Sunday 20 March 2011

வாசுகி மகன்

"அவனுக்கு அம்மா ஆகுற வயசு உனக்கு இல்லை, உனக்கு பிள்ளையாகுற வயசும் அவனுக்கு இல்லை"

திரையில் படத்தின் இறுதிக் காட்சி ஓடிக்கொண்டிருக்க, தன் அருகில் அமர்ந்திருக்கும் தன் செல்ல மனைவியின் கைகளை ஆறுதலாக பற்றினான் 'வாசு' என்கிற வசந்த் குமார். அவனின் பற்றுதலின் அர்த்தம் புரிந்து, கொஞ்சம் தெளிவானவளாய்த் தென்பட்டாள் வாசுகி.

கண்களை மெல்ல மூட, இரண்டு மணி நேரத்திற்கு முன் (அதாவது 'செல்லமே' படம் ஆரம்பித்த நேரம்) செல்கிறது அவளின் நினைவு. வசந்த், மனித வளத் துறையைன் மேலாளர் என்பதாலும், மனிதர்களைப் படிப்பது அவனின் பொழுது போக்கு என்பதாலும் மிக எளிதில் அனைவரையும் புரிந்து கொள்வான். இதையே வாசுகியிடமும் வெளிக்காட்டியமையால், அவளின் நண்பனாய், கணவனாய் , உயிராய் உருகொண்டான் திருமணமான 4 மாதங்களிலேயே. தன் ஆசைக் கணவணோடு படம் பார்க்க அமர்ந்திருந்தவள் சோர்ந்து காணப்பட்டாள். எப்பொழுதும் பட படவென பேசிக் கொண்டிருக்கும் வாசுகி ஒரு வாரமாகவே அமைதியாய், எதையோ யோசித்த வண்ணம் இருப்பதை வசந்த் கவனித்துக் கொண்டேயிருந்தான். எல்லாவற்றையும் தன்னிடம் பகிர்ந்து கொள்ளும் வாசுகி, ஏதோ ஒரு விஷயத்தை மட்டும் தன்னிடம் பகிரத் தயங்குகிறாள் என்பதைப் புரிந்து அவளாகச் சொல்லும் வரை கேட்கக் கூடாது என அமைதியாய் இருந்தான் வசந்த்.

என்னங்க...”

ஹ்ம்ம் சொல்லு மா, என்னாச்சு....”

ஒரு வாரமாவே என் மனசு சரியில்லைங்க..”

நானும் கவனிச்சிட்டு தான் வரேன் வாசுகி.. கேட்டு உன்னை சங்கடப்படுத்த வேண்டாமேன்னு தான் அமைதியா இருந்தேன்... போன வாரம் நாம ஷாப்பிங் போயிருந்தப்ப உன் ஃப்ரெண்டு வாசுதேவனைப் பார்த்தோமே.. அப்போலையிருந்தே உன் முகம் ஒரு மாதிரி தான் இருக்கு.. உங்களுக்குள்ள எதாவது ப்ரச்சனையா? எதுவா இருந்தாலும் சொல்லு, பேசி ஸால்வ் பண்ணிடலாம்...”

எப்படி வாசுதேவனைப் பற்றி ஆரம்பிப்பது என குழம்பிக் கொண்டிருந்தவளுக்கு, கணவனே இப்படி நேராக விஷயத்தை ஆரம்பித்தது ஆறுதல் தந்தது. எதையும் வெளிப்படையாய் பேசும் இந்த ஒரு குணத்திற்காகவே வசந்த் போன்ற ஒருவன் தனக்கு கணவனாய்க் கிடைத்தது, தான் செய்த புண்ணியமென கடவுளுக்கு அவ்வப்பொழுது நன்றி சொல்லிக் கொண்டிருப்பாள்.

ஆமாங்க... அவனைப் பத்தி தான் யோசிச்சிட்டே இருந்தேன்.. அவனைப் பத்தி உங்க கிட்ட நான் அதிகம் சொன்னதில்லைனு நினைக்கறேன்..”

