாய் கொண்டிருந்தனர் இப்பொழுது.

உலகம் மிகச்சிறியது என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும், ஒரு மணிநேரத்தில், என் நண்பர்களும் உறவுகளும் என்னருகில்.

ச்சா நேத்துக்கூட பேசினேனே, ஒரு டாக்டர் நம்பர் வேணும்னு கேட்டா, எஸ்.எம்.எஸ்ல அனுப்பி விட்டு அப்புறம் பேசுறேனு சொன்னேன், அதுக்குள்ள இப்படி பண்ணிட்டாளே இவ”, எனத்தனக்குள் அழும் நண்பனொருவன்.

யாரோ கூட வேலை பாக்குற பையனை விரும்புறேனு போன வாரம் சொன்னாலே, சரி நல்ல விஷயம் சீக்கிறம் சொல்லி சட்டுபுட்டுனு கல்யாணம் பண்ணிக்கோனு சொன்னேனே, இப்ப ஏன் இப்படி அவசரப் பட்டுட்டா தெரியலேயே”, என கதறும் தோழி ஒருத்தி.

தனக்குத் தான் மனைவியாக ஆசைப்பட்டாள் இவளென தெரியாது, நேற்று அலுவலகத்தில் அடித்த அரட்டைகளை நினைவுகூர்ந்து அழுது கிடந்த்தான், நண்பனாய்த் தென்பட்ட காதலன். அவரவர் அவரவர் அறிவுக்கெட்டிய விஷயங்களை வைத்து, என தற்கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து கொண்டிருந்தனர். தன் மகள் சென்னையில் சந்தோஷமாய் இருக்கிறாள் என நிம்மதியாய் இருந்த, என் தாய் தந்தை, என்னை என் பிணத்தை பார்க்கப் பதறி அடித்து ஓடி வந்துகொண்டிருப்பதாக சிலர் பேசிக்கொண்டனர்.

தோற்றுப் போன தைரியமான கோழையான, என் இந்த கதாபாத்திரத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என மூளையை கசக்கிக் கொண்டிருந்தேன் . ”கவிதா”, ஹ்ம்ம்ம் இல்லையே, மிகவும் மென்மையான பெயர், சரி வராது… “ராதா”, ”கீதா”, “ஜானகி”, ஹ்ம்ம்ம் எதுவும் சரியாக படவில்லை. சட்டென நினைவுக்கு வந்தது “ப்ரபா”… ஆம், சரி “ப்ரபா” சரியான பெயர். யோசித்த களைப்பில் தூங்கிவிட்டேன் போல, விழிக்கையில் அம்மாவும் அப்பாவும் என் அருகில், “ஆபீஸ்ல ஏதோ ப்ரச்சனை போல ஆண்டி, என்ன கேட்டாலும் சொல்ல மாட்டென்கிறா, அதான் பயமா இருந்துச்சு, உங்களை வரச் சொன்னோம்”, அக்கறையுடன் சொல்லிக்கொண்டிருந்தாள் தோழி, என் இந்தக் கற்பனைக் கதையை தலையணை அடியில் மறைத்து என் அன்னையின் மடியில் அடைக்கலமானேன்.

நன்றி,
நாணல்

No comments: