Sunday, 24 October 2010

குட்டி கார்த்தி...

“ஆயா… 1 ரூபாய்க்கு நெல்லிக்காய் கொடுங்க…”


“இந்தா..” என்று கொடுத்துவிட்டு , ஆயா என்று இன்னொரு குரல் வந்தப் பக்கம் திரும்பித் தன் வியாபாரத்தை படு மும்முரமாக கவனித்துக் கொண்டிருந்தாள், ஒரு பள்ளியின் வாசலில் கடை போட்டிருந்த ஆயா..


இந்த பள்ளியின் வயதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஓய்வூதியம் வாங்கிக்கொண்டு ”நான், அந்த காலத்தின் தலை சிறந்த பள்ளியான ’St Joseph’ பில் SSLC முடித்தவனாக்கும்” என்று மார் தட்டிக் கொள்ளும் தாத்தாக்களைக் கேட்டால் தெரியும்… போக்குவரத்து நெரிசல் கொண்ட சென்னையின் பிரதான சாலையில் , பழமையின் நினைவுச்சின்னமாக நிற்கிறது இந்த பள்ளிக்கூடம்… மண்ணில் விழுந்து எழுந்து விளையாடும் குழந்தைகளைப் போல் ஆங்காங்கே சரிந்து கிடக்கும் கட்டிடங்கள்.. “இயற்கையோடு ஒட்டி வாழ எங்களுக்கு ஆசை” என்று , மைதானத்தில் இருக்கும் மரங்களின் அடியில் நடக்கும் வகுப்பறைகள் என பள்ளியின் நிலை அங்கிருக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்…


போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்த ஒரு காரின் உள்ளேயிருந்து இந்த பள்ளியைக் கவனித்த வண்ணமிருந்தார் சுந்தர்… கோயம்பத்தூரிலிருந்து மாற்றலாகி சென்னைக்குப் புதிதாய் வந்திருக்கும் சுந்தருக்கு, தான் பயின்ற பெருமை மிகு பள்ளிக்கூடத்தின் இந்த நிலை, கண்களின் ஓரம் கண்ணீரை எட்டிப் பார்க்கச்செய்தது.. 20 வருடங்களுக்கு முன்னால் செல்கிறது சுந்தரின் பயணம்…


“டே கார்த்தி எங்கெல்லாம் உன்னை தேடரது… “


“சொல்லு டா, சுந்தர் ..எதுக்கு டா என்னை தேடுரே?”


“ஏன் நீ க்ளாசுக்கு வரதே இல்லை? நம்ம கணக்கு வாத்தியார் உன்னைத் திட்டிக்கிட்டே இருந்தார் தெரியுமா?”


“விடு டா , அவருக்கு என் மேல பாசம் அதிகம், அதான் திட்டிக்கிட்டே இருக்கார்.. “


“டே, ஏன் டா இப்படி இருக்கே? உனக்கு கணக்கு வரலைனா நான் சொல்லித் தரேன் அதுக்காக ஏன் க்ளாஸ் பக்கமே வராம இருக்கே.. “


“போடா உன் வேலையைப் பார்த்துக்கிட்டு நான் விளையாடப் போறேன்.. “


சுந்தரும் கார்த்தியும் ஒரே தெருவில் வசிப்பவர்கள்.. கார்த்தி , விளையாட்டுப் பிள்ளை, படிப்பதைத் தவிற என்ன சொன்னாலும் செய்வான்… சுந்தரோ புத்தகப் புழு… படிப்பைத் தவிற ஒன்றும் தெரியாது … வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கக் கூடியவன்… இவனை உதாரணம் காட்டியே கார்த்திக்கு தினம் பூஜை நடக்கும்.. முதல் மதிப்பெண் எடுக்கவில்லை எனினும் சுமாராக படிக்கும் திறன் கொண்டவன் கார்த்தி… இருந்தும் தனது விளையாட்டு குணத்தால், அனைவரிடத்தும் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டு வகுப்பின் கடைநிலை மாணவனாக இருந்தான்… ஒவ்வொரு முறை வகுப்பாசிரியரும், பெற்றோரும் திட்டும் போது தன்னால் படிக்க முடியும், தானும் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியும் என்ற நம்பிக்கை இழந்து கொண்டே வந்தான்…


சுந்தரின் பெற்றோருக்கு கோயம்பத்தூருக்கு பணி மாற்றம் கிடைத்ததால் ஆறாம் வகுப்பிலிருந்து அங்கேயே படிக்கவேண்டியதாயிற்று. படித்து முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தபின், பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். ஒரு அழகியப் பெண் குழந்தை பிறந்தது, கார்த்திகா என்று நாமகரணம் செய்து வைத்து , கார்த்தி என அவளை ஆசையாக கூப்பிடும் போதெல்லாம், தனது நண்பன் கார்த்தியின் நினைவுதான் வரும் சுந்தருக்கு.. பணி மாற்றலாகி கடந்த மாதம் தான் சென்னையில் குடியேறினான்….