ஆமா, உன்னோட ஜூனியர், நீ இருந்த அபார்ட்மெண்ட்ல குடியிருந்தான்னு சொல்லியிருக்கே, ஒரே டீம்ங்கறதுனால, ஆபீஸ்க்கு ஒண்ணா போயிட்டு வருவீங்கன்னு சொல்லியிருக்கே... இப்ப அவனுக்கு ஏதாச்சு ப்ரச்சனையா.. ”

இல்லைங்க, உடனே ஸால்வ் ஆகுற ப்ரச்சனை இல்லை இது..உங்களுக்கு கேக்குற பொறுமை இருந்தா அவனைப் பத்தி சொல்றேன் கேளுங்க, அப்புறம் உங்களுக்கே புரியும்...”

ஹ்ம்ம் சொல்லு..”

இங்க சென்னைக்கு வந்த புதுசுல, டீம் அவுட்டிங்க்காக E.C.R ஒரு beach resort போயிருந்தோம். அப்ப திரும்பி வரப்ப தான் முதமுதல் வாசுகிட்ட பேசினேன்..”

தன்னை வாசு எனக்கூப்பிடும் படி பல முறை சொல்லியும், வசந்த் என்றே அழைத்த வாசுகி, வாசுதேவனைவாசுஎன அறிமுகம் செய்வது புதிராக இருந்தது வசந்த்திற்கு... நிச்சயம் சிக்கலான ப்ரச்சனையாகத் தானிருக்குமென, தனது மன நிலையைத் தயார் செய்து கொண்டிருந்தான்..இந்த பெயர் குழப்பத்தைக் கண்டுகொள்ளாதவனாய் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தான்.

சரி...”

"பேச ஆரம்பிச்ச முத நாளே அவனோட அடி மனசுல ஏதோ கஷ்டம் இருக்குற மாதிரியும், பேச்சுக்கும் அவனோட மனசுக்கும் இடைவெளி இருக்குற மாதிரியும் எனக்கு தோணுச்சு, சரி முதல்லயே கேக்க வேண்டாமேன்னு அவனை அவன் போக்குல விட்டேன்.. அப்படி விட்டதுல சில விஷயங்கள கவனிச்சும் அவன் சொல்லியும் தெரிஞ்சுக்கிட்டேன்.."

"என்னது?"

"அவனோட அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போறவங்கன்றதுனால, சின்ன வயசுல இருந்தே ஹாஸ்டல்ல தான் வளர்ந்திருக்கான். பொதுவா ஹாஸ்டல்ல வளருற எல்லாப் பசங்க மாதிரி, இவனும் இவனோட அப்பா அம்மாவோட அன்புக்கு ஏங்கிகிட்டே இருந்திருக்கான்.."

"சரி, இது பொதுவா வேலைக்கு போகிற அப்பா அம்மாவோட பசங்களுக்கும் இருக்கிற ப்ரச்சனை தானே"

”ஆமாங்க, இது பொதுவான ப்ரச்சனை தான்..ஆனா அதை பசங்க எப்படி எடுத்துக்கிறாங்கன்றது தானே அடுத்த கட்டப் ப்ரச்சனை.."

"அதுவும் சரி தான்..."

"இப்படி தனியாவே வளர்ந்து, தனியாவே வாழப் பழகிட்டதுனால, யார் மேலயும் ஒரு பிடிப்பு அவனுக்கு இருந்தது இல்லை. வேலைக்கு போக ஆரம்பிச்ச உடனேயும் வீட்டுல இருந்து கூட வந்திருக்கலாம், ஆனா இப்பவும் தனியாத் தான் தங்கியிருக்கான்.. டீம்லயும் பார்த்தீங்கன்னா, அவனுக்கு நல்ல பேர், எல்லார் கிட்டயும் நல்லாப் பேசுவான்.. ஆனா யார் கிட்டயும் அதிகமா emotional attachment வெச்சுக்க மாட்டான்.. அவனுக்குன்னு ஒரு வட்டம் போட்டுக்கிட்டு யாரையும் அவன் வட்டத்துக்குள்ள விடாம படு ஜாக்கிரதையாப் பார்த்துப்பான்"

"உன் கிட்ட கூடவா?"

”ஆரம்பத்துல அப்படி தான் இருந்தான், மெல்ல அவனுக்கு என் மேல நம்பிக்கை வந்துச்சா, இல்லை நான் தொடர்ந்து அவனைத் தொந்தரவு செஞ்சு , என் கிட்ட அதிகம் பேச வெச்சேனான்னு தெர்ல.. கொஞ்ச நாள்ல என் கிட்ட நல்லாப் பேச அரம்பிச்சுட்டான்.. அவன் கடந்த காலத்தைப் பத்தி அதிகம் சொல்லைனாலும், நிகழ் காலத்துல நடக்குற ஒவ்வொரு சின்ன விஷயமா இருந்தாலும் என் கிட்ட பகிர்ந்துக்குவான். எனக்கு ஜூனியர்ங்கற முறையில வர்க் பத்தி நிறைய பேசுவோம்..”

”அப்புறம் என்ன?”

”இப்படி என் கிட்ட மட்டும் இருந்துட்டு, மத்தவங்க கிட்ட ஏன் தள்ளியே இருக்கான்னு எனக்கு வேடிக்கையா இருந்துச்சு, அவன் வேணும்னே தன்னைத் தனிமைப் படுத்திக்கிட்டு எல்லார் கிட்டையும் sympathy create பண்றானு தோணுச்சு.. பல தடவை இப்படி இருக்காதேன்னு சொல்லிப் பார்த்து வெறுத்து விட்டுடேன்..இன்னும் கொஞ்சம் அதிகமா analyze பண்ணிப் பாக்கும் போது தான், அவன் ப்ரச்சனை என்னனே புரிஞ்சுது.."

"என்னது?"

"ஆரம்பத்துல இருந்தே உறவுகள் அவனுக்கு சரியா அமையாததுனால, இப்ப யாரு அவனை கொஞ்ச நெருங்கி வர மாதிரி தெரிஞ்சாலும், எங்க விட்டுட்டு போயிடுவாங்களோங்கிற பயத்துல, யாரையும் நெருங்க விடறதுல... இது கூட பரவாயில்லைங்க.. சில நேரம் தான் பேசினதையே முன்னுக்கு பின்னா பேசுவான்..."

"முன்னுக்கு பின்னா ... புரியலை..."

"ஹ்ம்ம் உதாரணத்துக்கு சொல்றேன் கேளுங்க.. என் கிட்ட பேசும் போது, பிள்ளையார்னா பிடிக்கும்னு சொன்னான்..ஆனா...மறுநாள் ஆபீஸ்ல எல்லாரும்பேசிட்டு இருக்கும் போது தான் ஒரு நாத்திகவாதின்னு வாதம் பண்ணிட்டு இருந்தான்... ஒரு தடவைன்னா சரின்னு விடலாம், இப்படி பல முறை பல விஷயங்களை மாத்தி மாத்திப் பேசுவான்"

"... ஏன் அப்படி? அதுக்கும் ஒரு பதில் வெச்சுருப்பியே நீ... என்ன சொல்லுது உன்analysis report?"

"அதுக்கும் அவன் தனிமை தாங்க காரணம்...தான் தனிமப் படுத்தப்பட்டவன், தன்னை யாரும் கவனிக்கறது இல்லை அப்படின்னு அவனுக்குள்ள எப்பவுமே ஒரு எண்ணம் இருக்கும். அதனால சமயம் கிடைக்கும் போது, தனக்குனு ஒரு அங்கீகாரம் வேணும்னுஇப்படி கூட்டத்துக்கு ஏத்த மாதிரி தன்னோட கருத்தை மாத்திகிட்டு எங்க போனாலும்தன்னோட பேச்சும் தன்னோட கருத்தும் தான் ஜெயிக்கனும்னு எல்லார் கிட்டையும்வீண் விவாதம் பண்ணிட்டு இருப்பான்..."

"சரி, இதுக்கும் உன் குழப்பத்துக்கும் என்ன சம்பந்தம்..."