இன்று தான் , இந்த பள்ளியின் பக்கம் வர வாய்ப்பு கிடைத்தது.. கார்த்தி என்ன ஆனானோ தெரியவில்லை என்று யோசித்த வண்ணம் பள்ளியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்..பள்ளியின் மைதானத்தில், மாணவர்களின் மத்தியில் இருந்த ஆசிரியரைப் பார்க்க ஏனோ கார்த்தியின் நினைவு வர, அருகில் சென்று பார்த்தான்…


பார்த்த கணம் அது கார்த்தி தான் என உறுதி செய்த பின்,


“கார்த்தி…..”


“நீ ங் க …. நீ நீ சுந்தர் தானே”


“ஆமா கார்த்தி, எப்படி இருக்கே? பார்த்து எவ்வளவு நாளாச்சு…” என்று தழுவிக் கொண்டனர்…


“நல்லா இருக்கேன் சுந்தர்…. நீ எப்படி இருக்கே… எப்ப வந்தே கோயம்புத்தூரிலிருந்து…”

“நல்லா இருக்கேன் டா…அது சரி, நீ என்ன பண்றே இங்கே…. “


“நான் இங்க தான் P.E.T வாத்தியாரா இருக்கேன்…”


”ஓ நல்லது டா… ”


”அது சரி நீ எங்க இங்க? ”


”சென்னைக்கு வேலை விஷயமா வந்தேன், பக்கத்துல தான் வீடு வாயேன் போகலாம்.. “


“ஓ போலாமே, அதுக்கு என்ன…. இன்னும் பத்து நிமிஷத்துல கிளம்பலாம்..“


பத்து நிமிட காத்திருப்பிற்கு பின் பழைய கதைகளைப் பேசியே பள்ளி நண்பர்கள் இருவரும் சுந்தரின் வீட்டை நோக்கிச் சென்றனர்..


“சரி, உன் வாழ்க்கை எப்படிப் போகுது… சந்தோஷமா இருக்கு டா… உன்னை இப்படி ஒரு நல்ல நிலைமைல பார்க்க…”


“நல்லாவே போயிட்டிருக்கு…எப்படியோ எனக்கு பிடிச்ச விளையாட்டுத் துறையில மேற்படிப்பு படிச்சு இங்கயே வேலையிலயும் சேர்ந்துட்டேன்…”


இப்படி பழங்கதைகள் பேசிக்கொண்டே வீடு சென்றனர்…


”அ ப் பா…என்று செல்லமாய்க் கட்டியணைத்தாள் கார்த்தி… யாருப்பா இவர்”


“இவர் தான் மா, என் நண்பன் கார்த்தி”


“கார்த்தி, இவ தான் என் குட்டி கார்த்தி..” ”மாமாவை உள்ள கூட்டிட்டு போமா” என்று சொல்லி தன் அறைக்குள் சென்றார் சுந்தர்.


கையைப் பற்றி கார்த்தியை உள்ளே அழைத்து அமர வைத்தாள் ஆறு வயதான குட்டி கார்த்தி…


“எப்படி மா படிக்கறே.. சுந்தரோட குழந்தைக்கு சொல்லியாத் தரனும்.. நீயும் ச்கூல் ஃபர்ஸ்ட் அஹ் தான் இருப்பே..” என்று சொல்லிய வண்ணம் கார்த்தியை செல்லமாய் அள்ளிக் கொண்டார் கார்த்தி…


உடனே குட்டி கார்த்தி, “மார்க் ல என்ன இருக்கு கார்த்தி மாமா, எங்க அப்பா எப்பவும் சொல்லிட்டு இருப்பார், அவர் ஃப்ர்ஸ்ட் மார்க் எடுத்தாலும் உங்களுக்குள்ள இருந்த பல திறமைகள் அவருக்கு இல்லைன்னு..அதனால மார்க் மட்டும் போதாதுன்னு சொல்லிட்டு இருப்பார்”


“ஓ அப்படியா குட்டி…” அவளின் முதிர்ந்த பேச்சை ரசித்தபடியே, ”மேல சொல்லு, இன்னும் என்ன சொன்னார்”


“அதனால வெறும் மார்க் அஹ் வெச்சு யாரையும் எட போடக் கூடாதுன்னு சொல்லுவார்… ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வோர் திறமை இருக்கும், அதை மதிக்க தெரிஞ்சிருக்கனும்.. நான் சொல்றது சரி தான கார்த்தி மாமா… ” என்று வினா எழுப்பி பதிலுக்காக காத்திறாமல் விளையாட சென்று விட்டாள் கார்த்தி..


சுந்தரின் வளர்ப்பு சரி தானெனினும் அதைப் புரிந்து கொண்ட குட்டி கார்த்தியை பெருமிதத்தோடுப் பார்த்த வண்ணமிருந்தார் கார்த்தி…


***முற்றும்***

நன்றி உயிரோசை

நன்றி,

நாணல்

3 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

யெஸ் வெறும் படிப்பு மட்டுமில்ல அதோட விளையாட்டு மற்றும் இன்ன பிற திறமைகளையும் சிறுவயதிலேயே வளர்த்துக்கொள்ள வேண்டும் அதுதான் முழுத்திறமை!

சின்ன விஷயத்தை சுவாரஷ்யமா நல்லா சொல்லியிருக்கீங்க!

நாணல் said...

நன்றி வசந்த் :)

அமைதிச்சாரல் said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_05.html