"அட ஆமால, அதை சொல்லாம, என்னென்னவோ சொல்லிட்டு இருக்கேன் பாருங்க... அப்படி தனிமைல யாரையும் கிட்ட சேர்த்துக்காம இருந்தவன், என் கிட்ட மட்டும்கொஞ்சம் அதிகமாவே உரிமை எடுத்துகிட்டான்.. இதுக்கு எங்க ரெண்டு பேரோட பேர்ஒற்றுமையும் ஒரு காரணமா இருக்கலாம்... அவனை வாசுன்னு கூப்பிடதுனால தான்உங்களை "வாசுன்னு" கூப்பிட முடியாதுன்னு நான் சொன்னேன்... வாசுன்னாலேஅவன் ஞாபகம் தான் வருது எனக்கு.."

தன் கேள்விக்கு பதில் கிடைத்த திருப்தியோடு, புன்னகைத்துக் கொண்டே "சரி விடு, பேர்ல என்ன இருக்கு..."

"ஹ்ம்ம்ம், பேர் ஒற்றுமையோட, ஒரே இடங்கிறதுனால, ஆபீஸ்ல லேட்டாச்சுன்னா, அவன் தான் கூட இருந்து கூட்டிட்டு வருவான்..நம்மளை விட சின்னவங்க நம்மளை பாத்துக்கும் போது, நம்ம மேல அக்கறை காட்டும் போது, ரொம்ப நல்லா இருக்கும். அதே மாதிரி தான் இவன் என் மேல எடுத்துகிட்ட உரிமையை ரசிச்சிட்டு இருந்தேன். அதே மாதிரி நம்மளை விட சின்னவங்களா இருக்கறவங்களுக்கு அக்கறை காட்டுறதும் தனி அலாதி தான். உரிமையோட என்னைத் திட்டிகிட்டேஇருப்பான்...’சீக்கிறம் வேலையை முடிக்க வேண்டியது தானேடி.’ அப்படி இப்படின்னு... "

"ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்"

"இப்படி போயிட்டே இருக்கும் போது தான், நீங்க என்னைப் பார்க்க வந்தீங்க... அப்பஅவன் ஊர்ல இல்லாததுனால அவன் வந்ததும் சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன், அதுக்குள்ள என் டீம்ல யாரோ பேசும் போது பேச்சுவாக்குல எனக்கு கல்யாணம்நிச்சயம் ஆனதை சொல்லியிருப்பாங்க போல... "

"ஹ்ம்ம்ம்"

"வந்ததும் வராததுமா..ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுட்டு, என் கிட்ட பேசறதைநிறுத்திட்டான்.."

"அப்படி என்னக் கேட்டான்?"

"'நீ கூட என்னை விட்டுட்டுப் போற இல்லை, போடி போ...' அப்படின்னு கண் கலங்கசொல்லிட்டு போனது தான் என் கண் முன்னாடி நிக்குதுங்க...அந்த கோவத்துல நம்மகல்யாணதுக்கு கூட வரலை அவன்.. அதுக்கப்புறம் போன வாரம் தான் பார்த்தேன்.. "

" ஹ்ம்ம்ம்"

"நான் கூப்பிட்டும் அவன் பேசாம போனது, கஷ்டமாயிருந்துச்சு, அதனால அவன்ரூம்க்கு போன் போட்டா, அவன் ரூம் மேட் தான் பேசினான்... அவன் முன்ன மாதிரிஇருக்கறது இல்லையான், நான் கூட இருந்தப்போ சண்டைப் போட்டு சிகரெட் பிடிக்கறபழக்கத்தை விட வெச்சேன்.. இப்ப சிகரெட்டோட தண்ணியும் அடிக்கஆரம்பிச்சுட்டானா... தினம் குடிக்கிறான் போல, சரியா சாப்பிடறதும் இல்லையான்.. யார் கிட்டயும் பேசறது இல்லையான்... நானும் கல்யாணத்துக்கு அப்புறம் ஆபீஸ்போகாததுனால, அவன் இப்படி மாறினது எனக்கு தெரியாமப் போச்சு.. நானும் அவன்நம்பிக்கையை கெடுக்குற மாதிரி நடந்துகிட்டேனோன்னு உறுத்துதுங்க...அவன்சரியான வழியில போயிட்ருப்பானு தான் நான் இருந்தேன், இப்படி இருக்குறது எனக்குபயமா இருக்குங்க.. என்ன ஆவானோன்னு... அதான என்ன பண்றதுன்னு தெரியாமகுழம்பிகிட்டு இருக்கேன்..என் கிட்ட அவன் பேசாம இருக்குறது கூட எனக்கு பெருசா படலை, ஆனா எங்க இருந்தாலும் ஒழுக்கமா நல்லா இருந்தா சரி..."

"ஹே, இதுக்கு நீ என்ன பண்ண முடியும்... விடு டா...சின்னக் குழந்தை மாதிரி... அவனவன் வாழ்க்கையை அவனவன் தான் வாழனும், நீயோ நானோ வாழ வைக்கமுடியாது சரியா...உன்னோட மத்த ஃப்ரெண்ட்ஸ் உன் கிட்ட பேசற மாதிரி, அவனும்உன் கிட்ட பேசினா நான் வேண்டாம்னா சொல்லப் போறேன்.. அவனா ஒருமுடிவெடுத்துட்டு தள்ளியிருந்தா நாம என்னப் பண்ண முடியும்...இதுக்கெல்லாம் ஃபீல்பண்ணாத சரியா... போம்மா, போய் வேலையைப் பாரு"

"அவனுக்கு அம்மா ஆகுற வயசு உனக்கு இல்லை, உனக்கு பையனாகுற வயசும்அவனுக்கு இல்லை"

என திரையில் ஒலிக்க.. நான் சொல்றது சரியா என்கிற தோணியோடு அவளின் கைகளைப் பற்றி எழுந்து சென்று விட்டான்...

வாசு பற்றிய குழப்பங்களைச் சொன்னால், எங்கே தன்னைத் தப்பாக எடுத்துக்கொள்வானோ என பயந்த வாசுகிக்கு, வசந்த்தின் இந்த செய்கை, மனதின் பாரத்தை குறைத்து விட்டதைப் போல் இருந்தது.. நட்பு , காதல் என சுருக்கிவிட்ட ஒத்த வயதுடைய ஆண் பெண் உறவுகளைத் தாண்டி, தாய்மை என்னும் ஒரு உணர்வைப் புரிந்து கொண்ட தனது வசந்தைப் பார்த்தவாறே தனக்குள் வளரும் குட்டி வசந்த்தை வருடியபடியே கண்கள் அயர்ந்தாள் வாசுகி...

தன்னிடம் சொல்லியதோடு வாசுகியின் பாரம் குறைந்து விட்டது. இரண்டு நாட்கள் முன் வாசுவை சாலையில் பார்த்த கோலம் ( குடியின் உச்சத்தில், நடக்க கூட தெம்பு இல்லாமல், தட்டித் தடுமாறி நடந்து கொண்டிருந்தவனை, வசந்த் தான் அவனது வீட்டில் டிராப் செய்து விட்டு வந்தான் ) கண் முன் விரிய, இதைப் பற்றி வாசுகியிடம் சொல்லலாமெனத் தான் வாசுவைப் பற்றிய பேச்சை எடுத்தான். ஆனால் வாசுகிக்குள் இருக்கும் குற்ற உணர்வில், தானும் இவ்விஷயத்தை சொல்லி அதிகப் படுத்த வேண்டாமென முடிவெடுத்தான். தனது தம்பி வயது உடைய வாசுவை நண்பனாக்கி அவனுக்குள் இருக்கும் வெறுமையை தன்னால் முடிந்த வரை சரி செய்யலாமென முடிவெடுத்து, "வாசுதேவன்" என்னும் பேரை முகனூலில் தேடிப் பிடித்து, அவனுடன் சினேகம் கொள்ளத் தயாரானான்...

***முற்றும்***

நன்றி,

நாணல்

1 comment:

Anonymous said...

ரொம்ப நல்லா இருக்கு.. கலக்கிட்டீங்க... - Sooriya Prakash Thangaswamy